உக்ரைனின் Kremenchuk விற்பனை மையத்தை தாக்கியது போன்ற மனிதத்தன்மையற்ற தாக்குதல்களால் தொடர்ந்து தாக்கப்பட்டு வரும் உக்ரைனை ஒவ்வொரு நாளும் நான் என் இதயத்தில் சுமக்கிறேன் என்று கூறியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
ஜூன் 29, இப்புதனன்று சிறப்பிக்கப்பட்ட, உரோம் நகரின் பாதுகாவலர்களான திருத்தூதர்கள் பேதுரு, மற்றும், பவுல் பெருவிழாவை முன்னிட்டு, வத்திக்கானின் புனித பேதுரு வளாகத்தில் கூடியிருந்த மக்களுக்கு நண்பகல் மூவேளை செப உரையாற்றிய திருத்தந்தை அதன் இறுதியில் இவ்வாறு கூறியுள்ளார்.
இந்த அறிவற்றத்தனமான போர் விரைவில் முடிவுக்கு வர வேண்டும் என்று தான் இறைவேண்டல் செய்வதாகவும் கூறியுள்ள திருத்தந்தை பிரான்சிஸ், மேலும், மனிதர்கள் கைக்கள்ள விரும்பாத உரையாடலின் பாதைகளை இறைவன் திறக்கட்டும்! என்றும் தெரிவித்துள்ளார்.
நிகழ்ந்துகொண்டிருக்கும் இத்தகைய மனிதத்தன்மையற்ற போர், படைப்பின் பாதுகாப்பைப் பற்றி நம்மை சிந்திக்கத் தூண்ட வேண்டும் என்றும், இப்புவியைக் காக்கவேண்டியது நம் ஒவ்வொருவரின் பொறுப்பாகும் என்றும் எடுத்துரைத்த திருத்தந்தை, பூமியின் எதிர்காலம் நம் கைகளிலும், நாம் எடுக்கும் தீர்மானங்களிலும் உள்ளது! என்றும் கூறியுள்ளார்.