திருஅவைக்குத் தேவையான மாற்றமும், மறுமலர்ச்சியும் இளையோராகிய உங்கள் கரங்களில் உள்ளன; உங்களை நாங்கள் நம்புகிறோம் என்று பானமா பேராயர் ஹோஸே தொமிங்கோ உல்லோவா மெந்தியெத்தா (José Domingo Ulloa Mendieta) அவர்கள், இச்செவ்வாயன்று வழங்கிய மறையுரையில் கூறினார்.
“நான் ஆண்டவரின் அடிமை; உம்சொற்படியே எனக்கு நிகழட்டும்” (லூக்கா 1:38) என்ற விருதுவாக்குடன், சனவரி 22, இச்செவ்வாய் மாலை துவங்கிய 34வது உலக இளையோர் நாள் நிகழ்வுகளின் துவக்கத் திருப்பலியை தலைமையேற்று நடத்திய பேராயர் மெந்தியெத்தா அவர்கள், இளையோர் மீது திருஅவை மிகுந்த நம்பிக்கையும் எதிர்பார்ப்பும் கொண்டுள்ளது என்பதை தன் மறையுரையில் வலியுறுத்தினார்.
இளையோருக்கு வழிநடத்துதல் தேவை என்பதை தன் மறையுரையில் சுட்டிக்காட்டிய பேராயர் மெந்தியெத்தா அவர்கள், தங்கள் சொற்களால் அல்ல, வாழ்வால் வழிகாட்டுபவர்களை இளையோர் விரும்புகின்றனர், அவர்களைப் பின்பற்றுகின்றனர் என்று எடுத்துரைத்தார்.
இளையோர் நாள் நிகழ்வுகளில் பங்கேற்க சனவரி 23, இப்புதன் காலை உரோம் நகரைவிட்டு கிளம்பிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், மாலை, பானமா நகரின் உள்ளூர் நேரம் 4.30 மணியளவில் அந்நகரைச் சென்றடைகிறார்.
சனவரி 24 வியாழன் முதல், 27 ஞாயிறு முடிய நடைபெறும் பல்வேறு நிகழ்வுகளில், 25ம் தேதி, வெள்ளி மாலை, திருத்தந்தையின் தலைமையில் நடைபெறும் சிலுவைப்பாதை, 26ம் தேதி, சனிக்கிழமை மாலை நடைபெறும் திருவிழிப்பு வழிபாடு, மற்றும், 27ம் தேதி, ஞாயிறு காலை நடைபெறும் இறுதித் திருப்பலி ஆகியவை, முக்கியமான நிகழ்வுகளாகும்.
Source: New feed