திருக்காட்சிக்குப் பின்வரும் வாரம் புதன்கிழமை
I 1 யோவான் 4: 11-18
II மாற்கு 6: 45-52
“அஞ்சவேண்டாம்”
இயேசுவில் நம்பிக்கைகொள்வோர் அஞ்சுவதில்லை
‘Fear’ என்ற நூலில் அதன் ஆசிரியர் ஜான் ராத்போன் ஆலிவர் (John Rathbone Oliver), பிரபல மருத்துவர் ஒருவரைப் பற்றிக் குறிப்பிடுகின்றார்.
இந்த மருத்துவரிடம் நோயாளர் ஒருவர் சிகிச்சை பெற்றுவந்தார். நன்றாக இருந்த அந்த நோயாளர், ‘தனக்கு ஏதாவது ஆகிவிடுவோ?’ என்று அஞ்சியதால், அவருடைய உடல்நலம் மோசமானது. எப்படியோ அவருக்குச் சிகிச்சை அளித்து, அவரது உயிரைக் காப்பாற்றிய மருத்துவர், அவர் முழுமையாக நலமடைந்ததும் அவரிடம் இவ்வாறு சொன்னார்: “என்னுடைய இத்தனை ஆண்டுகால அனுபவத்தில் கிறிஸ்தவ மதத்தைச் சார்ந்த யாரும் சாவுக்கு அஞ்சியதாகத் தெரியவில்லை. கிறிஸ்தவ மதம் மனிதரால் ஏற்படுத்தப்பட்ட ஒன்று அல்ல, அது கடவுளும் மனிதருமான இயேசு கிறிஸ்துவால் ஏற்படுத்தப்பட்டது. இயேசு கிறிஸ்து இரண்டாம் ஆண்டுகளுக்கு முன்பாக வாழ்ந்து இறந்துபோனவர் அல்லர்; அவர் இன்றைக்கும் வாழ்ந்துகொண்டிருப்பவர். அப்படிப்பட்ட இயேசு கிறிஸ்துவில் கிறிஸ்தவர்கள் நம்பிக்கை கொண்டு, அவர் வழியில் நடப்பதால்தான் அவர்கள் அஞ்சாமல் இருக்கின்றார்” என்றார்.
ஆம். கிறிஸ்துவில் ஆழமான நம்பிக்கை கொண்டவர்கள் அஞ்சுவதில்லை
திருவிவிலியப் பின்னணி:
ஐயாயிரம் பேருக்கு உணவளித்தல் என்ற மாபெரும் வல்ல செயலைச் செய்தபின் இயேசு தன் சீடர்களை அக்கறைக்கு அனுப்பிவிட்டு, இறைவனிடம் வேண்டுவதற்கு மலைக்குச் செல்கின்றார். ஆனாலும், தன்னுடைய சீடர்கள்மீது மிகவும் அக்கறைகொண்ட இயேசு, அவர்கள் எதிர்காற்று அடித்ததால் தண்டு வலிக்கப் பெரிதும் வருந்தியதை அறிந்து, அவர்களுக்கு உதவக் கடல்மீது நடந்து சென்று, “அஞ்சாதீர்கள்” என்கின்றார்.
இயேசு தன் சீடர்களிடம் மிகுந்த அன்புகொண்டிருந்தால்தான், அவர்களுக்கு உதவ விரைந்தார். சீடர்களோ இயேசுவைப் பேய் என நினைத்து அஞ்சுவது, சீடர்களுக்கு இயேசுவின்மேல் அன்பு இல்லையோ என எண்ணத் தோன்றுகின்றது. முதல் வாசகத்தில் யோவான் கூறுவதுபோல், அன்பில் அச்சத்திற்கு இடமிருக்காது. நாம் இயேசுவின்மீது ஆழமான நம்பிக்கை கொண்டு வாழ்ந்து, அச்சத்தைத் தவிர்ப்போம்.
சிந்தனைக்கு
அன்பில் அச்சத்திற்கு இடமில்லை எனில், நாம் அடிக்கடி அஞ்சுவதால், கிறிஸ்துவின்மீது நாம் கொண்டிருக்கும் அன்பு எந்த நிலையில் இருக்கின்றது என்று சோதனைக்கு உட்படுத்தவேண்டும்.
“இதோ! உலக முடிவுவரை எந்நாளும் நான் உங்களுடன் இருக்கின்றேன்” (மத் 28: 20) என்ற இயேசுவில் ஆழமான நம்பிக்கை கொண்டிருக்கின்றோமா?
அச்சம் தவிர்த்து, நம்பிக்கை கொள்வோம்
ஆன்றோர் வாக்கு
‘கிறிஸ்தவர்கள் தங்கள் வாழ்வில் பிரச்சனைகளை எதிர்கொள்ளும்பொழுது, அஞ்சி நடுங்காமல், எப்பொழுதும் கடவுளில் நம்பிக்கை வைத்து வாழ வேண்டும். ஏனெனில், அவர் நமக்கு உதவி செய்வதற்குத் தவறமாட்டார்’ என்பார் திருத்தந்தை பிரான்சிஸ். எனவே, நாம் நமக்கு எப்பொழுதும் உதவி செய்ய வரும், ஆண்டவரில் நம்பிக்கை வைத்து, அச்சத்தைத் தவிர்ப்போம். இறையருளை நிறைவாகப் பெறுவோம்.
Source: New feed