திருவருகைக் காலத்தின் முதலாம் வாரம்
சனிக்கிழமை
I எசாயா 30: 19-21, 23-26
II மத்தேயு 9: 35- 10: 1, 5a, 6-8
“அவர்கள் மேல் பரிவு கொண்டார்”
நாத்திகர்; ஆனால் பரிவுள்ளம் கொண்டவர்:
சில ஆண்டுகளுக்கு முன்பு, ‘Our Daily Bread’ என்ற ஆங்கில மாத இதழில் வந்த ஒரு நிகழ்வு.
ஒரு குடியிருப்பில் தனியாக வாழ்ந்து வந்த மூதாட்டி ஒருவர் திடீரெனப் நோய்வாய்ப்பட்டதையும், அவரிடம் மருந்து மாத்திரைகளை வாங்குவதற்குப் போதிய பணம் இல்லாததையும் அறிந்த அதே பகுதியைச் சேர்ந்த ஒரு மனிதர் அவரைத் தன்னுடைய வீட்டிற்கு அழைத்து வந்து, தன் தாயைப் போன்று கவனித்துக் கொண்டார். தவிர, அவர், அந்த மூதாட்டியை எப்போதெல்லாம் மருத்துவமனைக்கு அழைத்துக் கொண்டு போக வேண்டிய தேவை ஏற்பட்டதோ, அப்போதெல்லாம் அவரைத் தனது ஊர்தியில் வைத்து அழைத்துக் கொண்டு போய் உதவினார். இதனால் மூதாட்டி விரைவில் நலமடைந்தார்.
மூதாட்டி நோயிலிருந்து நலமடைந்திருந்தாலும், அவரால் முன்புபோல் வேலைக்குப் போக முடியாத சூழ்நிலை ஏற்பட்டதால், அவருடைய எல்லாத் தேவைகளையும் அந்த மனிதரே பார்த்துக்கொண்டார். இதில் வியப்புக்குரிய செய்தி என்னவென்றால், மூதாட்டிக்கு உதவிய அந்த மனிதர் ஒரு நாத்திகர் என்பதுதான்.
இதையெல்லாம் பார்த்துவிட்டு அதே குடியிருப்பில் இருந்த இரண்டு இறை நம்பிக்கையாளர்கள், “ஒரு நாத்திகரால் கைவிடப்பட்ட மூதாட்டியைக் கவனித்துக் கொள்ள முடியும்போது, கடவுள்மீது நம்பிக்கைகொண்டிருக்கும் நாம் ஏன் கைவிடப்பட்டவர்களைக் கவனித்துக் கொள்ளக்கூடாது?” என்று பேசி, அதன்படி செய்யத் தொடங்கினார்கள்.
கடவுள் நம்பிக்கை இல்லாதவரே கைவிட்டவர்மீது கருணையோடும் பரிவோடும் இருக்கும்போது, கடவுள்மீது நம்பிக்கை கொண்டவர்கள் அவ்வாறு இருப்பது அவசியம். ஏனெனில், கடவுள் பரிவு மிக்கவர். இதை இன்று நாம் வாசிக்கக்கேட்ட இறைவார்த்தை நமக்கு உணர்த்துகின்றது. நாம் அது பற்றிச் சிந்திப்போம்.
திருவிவிலியப் பின்னணி:
“கடவுள் தம் மனத்தை மாற்றிக்கொள்ள ஒரு மனிதப் பிறவியும் அல்லர்” – இது எண்ணிக்கை நூலில் இடம்பெறும் ஓர் இறைச் சொற்றொடர் ஆகும் (எண் 23: 19).
கடவுள் தன் மனத்தை மாற்றிக்கொள்வதில்லை என்று இறைவார்த்தை கூறும் பட்சத்தில், இன்றைய முதல் வாசகம், “நீங்கள் ஒருபோதும் அழமாட்டீர்கள்; அவர் உங்கள் மேல் திண்ணமாய் அருள்கூர்வார்” என்கிறது. யூதா நாட்டினர் உண்மைக் கடவுளை மறந்து வேற்று தெய்வங்களை வழிபட்டதால், கடவுளே அவரே வேற்றினத்தாரிடம் ஒப்புவித்தார். இதனால் அவர்கள் அன்னிய மண்ணில் அடைந்த வேதனைகள் சொல்லில் அடங்காதவை.
இந்நிலையில், கடவுளே தன் மனத்தை மாற்றிவிட்டு, அவர்களை எதிரிகளிடமிருந்து விடுவித்து, அவர்களது சொந்த நாட்டிற்கு அழைத்துக்கொண்டு வருகின்றார். இத்தகைய பின்னணியில் கடவுள் சொல்கின்ற வார்த்தைகள்தான், இன்றைய முதல் வாசகத்தில் இடம்பெறுகின்ற, “நீங்கள் இனி ஒருபோதும் அழமாட்டீர்கள். அவர் உங்கள் மேல் திண்ணமாய் அருள்கூர்வார்” என்ற வார்த்தைகள்.
இவ்வார்த்தைகளுக்கு அர்த்தம் தருவதாய் இருக்கின்றது இன்றைய நற்செய்தி வாசகம். நற்செய்தியில் இயேசு ஆயர் இல்லா ஆடுகளைப் போல் இருந்த மக்கள்மீது பரிவு கொள்கின்றார். தன்னைப் போன்று மக்கள்மீது பரிவுகொள்ள, அவர் திருத்தூதர்களைத் தேர்ந்தெடுக்கின்றார். ஒருவரின் துன்பத்தைத் தன்னுடைய துன்பமாகப் பார்ப்பதகுப் பெயர்தான் பரிவு. இயேசு மக்களின் துயரைத் தன்னுடைய துயராகப் பார்த்தார்.
அவரது பணி செய்ய அழைக்கப்பட்டிருக்கும் நாம் ஒவ்வொருவரும் அவரைப் போன்று பரிவோடு வாழ்வேண்டும். இதற்கு நாம் தயாரா? சிந்திப்போம்.
சிந்தனைக்கு:
கடவுளின் மக்கள் அவரைப் போன்று பரிவோடு வாழ வேண்டும்.
இயேசு திருத்தூதர்களைத் தேர்ந்துகொண்டதன் நோக்கமே, தன்னுடைய பணி தொடர்ந்து நடைபெற வேண்டும் என்பதற்காகத்தான்.
இவ்வுலகில் வறியோரும் எளியோரும் இருக்கும் வரைக்கும் நமது சேவை தொடர்ந்து கொண்ட இருக்கவேண்டும்.
இறைவாக்கு:
‘ஆண்டவர் இரக்கமும் அருளும் கொண்டவர்; நீடிய பொறுமையும் பேரன்பும் கொண்டவர்’ (திபா 103: என்பார் திருப்பாடல் ஆசிரியர். எனவே, இரக்கமும் பேரன்பும் கொண்ட ஆண்டவரைப் போன்று நாமும் வாழ்ந்து, இறையருளை நிறைவாகப் பெறுவோம்.
Source: New feed