2022ம் ஆண்டு ஜூன் மாதத்தில், உரோம் மாநகரில், நடைபெறவிருக்கும் குடும்பங்களின் பத்தாவது உலக மாநாட்டின் சிறப்பு அம்சத்தை, காணொளிச் செய்தி ஒன்றின் வழியாக, ஜூலை 02, இவ்வெள்ளியன்று அறிமுகம் செய்துவைத்தார், திருத்தந்தை பிரான்சிஸ்.
கடந்தகாலத்தில் நடைபெற்ற, குடும்பங்களின் உலக மாநாடுகளில், பல குடும்பங்கள் வீடுகளில் இருந்துகொண்டே தொலைக்காட்சி வழியாக பங்குபெற்றன, மற்றும் பெரும்பாலான குடும்பங்கள், இந்த மாநாடுபற்றி அறியாமலே இருந்தன என்று குறிப்பிட்டுள்ள திருத்தந்தை, குடும்பங்களின் பத்தாவது உலக மாநாடு, வித்தியாசமான முறையில் நடைபெறும் என்று கூறியுள்ளார்.
அனைத்துக் குடும்பங்களையும், இந்த உலகளாவிய நிகழ்வில் ஈடுபடுத்தும் முறையில் குடும்பங்களின் பத்தாவது உலக மாநாட்டு நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்படுகின்றன என்றும், இதன் வழியாக, அனைத்துக் குடும்பங்களும், தாங்கள் திருஅவை குழுமத்தின் ஓர் அங்கம் என்பதை உணர்வார்கள் என்றும், திருத்தந்தை கூறியுள்ளார்.
இந்த பத்தாவது மாநாடு உரோம் மாநகரில் இடம்பெற்றாலும், அந்நாள்களில் நடைபெறும், குடும்பங்கள் விழா, மேய்ப்புப்பணி கூட்டம், மற்றும், திருப்பலி ஆகியவற்றின் நேரடி ஒளி-ஒலிக்காட்சிகள் வழியாக, உலகெங்கும் அனைத்துக் குடும்பங்களும் அவற்றில் பங்குபெறலாம், அதற்கு ஒவ்வொரு மறைமாவட்டமும் உதவவேண்டும் எனவும், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளார்.
இக்காரணத்திற்காக, அனைத்துக் கண்டங்களிலுள்ள மறைமாவட்டங்கள், இம்மாநாட்டின் தலைப்பை மையப்படுத்திய திட்டங்களை வகுக்கவும், உரோம் மறைமாவட்டம் தயாரிக்கும் அடையாளங்களைப் பயன்படுத்தவும், உரோம் மாநகரில் நடைபெறும் நிகழ்வில் உயிரூட்டமுடன் குடும்பங்கள் பங்கெடுக்க உதவவும் வேண்டும் என்று திருத்தந்தை வலியுறுத்திக் கூறியுள்ளார்.
தம்பதியர், குடும்பங்கள் மற்றும், மேய்ப்பர்கள் ஆகியோர், குடும்ப மேய்ப்புப்பணிக்கு ஆர்வத்தோடு தங்களை அர்ப்பணிக்க, இது சிறந்தொரு வாய்ப்பு என்று குறிப்பிட்டுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அனைத்துக் கண்டங்களிலுள்ள அனைத்து மறைமாவட்டங்கள், மற்றும், பங்குத்தளங்களின் மேய்ப்பர்கள், குடும்பங்களின் சந்திப்புக்கள் நடைபெற ஒத்துழைக்குமாறு அழைப்பு விடுத்துள்ளதோடு, அவர்களை ஊக்கப்படுத்தியுள்ளார்.
குடும்பங்களின் பத்தாவது உலக மாநாடு, “குடும்ப அன்பு: தூயவாழ்வுக்கு ஓர் அழைப்பு மற்றும் ஒரு வழி” என்ற தலைப்பில், 2022ம் ஆண்டு ஜூன் மாதம் 22ம் தேதி முதல், 26ம் தேதி வரை நடைபெறும்.
குடும்பங்கள் உலக மாநாடு
1994ம் ஆண்டை, ஐக்கிய நாடுகள் நிறுவனம் உலக குடும்ப ஆண்டாக அறிவித்து சிறப்பித்தபோது, திருத்தந்தை புனித இரண்டாம் யோவான் பவுல் அவர்கள், திருஅவையில் குடும்பங்கள் உலக மாநாட்டை உருவாக்கினார். அதே ஆண்டு அக்டோபர் 8, 9 ஆகிய தேதிகளில், திருஅவை, உரோம் மாநகரில் குடும்பங்கள் முதல் உலக மாநாட்டை நடத்தியது. இந்த மாநாடு, மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை, உலகின் பல்வேறு பகுதிகளில் சிறப்பிக்கப்பட்டுவருகிறது.
Source: New feed