இம்மாதம் 18ம் தேதி முதல், 25ம் தேதி முடிய, இணையம் வழியாக, கிறிஸ்தவ உலகத்தில் கடைப்பிடிக்கப்படும் 54வது கிறிஸ்தவ ஒன்றிப்பு செப வாரத்தில், அனைவரும் பங்கேற்குமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
சனவரி 18, வருகிற திங்களன்று தொடங்கும் கிறிஸ்தவ ஒன்றிப்பு செப வாரத்தில், சபைகளுக்கு இடையே ஒப்புரவும், ஒன்றிப்பும் நிலவ கிறிஸ்தவர்கள் அனைவரும் செபிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
“என் அன்பில் நிலைத்திருங்கள், மற்றும், நீங்கள் மிகுந்த கனிதரும்பொருட்டு” (யோவா. 15: 5-9) என்ற தலைப்பில், 54வது கிறிஸ்தவ ஒன்றிப்பு செப வாரம் சிறப்பிக்கப்படுகின்றது.
திருஅவை, மனிதக் குடும்பம், மற்றும், படைப்பு ஆகிய அனைத்திற்குள்ளும், ஒப்புரவும், ஒன்றிப்பும் நிலவ, உலக கிறிஸ்தவ சமுதாயம் இறைவேண்டல் எழுப்பவும், அதற்காக உழைக்கவும் அழைக்கப்பட்டுள்ளது என்பதை, இவ்வாண்டு செப வாரத்தின் தலைப்பு நினைவுறுத்துகின்றது.
எட்டு நாள்கள் கொண்ட இந்த செப வாரத்தில், “எல்லாரும் ஒன்றாய் இருப்பார்களாக” (யோவா.17:21) என்று, இறுதி இரவு உணவின்போது நம் ஆண்டவர் எழுப்பிய வேண்டல் நிறைவேறுவதற்கு, கிறிஸ்தவர்கள் செபித்து வருகின்றனர்.
மேலும், 54வது கிறிஸ்தவ ஒன்றிப்பு வாரம் நிறைவுறும் நாளான சனவரி 25, திங்கள் மாலை 5.30 மணிக்கு, புனித பவுல் பெருங்கோவிலில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், திருப்புகழ் மாலை வழிபாட்டினை முன்னின்று நடத்துவார். அன்றைய நாள், திருத்தூதரான புனித பவுல் மனமாற்றம் அடைந்த திருநாளாகும்.
Source: New feed