திருக்காட்சிக்குப் பின்வரும் வாரம் திங்கட்கிழமை
1 1 யோவான் 3: 22-4:6
II மத்தேயு 4: 12-17, 23-25
மனம்மாறிக் கடவுளின் கட்டளைகளைக் கடைபிடிப்போம்
அருள்பணியாளரின் போதனையைக் கேட்டு மனம்மாறியவர்:
ஒருநாள் காலைவேளையில், கையில் விலையுயர்ந்த கைக்கடிகாரத்தை வைத்துக்கொண்டு பெரியவரைச் சந்தித்த இளைஞன் ஒருவன், “இந்தக் கைக்கடிகாரத்தை உங்களுக்கு நினைவிருக்கின்றதா?” என்றான். “இது என்னுடைய கைக்கடிகாரம். இது திருடுபோய் ஐந்தாறு மாதங்கள் ஆகின்றன. அது சரி, இந்தக் கைக்கடிகாரம் உனக்கு எப்படி உனக்குக் கிடைத்தது?” என்று பெரியவர் இளைஞனைப் பார்த்துக் கேட்டபொழுது, அவன் அவரிடம், “இதை நான்தான் உங்களிடமிருந்து திருடினேன். அதனால் உங்களிடம் கொடுக்கின்றேன்” என்றான். “என்னிடமிருந்து நீதான் இந்தக் கைக்கடிகாரத்தை திருடினாய் எனில், இத்தனை நாள்களும் இதைத் திருப்பித்தராமல், இப்பொழுது ஏன் திருப்பித் தருகின்றாய்?” என்று பெரியவர் சற்றுக் குரலை உயர்த்திக் கேட்டதற்கு இளைஞன் மிகவும் பொறுமையாக, “இன்று காலையில்தான் ‘பிறருடைய பொருளைத் திருடுவது மிகப்பெரிய குற்றம்’ என்று திருப்பலியில் அருள்பணியாளர் ஒருவர் சொல்லக்கேட்டேன். அதனால்தான் இப்பொழுது உங்களுடைய கைகடிகாரத்தைத் தருகின்றேன்” என்றான்.
பெரியவரின் கைக்கடிகாரத்தைத் திருடியது மிகப்பெரிய குற்றம் என்பதை உணர்ந்ததும், இளைஞன் அதைத் திருப்பிக் கொடுத்துவிட்டு, மனமாற்றத்திற்கு மிகப்பெரிய எடுத்துக்காட்டானான். இன்றைய இறைவார்த்தை வழியாக மனம்மாற அழைக்கும் இயேசுவின் வார்த்தைக்குச் செவிகொடுப்போம்.
திருவிவிலியப் பின்னணி
மக்களை மனமாற்றத்திற்கு அழைத்த திருமுழுக்கு யோவான் கைதுசெய்யப்பட்டதும் இயேசு, “மனம் மாறுங்கள், ஏனெனில் விண்ணரசு நெருங்கி வந்தது” என்று பறைசாற்றத் தொடங்குகின்றார். இதன்மூலம் இயேசு இறைப்பணி தொடர்ந்து நடைபெறச் செய்கிறார். மேலும் இயேசு மனம்மாறுங்கள் என்று சொல்வது, பாவத்தை விட்டுவிட்டுவது மட்டும் கிடையாது. இன்றைய முதல் வாசகத்தில் திருத்தூதர் யோவான் சொல்வதுபோல், கடவுளின் கட்டளைகளைக் கடைப்பிடித்து, அவருக்கு உகந்தவற்றைச் செய்வது.
சிந்தனைக்கு:
“நீங்கள் மனம்மாறியவர்கள் என்பதை அதற்கேற்ற செயல்களால் காட்டுங்கள் (மத் 3: 8) என்ற திருமுழுக்கு யோவானின் வார்த்தைகளுக்கு ஏற்ப நம்முடைய மனமாற்றம் செயலில் வெளிப்படுகின்றதா?
மனம்மாறிக் கடவுளின் கட்டளைகளைக் கடைப்போர் எதைக் கேட்டாலும் பெற்றுக்கொள்வோர் என்பது முதல் வாசகத்தில் யோவான் தரும் நம்பிக்கைச் செய்தி.
நாம் மனம்மாறிக் கடவுளின் கட்டளைகளைக் கடைப்பிடிக்கின்றோமா? சிந்திப்போம்.
ஆன்றோர் வாக்கு
“தீக்குள் விழுந்துவிட்ட குழந்தையை அதை தாய் விரைந்து காப்பாற்றுவதை விடவும், கடவுள் குற்றத்தை உணர்ந்த ஒரு பாவியை விரைந்து மன்னிக்கிறார்’ என்பார் புனித ஜான் மரிய வியான்னி. எனவே, பாவிகளை விரைந்து மன்னிக்கும் கடவுளிடம் மனம்மாறி, அவருடைய கட்டளையைக் கடைப்பிடித்து வாழ்வோம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.
Source: New feed