இத்தாலி நாட்டின் மோன்சா என்ற நகரில், 2006ம் ஆண்டில் இறைபதம் சேர்ந்த 15 வயது நிரம்பிய, வளர்இளம்பருவ Carlo Acutis என்பவர், அக்டோபர் 10, இச்சனிக்கிழமையன்று, அசிசி நகரில் நிறைவேற்றப்படும் திருப்பலியில் அருளாளராக அறிவிக்கப்படுகிறார்.
மில்லென்ய தலைமுறையைச் சார்ந்த சிறுவன் கார்லோ அவர்கள், இரத்த புற்றுநோயால் தாக்கப்பட்டு, அதில் அடைந்த வேதனைகளை திருஅவை மற்றும், திருத்தந்தைக்காக அர்ப்பணித்தவர்.
தன்னடக்கம், உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்தும் திறன் போன்ற பண்புகளில் சிறந்திருந்த கார்லோ அவர்கள், திருநற்கருணை மீது கொண்டிருந்த அளவற்ற பக்தியும், விண்ணகம் பற்றிக் கொண்டிருந்த உயர்வான பார்வையும், அவரது அன்னையின் மனமாற்றத்திற்கு உதவியுள்ளன.
தன் வாழ்வில் மூன்று முறைகள் மட்டுமே திருப்பலியில் பங்குகொண்டிருந்த அவரது அன்னை, தனது மகன் இயேசு மீது கொண்டிருந்த பேரன்பினால் மனமாற்றம் அடைந்து, மகன் கேட்கும் கேள்விகளுக்குப் பதில் சொல்லவேண்டும் என்ற ஆர்வத்தால், இறையியல் படிப்பையும் தொடர்ந்துள்ளார்.
எப்போதும் புன்னகையுடன் காணப்பட்ட கார்லோ அவர்கள், கால்பந்து, வீடியோ விளையாட்டுகள் போன்றவற்றில் ஆர்வம் கொண்டிருந்ததோடு, தன் சகமாணவர்கள் மற்றும், ஆசிரியர்களுடன் நகைச்சுவையாகப் பேசி அனைவரையும் மகிழ்வித்து வாழ்ந்தவர்.
சிறுவன் கார்லோ அவர்களுக்கு 11 வயது நடந்தபோது, வரலாற்றில் நடைபெற்றுள்ள திருநற்கருணை புதுமைகள் பற்றி ஆராயத் தொடங்கினார். கணனியில் தானே ஓர் இணைய பக்கத்தை ஆரம்பித்து, அந்த வரலாறு பற்றி ஆராய்ந்தார். அந்த ஆய்வை, உலக அளவில் பத்தாயிரத்திற்கு அதிகமான பங்குத்தளங்கள் பார்ப்பதற்கும் அவர் உதவியுள்ளார்
Source: New feed