
பொதுக்காலம் இரண்டாம் வாரம் சனிக்கிழமை
I எபிரேயர் 9: 2-3, 11-14
II மாற்கு 3: 20-21
“அவர் மதிமயங்கி இருக்கிறார்”
விமர்சனங்களைத் திறந்த மனத்தோடு ஏற்றுக்கொண்ட ஜார்ஜ் வொயிட்ஃபீல்டு:
பதினெட்டாம் நூற்றாண்டில் இங்கிலாந்தில் பிறந்த மிகப்பெரிய மறைப்போதகர் ஜார்ஜ் வொயிட்ஃபீல்டு (1714-1770). இவருடைய போதனையைக் கேட்கப் பலரும் பல இடங்களிலிருந்தும் வந்துபோனார்கள். இதனால் இவருக்கு மக்கள் நடுவில் மிகுந்த செல்வாக்கு இருந்தது.
இது பிடிக்காத ஒருசிலர் இவருக்கு ‘மொட்டைக் கடிதங்கள்’ எழுதி இவரைக் கடுமையாக விமர்சித்தார்கள். தொடக்கத்தில் இந்த மொட்டைக் கடிதங்களால் இவர் மிகுந்த மன உளைச்சலுக்கு உள்ளானார். பின்னர்தான் இவர் தனக்கு வரும் விமர்சனக் கடிதங்களை நேர்மையோடும் திறந்தமனத்தோடும் எதிர்கொள்வதுதான் சிறந்தது என்று முடிவுசெய்தார். அதன்படி இவர் தனக்கு வந்த விமர்சனக் கடிதங்களுக்கு கீழ்கண்டவாறு பதில் எழுதி அனுப்பி வைத்தார்: “அன்பரே! உங்களுடைய விமர்சனத்திற்கு நன்றி. எனக்காக நேரம் ஒதுக்கிக் கடிதம் எழுதும் உங்களுக்கு ஒன்றைச் சொல்லிக்கொள்ள விழைகின்றேன். அது என்னவெனில், நீங்கள் என்னைப் பற்றி அறிந்திருப்பதை விடவும், மிகவும் மோசமாகவே என்னைப் பற்றி எனக்குத் தெரியும். இப்படிக்கு கிறிஸ்துவில் அன்புள்ள ஜார்ஜ் வொயிட்ஃபீல்டு.” ஜார்ஜ் வொயிட்ஃபீல்டு இவ்வாறு தனக்கு வந்த விமர்சனக் கடிதங்களுக்குப் பதில் கடிதம் எழுதத் தொடங்கியதிலிருந்து, இவருக்கு வந்த விமர்சனக் கடிதங்கள் நின்று போயின..
நமக்கு எதிராக வருகின்ற விமர்சனங்களைக் கண்டு அஞ்சிடாமல், துணிவோடு எதிர்கொள்ளவேண்டும். அதைத்தான் இந்த நிகழ்வும் இன்றைய இறைவார்த்தையும் எடுத்துக்கூறுகின்றன.
திருவிவிலியப் பின்னணி:
இயேசு கிறிஸ்து இறையாட்சிப் பணியை ஓய்வின்றிச் செய்து வந்தார். எந்தளவுக்கு என்றால், உண்பதற்குக்கூட அவருக்கு நேரம் கிடைக்கவில்லை. இப்படிப் பணிசெய்து வந்த இயேசுவின்மீது மக்கள் வைத்த விமர்சனம், “மதிமயங்கி இருக்கின்றார்” என்பதாகும். இயேசு சாதாரணமானவர் அல்லர். அவர் இன்றைய முதல் வாசகத்தில் நாம் படிப்பது போல், ‘தம்மையே கடவுளுக்கு மாசற்ற பலியாகக் கொடுத்தவர்”; பாவம் செய்யாதவர் (எபி 4: 15). அப்படிப்பட்டவரையே மக்கள் ‘அவர் மதிமயங்கி இருக்கிறார்’ என்று விமர்சனம் செய்தார்கள். எனில், நம்மையும் மக்கள் விமர்சிப்பார்கள். அதலால், நாம் இயேசுவைப் போன்று விமர்சனங்களைத் துணிவோடு எதிர்கொள்ளத் தயாராக இருக்கவேண்டும்.
சிந்தனைக்கு:
நீங்கள் உங்கள் மேல் சுமத்தப்படும் விமர்சனங்களால் முடங்கிப்போய்விடக் கூடியவர்களா? அல்லது அவற்றைத் துணிவோடு எதிர்கொள்ளக்கூடியவர்களா?
தங்கள் மேல் வீசப்படும் விமர்சனம் என்ற கற்களைக் கொண்டே வீடுகட்டி மேலே வருபவர்தான் உண்மையான சாதனையாளர்கள்.
‘தயங்கியவர் கை தட்டுகிறார், துணிந்தவர் கைதட்டல் பெறுகிறார்’ – பிடல் காஸ்ட்ரோ
இறைவாக்கு
‘பிறர் உங்களை விட மதிப்புக்கு உரியவரென எண்ணுங்கள்’ (உரோ 12: 10) என்பார் புனித பவுல். எனவே, நாம் மற்றவர்களை இழிவாக எண்ணாமல், மதிப்புக்குரியவர்களென எண்ணி வாழ்ந்து, இறையருளை நிறைவாகப் பெறுவோம்.
Source: New feed