கிறிஸ்து பிறப்பு விழாவிற்கான திருப்பலிகள்
ஆறாம் நூற்றாண்டு முதல் கிடைத்த பழங்கால உரோமைய சான்றுகளின்படி கிறிஸ்து பிறப்பு விழாவன்று ஒவ்வொரு குருவானவரும் மூன்று திருப்பலிகளை நிறைவேற்றலாம். இடைக்காலங்களில் இம்மூன்று திருப்பபலிகளை நிறைவேற்றும் முறையில் ஆழ்நிலை காட்சி தியான துறவிகள் இயேசுவின் பிறப்பு பற்றி முப்பரிமாண சிந்தனைகளை வழங்கினார்கள்.
முதலாவதாக, இயேசு கிறிஸ்து காலங்களுக்கெல்லாம் முன்பே விண்ணகத்தந்தையின் ஒரே பேரான மகனாக செனித்தவர் உண்டாக்கப்பட்டவர் அல்ல, இறைமகன் தந்தைக்கு சரி நிகரானவர் என்பதையும்; இரண்டாவதாக, கிறிஸ்து பிறப்பு விழா அன்று நாம் நினைவு கூறுகின்ற இயேசுவின் பிறப்பானது களங்கமில்லா எப்போதும் கன்னிகையான கன்னிமரியின் தாய்மையில் உருவான கருவில் வெளிப்படுகிறது என்பதையும்; மூன்றாவதாக, கடவுள் மெய்யாக ஆனால் ஒவ்வொரு உள்ளங்களிலும் ஆன்மீகப் பிறப்பாக ஒவ்வொரு நாளும் அருளின் மற்றும் அன்பின் வெளிப்பாடாக பிறக்கிறார் என்பதையும் அவர்கள் தங்கள் குறிப்புகளில் எழுதி வைத்துள்ளார்கள். இது ஒரு ஆன்மீக மற்றும் பக்தி சார்ந்த விளக்கமாக இருந்தாலும் அதுவே வரலாற்றில் இவ்வழக்கம் இருந்ததற்கு சான்றாக உள்ளது. மூன்று திருப்பலிகளை நிறைவேற்றும் இம்மரபினையே வத்திகான் சங்கத்தைத் தொடர்ந்து பல மாற்றங்களைப் பெற்று 1970 இல் வெளியிடப்பட்ட உரோமைய திருப்பலிபுத்தகமும் அதன்பின் வெளிவந்த அதன் திருத்திய மறுபதிப்புகளும் பின்பற்றுகின்றன. அதாவது, நள்ளிரவுத் திருப்பலி, விடியற்காலைத் திருப்பலி மற்றும் பகல் திருப்பலி ஆகியனவாகும் (வழிபாட்டு ஆண்டிற்கான பொதுவிதிமுறைகள் 34)
கிறிஸ்து பிறப்பு விழா கொண்டாட்டங்களைப் பற்றி தெரிந்து கொள்ள வேண்டுமென்றால் எருசலேம் கிறிஸ்தவர்களின் வழக்கத்தைக் கண்டிப்பாக ஆய்வு செய்திடல் வேண்டும். ஆண்டவரின் திருக்காட்சி விழாவிற்கு முன் உள்ள இரவில் எருசலேம் நகர கிறிஸ்தவர்கள் பெத்தலகேம் குகையின் மேல் பேரரசர் கான்ஸ்டன்டைன் அவர்களால் கட்டப்பட்ட ஆலயத்தில் திருப்பலியைக் கொண்டாடினார்கள். அதன்பின் அவர்கள் பவனியாக எருசலேமிற்குச் சென்று விடியற்காலையில் மற்றொரு திருப்பலியில் பங்கெடுப்பார்கள். இப்பவனியானது கிறிஸ்துவின் பிறப்பிற்கும் எருசலேமில் நிறைவேறிய அவரின் பரிகார பலிக்கும் இடையே உள்ள இணைப்பினை குறிப்பதாக அமைந்திருந்தது. மேலும், ஆறாம் நூற்றாண்டின் இடைப்பட்ட காலத்தில் பகல் நேரத்தில் மற்றொரு திருப்பலியானது சேர்க்கப்பட்டது. எருசலேமில் நடந்ததுபோலவே உரேமையிலும் இவ்வழக்கம் உருவானதைப் பற்றி இங்கு காண்போம். தொடக்கத்தில் காலைவேளையில் மட்டுமே உரோமையில் உள்ள புனித பேதுரு பேராலயத்தில் கிறிஸ்து பிறப்பு விழா திருப்பலியானது நிறைவேற்றப்பட்டது. எபேசு நகரத்தில் 431 ஆம் ஆண்டு கூடிய திருச்சங்கம் புனித மரியாள் இறைவனின் தாய் என்று அறிவித்தவுடன் மரியாளை போற்றும் வகையில் உரோமையில் புனித மரியாள் பேராலயம் எழுப்பப்பட்டது. இவ்வாலயத்தில் பெத்தலகேமில் உள்ளது போலவே இயேசு பிறந்த குடில் அமைக்க விருப்பம் எழுந்தது. எனவே, இயேசு பிறந்த பெத்தலகேம் குகையிலிருந்து கொண்டுவரப்பட்ட திருப்பொருளை வைக்கும் விதமாக பேராலயத்தில் பீடம் ஒன்று அமைக்கப்பட்டது. இவ்வாறு அமைக்கப்பட்ட பீடத்தில் பெத்தலகேமில் உள்ளதுபோல நள்ளிரவு திருப்பலி நிறைவேற்றும் வழக்கம் உடனடியாக அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த இண்டு திருப்பலிகளைத் தவிர மூன்றாவது திருப்பலியானது அனஸ்தாசியா ஆலயத்தில் நிறைவேற்றும் வழக்கம் ஆறாம் நூற்றாண்டில் தொடங்கியது. இப்புனிதர் பைசன்டைன் பகுதியிலிருந்து வந்து உரோமையில் குடியேறிய கிரேக்கர்களால் மிகவும் போற்றப்பட்டவர். உரோமை அரசானது தோற்கடிக்கப்பட்ட பிறகு பழைய அரச மாளிகையில் இருந்த பைசன்டைன் ஆட்சியாளர்களோடும் மக்களோடும் நல்லுறவு பேணும் விதமாக திருத்தந்தை மூன்றாவது திருப்பலியை இவ்வாலயத்தில் நிறைவேற்றினார்.