53வது உலக திருநற்கருணை மாநாடு, 2024ம் ஆண்டில் ஈக்குவதோர் நாட்டில் நடைபெறுவதற்கு, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஒப்புதல் அளித்துள்ளார் என்று, உலக திருநற்கருணை மாநாடுகள் பாப்பிறை அமைப்பு, மார்ச் 20, இச்சனிக்கிழமையன்று அறிவித்துள்ளது.
தென் அமெரிக்க நாடான ஈக்குவதோர், இயேசுவின் திருஇதயத்திற்கு அர்ப்பணிக்கப்பட்டதன் 150ம் ஆண்டு நிறைவைமுன்னிட்டு, அந்நாட்டின் தலைநகர் Quito உயர்மறைமாவட்டத்தில், 2024ம் ஆண்டில், 53வது உலக திருநற்கருணை மாநாடு நடைபெறுவதற்கு திருத்தந்தை இசைவு தெரிவித்துள்ளார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இலத்தீன் அமெரிக்க கண்டத்தில் கிறிஸ்தவ நம்பிக்கையின் புதுப்பித்தலையும், நற்செய்தி அறிவிப்புப்பணிக்கு, திருநற்கருணையால் கிடைக்கும் பலனையும், திருஅவையின் இந்த மாபெரும் நிகழ்வு வெளிப்படுத்தும் என்றும், அந்த அமைப்பு அறிவித்துள்ளது.
1874ம் ஆண்டு மார்ச் மாதம் 25ம் தேதி, அச்சமயத்தில் Quito பேராயராகப் பணியாற்றிய Jose Ignacio Checa y Moreno அவர்களும், அரசுத்தலைவர் Gabriel Garcia அவர்களும் இணைந்து, ஈக்குவதோர் நாட்டை, இயேசுவின் திருஇதயத்திற்கு அர்ப்பணித்தனர். இதன் வழியாக, உலகில் இயேசுவின் திருஇதயத்திற்கு அர்ப்பணிக்கப்பட்ட முதல் நாடு என்ற பெருமையையும், ஈக்குவதோர் நாடு பெற்றது.
19ம் நூற்றாண்டில் இந்நாட்டின் அரசுத்லைவராகப் பணியாற்றும், ஓர் உண்மையான கத்தோலிக்க அரசுத்தலைவரால் இந்நாடு, இயேசுவின் திருஇதயத்திற்கு அர்ப்பணிக்கப்படும் என்று, இதற்கு 274 ஆண்டுகளுக்கு முன்பாகவே, நல்ல வெற்றி அன்னை மரியா முன்னறிவித்திருந்தார் என்று சொல்லப்படுகிறது.
புடாபெஸ்ட் உலக திருநற்கருணை மாநாடு
இதற்கிடையே, வருகிற செப்டம்பர் 5ம் தேதி முதல், 12ம் தேதி வரை ஹங்கேரி நாட்டின் புடாபெஸ்ட் நகரில் நடைபெறவிருக்கும், 52வது உலக திருநற்கருணை மாநாட்டிற்கு, தயாரிப்புக்கள் இடம்பெற்றுவருகின்றன என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த 52வது உலக திருநற்கருணை மாநாட்டின் நிறைவு திருப்பலியை நிறைவேற்ற, ஹங்கேரிக்கு, தான் செல்லவிருப்பதாக, ஈராக் திருத்தூதுப் பயணத்தை முடித்து திரும்பிய விமானப் பயணத்தில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது
Source: New feed