இச்செவ்வாய் இரவு உரோம் நகரில் பெய்த மழை, இப்புதன் காலையும் தொடரலாம் என்ற அச்சுறுத்தலுடன், வானம் காலையில் மப்பும் மந்தாரமுமாகவே இருந்தது. ஆயினும், திருத்தந்தையின் புதன் மறைக்கல்விக்கான ஏற்பாடுகள் தூய பேதுரு வளாகத்திலேயே செய்யப்பட்டிருந்தன. மழை பெய்யாது என்ற அந்த ஏற்பாட்டாளர்களின் நம்பிக்கையை பொய்யாக்காமல், தட்ப வெப்ப நிலையும் உதவி, இதமாக இருக்க, திருத்தந்தை, பத்துகட்டளைகள் குறித்த தன் மறைக்கல்வித் தொடரை, அங்கு வளாகத்தில் குழுமியிருந்த ஆயிரக்கணக்கான மக்களுக்கு வழங்கினார்.
இறைவன் வழங்கிய 10 கட்டளைகள் குறித்த நம் தொடர் மறைக்கல்வி உரையில் இன்று நான்காவது கட்டளையான, ‘தாய், தந்தையை மதித்துப் பேணு’ என்பது குறித்து நோக்குவோம். இணைச்சட்ட நூலில், பத்து கட்டளைகள் பற்றி கூறும் 5ம் பிரிவில், ‘உன் தந்தையையும் தாயையும் மதித்து நட, இதனால் உன் கடவுளாகிய ஆண்டவர் உனக்கு அளிக்கும் நாட்டில் நீ நெடுநாள் நலமுடன் வாழ்வாய்’ (இணைச் சட்டம் 5.16) என்பதை வாசிக்கிறோம். அதாவது, இந்த சட்டத்தைத் தொடர்ந்து, நீண்ட மகிழ்ச்சியான வாழ்வு குறித்த வாக்குறுதி தரப்பட்டுள்ளதைக் காண்கிறோம். நம் பிற்கால வாழ்வு சிறப்பானதாக இருக்க, நாம் வளர்க்கப்படும் விதம் எத்தகைய முக்கியத்துவம் நிறைந்தது என்பதையும், எல்லா பெற்றோருமே குறைப்பாடற்றவர்கள் அல்ல என்பதையும் நாம் அறிவோம். தங்களுடைய பலவீனங்களுக்கு மத்தியிலும் நம்மை இவ்வுலகிற்கு கொணர்ந்து, நம்முடைய குழந்தை பருவ குறைபாடுகளையும் குடும்பச் சூழல்களையும் தாண்டி, நம்மை வளர்த்து ஆளாக்கிய நம் பெற்றோரை நாம் மதித்துப் பேண வேண்டும் என, இறைவன் வழங்கிய இந்த நான்காவது கட்டளை நம்மிடம் கேட்கிறது. தங்களுடைய துவக்ககால பருவத்தில் பல்வேறு துன்பங்களை அனுபவித்த புனிதர்களை நாம் நோக்கும்போது, எத்தனையோ கடந்த கால வேதனைகள் இருந்தாலும், இறைவனின் அருள் நமக்கு குணப்படுத்தலையும், நம் வாழ்வை மாற்றியமைத்து, நல்லதொரு வருங்காலத்தை கட்டியெழுப்புவதற்கான பலத்தையும் தருகிறது. நம் வாழ்விற்கென இறைவன் ஒரு திட்டத்தைக் கொண்டுள்ளார். நம் வானகத் தந்தையாம் அவர், தன் மகனின் மரணம் மற்றும் உயிர்ப்பின் வழியாக நாம் புதிதாகப் பிறக்கவும், வாழ்வை மிகுதியாக அனுபவிக்கவும் உரிய வாய்ப்பை வழங்குகிறார். இத்தகைய ஒளியில் நாம், நம் பெற்றோரை, அவர்கள் வழங்கிய வாழ்வுக்காக நன்றியுடன் பேணுவோம். நம் பெற்றோர் வழங்கிய இந்த வாழ்வு, இறைவனின் குழந்தைகள் என்ற மகிமை நிறைந்த சுதந்திரத்தில் தன் நிறைவைக் காண்கிறது
இவ்வாறு தன் புதன் மறைக்கல்வி உரையை வழங்கிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அங்கு குழுமியிருந்த அனைவருக்கும் தன் அப்போஸ்தலிக்க ஆசீரையும் அளித்தார்
திருத்தந்தையின் மறைக்கல்வியுரை : வாக்குறுதியை சுமந்து வரும் கட்டளை
September 19, 2018
One Min Read