தவக் காலத்தின் முதல் வாரம்
வெள்ளிக்கிழமை
I எசேக்கியேல் 18: 21-28
திருப்பாடல் 130: 1-2, 3-4, 5-6a, 7-8 (3)
II மாற்கு 5: 20-26
“உங்கள் நெறி சிறந்திருக்கட்டும்”
நாம் வாழ விருப்பம் ஆண்டவர்
ஆண்டவராகிய கடவுளின் விருப்பம் யாவரும் வாழவேண்டும் என்பதுதானே அன்றி (1 திமொ 2:4) அழிந்து போக வேண்டும் என்பது அல்ல.
ஒருவர் வாழ வேண்டும் என்றால், அவர் தன்னுடைய தீய வழிகளை விட்டுவிட்டு மனம் மாறவேண்டும். அவ்வாறு அவர் மனம் மாறுகின்றபோது, இன்று நாம் பதிலுரைப்பாடலாகப் பாடக்கேட்ட திருப்பாடல் 130 இல் சொல்லப்படுவது போல, கடவுள் நம் குற்றங்களை மன்னிப்பார். அதே வேளையில் நல்லவர் ஒருவர் தன் வழியிலிருந்து விலகிப் பாவம் செய்தால், அவர் தண்டிக்கப்படுவார். ஏனெனில், அவர் அதற்கு முன்பாக வாழ்ந்த வாழ்க்கை போலியானது (1 யோவா 2:19). இதைப் பற்றி இன்றைய முதல் வாசகத்தில் நாம் வாசிக்கின்றோம்.
ஒருவர் வாழ்வடைய வேண்டும் என்றால், மறைநூல் அறிஞர்கள் மற்றும் பரிசேயர்களைப் போன்று வாழ்ந்துகொண்டிருக்கக் கூடாது, அவர்களின் நெறியை விடச் சிறந்ததாக இருக்க வேண்டும் என்று இன்றைய நற்செய்தியில் இயேசு கூறுகின்றார். பரிசேயர்களும், அவர்களைச் சேர்ந்தவர்களும் யாவற்றையும் மக்கள் பார்க்க வேண்டும் என்று செய்தார்கள்; மேம்போக்காகச் செய்தார்கள். அதனால்தான் அவர்களின் நெறியைவிட உங்களது நெறி சிறந்திருக்கக்கட்டும் என்று சொல்லிவிட்டு, இயேசு சினத்தைத் தவிர்த்து நல்லுறவோடு வாழ வேண்டும் என்ற அழைப்பினைத் தருகின்றார்.
பழைய ஏற்பாட்டுக் காலத்தில் கொலை பெரிய பாவமாகக் கருதப்பட்டது (விப 20:13). இயேசு ஒருபடி மேலே சென்று, கொலைக்குக் காரணமாக இருக்கும் சினத்தைத் தவிர்க்க வேண்டும் என்கிறார். அதைவிடவும் நல்லுறவே சிறந்தது என்கிறார்.
எனவே, நாம் உயர்ந்த நெறியாம் நல்லுறவோடு வாழ்ந்து, கடவுள் அருளும் ஆசியைப் பெறுவோம்.
சினம் கொடியது
பன்னிரண்டாம் நூற்றாண்டில் இங்கிலாந்தை ஆட்சி செய்தவர் இரண்டாம் ஹென்றி. தன்னுடைய நாட்டில் நடைபெற்ற உட்நாட்டுக் கலவரத்தை ஒடுக்கி, நாட்டைப் பல ஆண்டுகள் அமைதி வழி நடத்தியவர் இவர்.
இவருக்கும் காண்டர்பரி நகரின் ஆயராக இருந்த தாமஸ் பெக்கெட்டிற்கும் இடையே நல்ல நட்பு இருந்தது; ஆனால், திருஅவைதான் பெரியது என்று தாமஸ் பெக்கெட்டும், நாடுதான் பெரியது என்று இவரும் சொல்லி அடிக்கடி வாக்குவாதத்தில் ஈடுபட்டார்கள்.
ஒருநாள் இரண்டாம் ஹென்றி, தாமஸ் பெக்கெட் தனக்குப் பெரிய தொல்லையாக இருக்கின்றார் என்று தன்னுடைய பணியாளர்கள் நான்கு பேரை இரவோடு இரவாக அனுப்பி அவரைக் கொன்று போட்டார். பணியாளர்கள் தாமஸ் பெக்கெட்டைக் கொன்ற பின்தான் தெரிந்தது தான் மிகபெரிய தவறு செய்துவிட்டோம் என்று. எனவே, இவர் தன்னுடைய பாவத்திற்குக் கழுவாயாக இலண்டனிலிருந்து காண்டர்பரிக்கு நடந்தே சென்றார். இரண்டு இடங்களுக்கும் இடைப்பட்ட தூரம் ஐம்பது கிலோமீட்டர்.
தான் செய்த பாவத்திற்காக இரண்டாம் ஹென்றி மனம் மாறினாலும், அதனால் ஏற்பட்ட இழப்பு யாராலும் ஈடு செய்ய முடியாது. எனவே, நாம் சினத்தைத் தவிர்த்து நல்லுறவோடு வாழக் கற்றுக் கொள்வோம்.
ஆண்டவரின் வார்த்தை
“சினமுற்றாலும் பாவம் செய்யாதிருங்கள்; பொழுது சாய்வதற்குள் உங்கள் சினம் தணியட்டும்” (எபி 4: 26)
தீர்மானங்கள்
1) ஆண்டவரின் மன்னிப்பைப் பெற்ற நாம், அதை மற்றவருக்கும் வழங்குவோம்
2) வெறுப்பை வேரறுத்து அன்பை விதைப்போம்.
3) தீமையை விட்டுவிட்டு, நன்மை செய்யக் கற்றுக் கொள்வோம்.
பாளையங்கோட்டை மறைமாவட்டம்.
<img class="x16dsc37" role="presentation" src="data:;base64, ” width=”18″ height=”18″ />
<img class="x16dsc37" role="presentation" src="data:;base64, ” width=”18″ height=”18″ />
All reactions:
2525
Source: New feed