பல பெண்களும் அவரோடு இருந்தார்கள். இவர்கள் தங்கள் உடைமைகளைக் கொண்டு அவருக்குப் பணிவிடை செய்துவந்தார்கள்.
✠ லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 8: 1-3
அக்காலத்தில்
இயேசு நகர் நகராய், ஊர் ஊராய்ச் சென்று இறையாட்சி பற்றிய நற்செய்தியைப் பறைசாற்றி வந்தார். பன்னிருவரும் அவருடன் இருந்தனர். பொல்லாத ஆவிகளினின்றும் நோய்களினின்றும் குணமான பெண்கள் சிலரும், ஏழு பேய்கள் நீங்கப்பெற்ற மகதலா மரியாவும் ஏரோதுவின் மாளிகை மேற்பார்வையாளர் கூசாவின் மனைவி யோவன்னாவும் சூசன்னாவும் மேலும் பல பெண்களும் அவரோடு இருந்தார்கள். இவர்கள் தங்கள் உடைமைகளைக் கொண்டு அவருக்குப் பணிவிடை செய்து வந்தார்கள்.
ஆண்டவரின் அருள்வாக்கு.
————————————————————–
இயேசுவின் பெண் சீடர்கள்
பொதுக் காலத்தின் இருபத்து நான்காம் வாரம் வெள்ளிக்கிழமை
I 1 கொரிந்தியர் 15: 12-20
II லூக்கா 8: 1-3
இயேசுவின் பெண் சீடர்கள்
மறைப்பனிக்கு சிறு உதவி:
கடவுள்மீது மிகுந்த நம்பிக்கை கொண்ட கிறிஸ்டோபர் ஒருநாள் மாலை வேளையில், குடும்பத்தோடு கடவுளிடம் வேண்டும்போது, உலங்கெங்கும் மறைப்பணி செய்துகொண்டிருக்கின்ற மறைப்பணியாளர்களின் தேவைகள் சந்திக்கப்பட வேண்டும் என உருக்கமாக வேண்டினார்.
அவர் கடவுளிடம் வேண்டி முடித்துவிட்டு, சாப்பிடச் செல்லும்போது, அவரது மகன் அன்பு அவரிடம் வந்தான். “அப்பா! எனக்குக் கொஞ்சம் பணம் தரமுடியுமா?” என்று கேட்டான் அவன். “எதற்காக?” என்று கிறிஸ்டோபர் ஆர்வமாய்க் கேட்டபோது, அவரது மகன் அன்பு, “அப்பா! நீங்கள் சிறிதுநேரத்திற்கு, உலகெங்கும் மறைப்பணியாற்றிக் கொண்டிருக்கும் மறைப்பணியாளர்களின் தேவைகள் சந்திக்கப்படும் என்று வேண்டினீர்கள் அல்லவா! அதற்கு என்னால் இயன்ற உதவியைச் செய்யத்தான்!” என்றான். இதைக் கேட்டுக் கிறிஸ்டோபர் நெகிழ்ந்து போனார்.
மறைப்பணிக்குத் தன்னால் இயன்ற உதவியைச் செய்ய வேண்டும் என்ற சிறுவன் அன்புவின் ஆர்வம் உண்மையில் நம்மை வியக்க வைக்கின்றது. இன்றைய நற்செய்தியில் இயேசுவின் பெண் சீடர்கள் தங்களுடைய உடைமையைக் கொண்டு அவருக்குப் பணிவிடை செய்தார்கள் என்று வாசிக்கின்றோம். அது குறித்து நாம் சிந்திப்போம்.
திருவிவிலியப் பின்னணி:
பொதுவாக யூத இரபிகளுக்குப் பெண் சீடர்கள் கிடையாது; ஆனால், இயேசுவுக்குப் பெண் சீடர்கள் இருந்தார்கள் இவர்களெல்லாம் ஏதோவொரு வகையில் இயேசுவிடமிருந்து பயன்பெற்றிருந்தார்கள், அல்லது நலமடைந்திருந்தார்கள். அதற்கு நன்றியாக அவர்கள் தங்கள் உடைமைகளைக் கொண்டு, அவருக்குப் பணிவிடை செய்தார்கள்.
இயேசுவுக்குப் பெண் சீடர்கள் இருந்ததும், அவர்கள் அவருக்குத் தங்கள் உடைமைகளைக் கொண்டு பணிவிடை புரிந்ததும் நமக்கு மூன்று முதன்மையான உண்மைகளை உணர்ந்துகின்றன. முதலாவதாக, இறையாட்சிப் பணியில் ஆண், பெண் பாகுபாடு கிடையாது; அங்கே எல்லாருக்கும் இடமுண்டு. இரண்டாவதாக, இயேசுவிடமிருந்து ஒருவர் பலனடைந்திருந்தால், அதற்கு அவர் இயேசுவின் பெண் சீடர்களைப் போன்று நன்றியுள்ளவர்களாக இருக்கவேண்டும்.
மூன்றாவதாக, இறையாட்சிப் பணி என்பது ஒரு கூட்டு முயற்சி. அதற்கு எல்லாருடைய ஒத்துழைப்பும் தேவை. சிலர் பணம் தரலாம்; அதைத் தர இயலாதவர்கள் தங்கள் உடல் உழைப்பைத் தரலாம். அதைவிடவும், அவர்கள் இறைப்பணிக்காகத் தங்களையே தரலாம். முதல் வாசகத்தில் பவுல் உயிர்த்த ஆண்டவரைப் பற்றி நற்செய்தி அறிவித்தது பற்றிக் கூறுகின்றார். அவரைப் போன்று நாம் ஒவ்வொருவரும் உயிர்த்த ஆண்டவரைப் பற்றிய நற்செய்தியை அறிவிக்கவேண்டும். அவ்வாறு நற்செய்தி அறிவிக்க முடியாதவர்கள், நற்செய்தி அறிவிக்கின்றவர்களுக்கு உறுதுணையாக இருக்க வேண்டும். அது மிகவும் முக்கியம்.
சிந்தனைக்கு:
ஊர் ஊராகச் சென்று நற்செய்தி அறிவிக்க முடியாவிட்டால், இருக்கும் இடத்தில் நற்செய்தியாக வாழலாம்.
கடவுளின் வார்த்தையை அவரை அறியாதவர்களுக்கு அறிவிப்பது திருமுழுக்குப் பெற்ற ஒவ்வொருவருடைய கடமை.
ஆண்டவருக்குக் கொடுப்போருக்கு, ஆண்டவர் மிகுதியாகக் கொடுப்பார்.
இறைவாக்கு:
‘முக மலர்ச்சியோடு கொடுப்பவரே கடவுளின் அன்புக்கு உரியவர்’ (2 கொரி 9:7) என்பார் புனித பவுல். எனவே, நாம் கடவுளின் பணிக்கென முக மலர்ச்சியோடு கொடுத்து, இறையருளை நிறைவாகப் பெறுவோம்.
Source: New feed