ஜெரோம் லூயிஸ் – வத்திக்கான் செய்திகள்
வாழ்க்கைத் துணையின் மரணம் என்ற துயர நிகழ்வின் வழியே, இறைவன் வழங்கும் ஒரு குறிப்பிட்ட அழைத்தலை உணர்ந்து, ஆண்டவருக்கு இன்னும் உகந்த பணியாற்ற உங்களையே அர்ப்பணித்துள்ளீர்கள் என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தன்னைச் சந்திக்க வந்திருந்த கைம்பெண்கள் குழுவிடம் கூறினார்.
‘உயிர்ப்பின் நமதன்னை மற்றும் இறைவாக்கினர் அன்னா குழுமம்’ என்ற பெயருடன் பணியாற்றிவரும் அர்ப்பணிக்கப்பட்ட கைம்பெண்கள் அமைப்பைச் சார்ந்த 60க்கும் அதிகமானோரை, செப்டம்பர் 6, இவ்வியாழன் காலை, திருப்பீடத்தில் சந்தித்தத் திருத்தந்தை, கைம்பெண் என்ற நிலை, மிகக் கடினமானது என்றாலும், அந்நிலையை ஓர் அழைத்தலாக உணர்ந்துள்ள இக்குழுவினரை பாராட்டினார்.
கைம்பெண் என்ற நிலையில், தங்கள் வாழ்வை இறைவனுக்கு அர்ப்பணித்துள்ளவர்கள், மரணத்தையும் தாண்டி, இறைவனின் அன்பும், அவரது வாக்கு மாறா தன்மையும் நிலைத்திருக்கும் என்ற உண்மையை உலகிற்கு எடுத்துரைக்கின்றனர் என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் இக்குழுவினரிடம் கூறினார்.
அர்ப்பணிக்கப்பட்ட கைம்பெண்கள் குழுமத்தைச் சேர்ந்தவர்கள், தங்கள் குழுமங்களில் வாழும் எடுத்துக்காட்டான வாழ்வாலும், சமுதாயத்தில் நலிந்தோருக்கு செய்யும் பணிகளாலும், இறைவனின் அன்பை, ஒவ்வொரு மனிதருக்கும் கொண்டு வருவதற்காக, திருத்தந்தை தன் நன்றியைக் கூறினார்