கடைப்பிடித்துக் கற்பிக்கிறவரோ விண்ணரசில் பெரியவர்.
✠ மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 5: 17-19
அக்காலத்தில்
இயேசு தம் சீடரை நோக்கிக் கூறியது: “திருச்சட்டத்தையோ இறைவாக்குகளையோ நான் அழிக்க வந்தேன் என நீங்கள் எண்ண வேண்டாம்; அவற்றை அழிப்பதற்கல்ல, நிறைவேற்றுவதற்கே வந்தேன். விண்ணும் மண்ணும் ஒழிந்து போகுமுன் திருச்சட்டம் யாவும் நிறைவேறும். அதன் ஒரு சிற்றெழுத்தோ ஒரு புள்ளியோ ஒழியாது என உறுதியாக உங்களுக்குச் சொல்லுகிறேன்.
எனவே, இக்கட்டளைகளில் மிகச் சிறியது ஒன்றையேனும் மீறி அவ்வாறே மக்களுக்கும் கற்பிக்கிறவர் விண்ணரசில் மிகச் சிறியவர் எனக் கருதப்படுவார். இவை அனைத்தையும் கடைப்பிடித்துக் கற்பிக்கிறவரோ விண்ணரசில் பெரியவர் எனக் கருதப்படுவார்.”
ஆண்டவரின் அருள்வாக்கு.
—————————————————————
“இஸ்ரயேலரே! கேளுங்கள்!”
தவக் காலத்தின் மூன்றாம் வாரம் புதன்கிழமை
I இணைச்சட்டம் 4: 1, 5-9
II மத்தேயு 5: 17-19
“இஸ்ரயேலரே! கேளுங்கள்!”
இப்படியும் ஒரு மனநல மருத்துவர்:
ஒரு கல்லூரியில் ஒன்றாகப் படித்த மாணவர்கள் இருபது ஆண்டுகள் கழித்து ஓரிடத்தில் ஒன்று கூடினார்கள்.
அப்போது தொழிலதிபராக இருந்த ஒருவர் மனநல மருத்துவராக இருந்த ஒருவரிடம், “இருபது ஆண்டுகளுக்கு முன்பு நீ எப்படி இருந்தாயோ, அப்படியே இளமையாக இருக்கின்றாய்! மனநல மருத்துவரான நீ, நாள் முழுவதும் உன்னிடம் வரும் மன நோயாளர்கள் சொல்வதைக் கேட்டுக் கேட்டு உனது முகத்தில் சுருக்கங்கள் விழுந்திருக்கும் என்றல்லவா நினைத்தேன்! மாறாக, நீ அப்படியே இருப்பது வியப்பாக இருக்கின்றது” என்றார்.
அதற்கு மனநல மருத்துவர் அவரிடம், “நான் என்ன என்னிடம் வரும் நோயாளர்கள் சொல்வதை அப்படியே கேட்டுக் கொண்டிருப்பேன் என்றா நினைக்கிறாய்! அதெல்லாம் சும்மா!” என்று சிரித்துக் கொண்டே சொன்னார்.
மனநல மருத்துவர்கள் தங்களிடம் வரும் நோயாளர்கள் பேசுவதைக் கேட்க வேண்டும் அல்லது செவிமடுக்க வேண்டும். அவர்களே தங்களிடம் வரும் நோயாளர்களுக்குச் செவிமடுக்கவில்லை என்றால் என்ன செய்வது? இன்றைய இறைவார்த்தை கடவுளுக்கு நாம் செவிமடுத்து வாழ வேண்டும் என்ற சிந்தனையைத் தருகின்றது. அது குறித்து நாம் சிந்திப்போம்.
திருவிவிலியப் பின்னணி:
இணைச்சட்ட நூலிலிருந்து எடுக்கப்பட்ட இன்றைய முதல் வாசகம், மோசே இஸ்ரயேல் மக்களிடம் அறிவுரை கூறுவதாக இருக்கின்றது. எதைப் பற்றிய அறிவுரை எனில், இஸ்ரயேல் மக்கள் ஆண்டவருடைய திருச்சட்டத்திற்குச் செவிமடுத்து, அதைக் கடைப்பிடித்து வாழ்வது பற்றிய அறிவுரை.
இஸ்ரயேல் மக்கள் ஆண்டவருடைய கட்டளைகளையும் அவரது ஒழுங்குமுறைகளையும் கடைப்பிடித்து வாழும்போது, அவர்கள் மற்ற மக்கள் இனத்தவரை விடத் தூய மக்களினமாகவும், கடவுளின் ஆசியைப் பெற்ற மக்களினமாகவும் இருப்பார்கள் என்கிறார் மோசே. இஸ்ரயேல் மக்கள் ஆண்டவருக்குச் செவிமடுத்து, அவரது திருச்சட்டத்தின் படி நடக்கவில்லை. அதனால் அவர்கள் அழிவுக்கு மேல் அழிவினைச் சந்தித்தார்கள்.
நற்செய்தியில் இயேசு திருச்சட்டத்தை அழிக்க அல்ல, மாறாக அதை நிறைவேற்ற வந்தேன் என்று சொல்லிவிட்டு, திருச்சட்டத்தைக் கடைப்பிடித்துக் கற்பிப்போர் விண்ணரசில் பெரியவர் என்கிறார். கடவுளின் கட்டளைகளைக் கடைப்பிடித்துக் கற்பிப்பதில் இயேசுதான் நமக்கு முன்னோடி, எடுத்துகாட்டு எல்லாம். அதனால் நாம் அவருடைய வழியில் நடந்து, விண்ணரசில் பெரியவர்கள் ஆவோம்.
சிந்தனைக்கு:
நமக்குக் கிடைக்கும் ஆசிக்கும் தண்டனைக்கும் நாமே காரணம்!
கடவுளின் கட்டளைகளைக் கடைப்பிடிப்போரிடம் கடவுளின் அன்பு குடிகொள்கிறது.
கடவுளுக்கு நாம் செவிமடுப்பது எவ்வளவு முக்கியமோ, அவ்வளவு முக்கியம் வறியோரின் குரலுக்குச் செவி மடுப்பது.
இறைவாக்கு:
‘இன்று நீங்கள் ஆண்டவரது குரலுக்குச் செவிகொடுத்தால் எத்துணை நலம்!’ (திபா 95:7) என்பார் திருப்பாடல் ஆசிரியர். எனவே, நாம் ஆண்டவரின் குரலுக்குச் செவிசாய்த்து, அவர் வழி நடந்து, இறையருளை நிறைவாகப் பெறுவோம்
Source: New feed