மரணதண்டனையை எதிர்த்து குரல் எழுப்பும் ஐ.நா. அவையுடன், உலக நாடுகள், அதிகமதிகமாக இணைந்து வரும் இவ்வேளையில், திருப்பீடமும் மரண தண்டனையைக் குறித்து பல காலமாக எழுப்பிவரும் குரலை மீண்டும் ஒரு முறை எழுப்புகிறது என்று வத்திக்கான் உயர் அதிகாரி ஒருவர் கூறினார்.
“மரண தண்டனை: வறுமையும், சட்ட உரிமையும்” என்ற தலைப்பில் ஐ.நா.வின் தலைமையகத்தில், செப்டம்பர் 25, இச்செவ்வாயன்று நடைபெற்ற ஒரு கருத்தரங்கில், திருப்பீட பன்னாட்டு உறவுகள் துறையின் தலைமைச் செயலர், பேராயர் பால் ரிச்சர்ட் காலகர் அவர்கள் உரையாற்றுகையில் இவ்வாறு கூறினார்.
மரண தண்டனையை முற்றிலும் ஒழிப்பதற்கு, 20ம் நூற்றாண்டில் திருப்பீடம் பல முயற்சிகளை மேற்கொண்டதை இவ்வுலகம் அறியும் என்று கூறிய பேராயர் காலகர் அவர்கள், 21ம் நூற்றாண்டின் துவக்கத்திலிருந்து, மரண தண்டனைக்கு எதிராக திருப்பீடம் தன் முயற்சிகளை தீவிரப்படுத்தியுள்ளது என்று எடுத்துரைத்தார்.
தனி மனிதர் ஒவ்வொருவரும் மதிப்பிற்குரியவர், மற்றும், பொதுவான நன்மை ஆகியவற்றை, தன் இரு தூண்களாகக் கொண்டுள்ள திருப்பீடம், இதே அடிப்படையில், எந்தச் சூழலிலும் மரண தண்டனையை திருஅவை ஏற்றுக்கொள்ளாது என்பதை, தன் மறைக்கல்வி பாடமாக, அண்மையில் வழங்கியுள்ளது என்று, பேராயர் காலகர் அவர்கள், தன் உரையில் சுட்டிக்காட்டினார்.
தவறு செய்பவர் திருந்தி வாழ வழிவகுப்பது ஒன்றே, இவ்வுலகை, குற்றங்களிலிருந்து விடுவிக்கும் என்பதில், திருப்பீடம் நம்பிக்கை கொண்டுள்ளது என்று, பேராயர் காலகர் அவர்கள், ஐ.நா. அவையில் வழங்கிய உரையின் இறுதியில் கூறினார்.