வாழ்வை தேர்ந்து கொள்வோம் என்ற தலைப்பில் உரோம் நகரில் ஜூன் 22, சனிக்கிழமையன்று நடத்தப்படும் வாழ்வுக்கு ஆதரவான தேசிய ஊர்வலத்திற்கு வாழ்த்துச் செய்தி ஒன்றை அனுப்பியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
கருவில் உருவானது முதல் இயற்கை மரணம் வரை உயிர்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என்ற அர்ப்பணத்துடன் வெளிப்படையாக சாட்சியம் வழங்கும் இந்த குழுவிற்கு நன்றியை வெளியிடுவதாக தன் செய்தியில் தெரிவித்துள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், மனித வாழ்வைப் பாதுகாப்பதில் எவ்வித விட்டுக் கொடுத்தலும் இடம்பெறக் கூடாது எனவும், எவ்வித எதிர்ப்பு வந்தாலும் மனித மாண்பை காப்பதில் துணிவுடன் செயல்படவேண்டும் எனவும் அதில் ஊக்கமளித்துள்ளார்.
வாழ்வு மற்றும் அதனை வரவேற்கும் குடும்பத்தின் அழகிற்கு சான்று பகர்பவர்களாக, போர், அடிமைத்தனம் மற்றும் மக்களை வியாபாரப் பொருட்களாக கடத்தும் நிலைகளால் பாதிக்கப்பட்டுள்ள மக்களை நினைவில் கொண்டவர்களாக, கருவில் வளரும் குழந்தை முதல் துயருறும் முதியோர் வரை பலவீனமானவர்களை பயனற்றது என தூக்கியெறியும் மனநிலையை வெறுத்து ஒதுக்குவோம் எனவும் தன் செய்தியில் குறிப்பிட்டுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
இச்சனிக்கிழமையன்று உரோம் நகரில் நடத்தப்பட்ட வாழ்வுக்கு ஆதரவான தேசிய ஊர்வலத்தில் பல ஆயிரக்கணக்கான குடும்பங்கள் கலந்து கொண்டன.