பொதுக்காலம் பதின்மூன்றாம் வாரம்
சனிக்கிழமை
I தொடக்க நூல் 27: 1-5, 9-10, 15-29
II மத்தேயு 9: 14-17
“புதிய தோற்பை”
பழையன கழிதலும் புதிய புகுதலும்:
ஒரு நகரில் பெரிய தொழிலதிபர் ஒருவர் இருந்தார். அவர் தன்னுடைய தொழிற்சாலையில் உற்பத்தியாகும் பொருள்களைக் குறிப்பிட்ட காலத்திற்கு எங்குப் பத்திரப்படுத்தி வைப்பது என்ற யோசனையோடு பல இடங்களைத் தேடி அலைந்தார். இந்நிலையில் பண்டக சாலை (Warehouse) ஒன்று அவருடைய கண்ணில்பட்டது. உடனே அவர் அதன் உரிமையாளரிடம், தான் உற்பத்தி செய்யும் பொருள்களைச் சிலகாலத்திற்குப் பத்திரப்படுத்தி வைப்பதைக் குறித்துப் பேசினார். இதைக் கேட்டதும், பண்டக சாலையின் உரிமையாளர் அவரிடம், “ஐயா! என்னுடைய இந்தப் பண்டக சாலை சில மாதங்களாகவே பயன்பாட்டில் இல்லாமல் இருக்கின்றது. அதனால் ஒரு வார காலம் எனக்கு அவகாசம் கொடுங்கள். நான் இங்கு உடைந்துபோயிருக்கும் சன்னல்கள், கதவுகளைச் சீரமைத்துவிட்டுத் தருகின்றேன்” என்றார்.
இதற்குத் தொழிலதிபர் பண்டகசாலையின் உரிமையாளரிடம், “ஐயா! நீங்கள் உங்களுடைய பண்டக சாலையைச் சரிசெய்து தரவேண்டும் என்று நான் கேட்கவில்லை. இந்தப் பண்டகசாலை இருக்கும் இடத்தையே தரவேண்டும் என்று கேட்கிறேன். ஒருவேளை நீங்கள் இந்த இடத்தை எனக்குத் தந்தால், இதில் நான் புதிதாக ஒரு பண்டக சாலையைக் கட்டிக்கொள்வேன். ஏனெனில், பண்டகசாலையைச் சீரமைப்பதை விடவும், புதிதாக கட்டுவது சிறந்தது” என்றார். இதன்பின் பண்டக சாலையின் உரிமையாளர் தொழிலதிபர் தன்னிடம் கேட்டுக்கொண்டதற்கு ஏற்ப அந்த இடத்தை அவருக்குக் கொடுத்தார்.
ஆம், இந்த நிகழ்வில் வருகின்ற தொழிலதிபர் எப்படிப் பண்டகசாலையைச் சீரமைத்துக் கொண்டிருக்காமல், புதிதாகக் கட்டினாரோ, அப்படி இயேசுவும் பழைய, பரிசேயச் சட்டங்களை, கட்டளைகளைச் சீரமைத்துக் கொண்டிருக்காமல், புதிய கட்டளைகளைக் கொண்டுவந்தார். அதைப்பற்றி எடுத்துச் சொல்லும் இன்றைய நற்செய்தி வாசகத்தைக் குறித்து நாம் சிந்திப்போம்.
திருவிவிலியப் பின்னணி:
நற்செய்தியில் நோன்பு பற்றிய கேள்வி எழுகின்றபொழுது, இயேசு மணமகன், புதிய ஆடை, புதிய திராட்சை மது, புதிய தோற்பை ஆகிய உருவகங்களைப் பயன்படுத்துகின்றார். பரிசேயர்கள் பின்பற்றி வந்த சட்டங்களை பழைய ஆடை, பழைய திராட்சை மது, பழைய தோற்பை ஆகியவற்றோடு ஒப்பிடும் இயேசு, தன்னுடைய போதனையை, கட்டளையை புதிய ஆடை, புதிய திராட்சை மது, புதிய தோற்பையோடு ஒப்பிடுகின்றார். பழயவற்றோடு புதியவற்றை சேர்க்கின்றபொழுது பாதிப்பு மிகுதியாகும் என்பதால் இயேசு, புதிய மதுவைப் புதிய தோற்பைகளில்தான் ஊற்று வைக்கவேண்டும் என்கிறார்.
புனித பவுல் பழைய சட்டங்களையும், இயேசு கொண்டு வந்த புதிய சட்டங்களையும் குறித்துப் பேசுகின்றபொழுது, “இவை எல்லாம் வர இருந்தவற்றின் நிழலே. கிறிஸ்துவே உண்மை” (கொலோ 2: 17) என்பார். மேலும் அவர், “ஒருவர் கிறிஸ்துவோடு ஒன்றித்திருக்கும்போது அவர் புதிதாகப் படைக்கப்பட்டவராய் இருக்கிறார்” (2 கொரி 5: 17) என்பார். ஆதலால், பாரம்பரியம், மூதாதையர் மரபு என்று அறிவுக்கு ஒவ்வாததைத் தூக்கிப் பிடிக்காமல், இயேசு கொண்டுவந்த அன்புக் கட்டளையைக் கடைப்பிடித்து, புதுப்படைப்பாக வாழ்வோம்.
சிந்தனைக்கு:
ஒருவர் மற்றவரிடம் அன்பு செலுத்துங்கள் என்னும் புதிய கட்டளையை நான் உங்களுக்குக் கொடுக்கிறேன் (யோவா 13: 34).
ஆண்டவரே புதிய அடையாளங்களை வழங்கும்; வியத்தகு செயல்களை நிகழ்த்தும் (சீஞா 36: 5)
மாற்றம் ஒன்றே மாறாது என்பதால், மாற்றங்களை ஏற்கப் பழகுவோம்.
இறைவார்த்தை:
‘அன்பே திருச்சட்டத்தின் நிறைவு’ (உரோ 13: 10) என்பார் புனித பவுல். ஆகையால், நாம் அறிவுக்கு ஒவ்வாத மரபுகளைத் தூக்கிப் பிடிக்காமல் அன்பை நமது வாழ்வில் கடைப்பிடித்து, இறையருளை நிறைவாகப் பெறுவோம்.
Source: New feed