கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான்
தீமைகளின் முன்னால் நம் பலவீனத்தை நாம் உணரும்போது, கடவுள் ஏன் அத்தீமைகளை அனுமதித்தார், அவர் ஏன் நமக்கு உதவத் தலையிடவில்லை என்ற கேள்வி பலரில் எழும்புகிறது என்ற கருத்தை மையமாக வைத்து ஞாயிறு நண்பகல் மூவேளை செபவுரையை வழங்கினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
பலி செலுத்திக் கொண்டிருந்த கலிலேயரைப் பிலாத்து கொன்றதையும், சீலோவாமிலே கோபுரம் விழுந்து பதினெட்டுப்பேர் உயிரிழந்ததையும் குறித்து மார்ச் 20, நற்செய்தி வாசகத்தில் கூறப்பட்டுள்ளது குறித்து, வத்திக்கான் புனித பேதுரு பெருங்கோவில் வளாகத்தில் குழுமியிருந்த மக்களுக்கு நண்பகல் மூவேளை செப உரை வழங்கிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், உலகில் இடம்பெறும் போர்களும், பெரும் நோய்களும் நம் பாவங்களுக்காக கடவுள் அனுப்பியவை அல்ல, நம் துன்பங்களுக்கும் இழப்புகளுக்கும் இறைவனை குறை சொல்வதையே வழக்கமாகக் கொண்டிருக்கிறோம் என உரைத்தார்.
தீமைகள் நம்மை அழுத்தும்போது, நம் தெளிவான பார்வையை இழந்து, அத்தீமைகளுக்கு ஓர் எளிதான விடையைக் கண்டுபிடித்து இறைவனை அத்தீமைக்கு குற்றம் சாட்டுவதையே கைக்கொள்கிறோம் என்ற திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், கடவுள் நம்மீது எதையும் திணிப்பதில்லை, மாறாக, நமக்கு நல்லவற்றை பரிந்துரைப்பதோடு நமக்காக அவர் துன்பங்களைச் சுமக்கிறார் எனவும் எடுத்துரைத்தார்.
நற்செய்தி வாசகம் எடுத்துரைப்பதுபோல், பிலாத்துவால் கொல்லப்பட்டவர்களும், கோபுரம் இடிந்து விழுந்ததால் உயிரிழந்தவர்களும் அவர்களின் பாவங்களுக்காக இறைத்தண்டனைப் பெற்றவர்கள் அல்ல என்பதையும் சுட்டிக்காட்டிய திருத்தந்தை, கடவுள் நம் பாவங்களைப்பொறுத்து அல்ல (தி.பா.103:10), மாறாக, தன்னுடைய இரக்கத்தின் அளவுகோலைக் கைக்கொண்டு நம்மை வழிநடத்துகிறார் என்றார்.
உலகின் தீமைகளுக்காக இறைவனை குறை சொல்வதை விடுத்து, நம் சுயநலன்களும், தவறான வன்முறைத் தேர்வுகளும் எவ்வளவு தூரம் நம் உறவுகளைப் பாதிக்கின்றன என்பது குறித்து ஆழமாகச் சிந்திப்போம் என்ற அழைப்பையும் விடுத்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.
இன்றைய உலகின் தீமைகளுக்குச் சரியான தீர்வாக மனமாற்றத்தை முன்வைத்த திருத்தந்தை, அன்பும் உடன்பிறந்த உணர்வும் ஆட்சி செய்யும் இடத்தில் தீமை வல்லமையிழந்துவிடும் என்பதை மனதில் கொண்டவர்களாக, குறிப்பாக, இந்த தவக்காலத்தில் தீமைகளையும் பாவத்தையும் விட்டு விலகிவர உறுதியெடுப்போம் என்ற அழைப்பையும் முன்வைத்தார்.
ஞாயிறு நற்செய்தியில் இயேசு எடுத்துரைத்த காய்க்காத அத்திமர உவமை குறித்தும் சுட்டிக்காட்டி, பலன்தராத மரங்கள் உடனே வெட்டியெறியப்படுவதில்லை, மாறாக இன்னுமோர் ஆண்டு காலம் கொடுக்கப்படுகிறது என்பதையும் நினைவூட்டிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், நம்மீது நம்பிக்கைகொண்டு, பொறுமையுடன் நம்மோடு நடந்துவரும் இயேசுவின் துணையோடு மனம் திரும்பி, நம்மை மாற்றியமைப்போம் என்ற விண்ணப்பத்தையயும் விடுத்து தன் நண்பகல் மூவேளை செபவுரையை நிறைவுசெய்தார்.
Source: New feed