பொதுக் காலத்தின் இருபத்து ஆறாம் வாரம்
சனிக்கிழமை
I யோபு 42: 1-3, 5-6, 12-17
II லூக்கா 10: 17-24
“மகிழ வேண்டாம்; மகிழுங்கள்”
ஆணவம் முன்னே; அழிவு பின்னே:
கோரலால் என்றொரு சிற்பக் கலைஞர் இருந்தார். அவர் மிக அற்புதமாக சிற்பங்களை செய்து வந்தார். அதனாலேயே அவருடைய உள்ளத்தில் சிற்பக் கலையில் தன்னை மிஞ்சுவதற்கு ஆளே இல்லை என்ற ஆணவம் ஏற்பட்டது. ஒருநாள் அவருக்கு ஒரு கனவு வந்தது. அந்தக் கனவில் இன்னும் பதினைந்து நாள்களுக்குப் பிறகு அவருடைய உயிரைச் சாத்தான் வந்து பறித்துக்கொண்டு போவதாகத் தெரிந்தது. ‘என்ன செய்வது?’ என்று குழம்பித் தவித்த கோரலால் தன்னைப் போன்று ஒன்பது சிற்பங்களை அந்தப் பதினைந்து நாள்களுக்குள் செய்து முடித்தார்.
பதினைந்தாம் நாளில் கோரலால், தான் செய்து வைத்திருந்த ஒன்பது சிற்பங்களோடு சிற்பமாக நின்றுகொண்டார். அவரது உயிரைப் பறிக்க வந்த சாத்தான் பத்துப் பேர் இருப்பதைக் கண்டு, ‘இதில் யார் உண்மையான கோரலால் என்று தெரியவில்லையே!’ என்று குழம்பித் தவித்தது. பின்னர் அது ஏதோ சிந்தனையில் ஆழ்ந்ததாய், “கோரலால்! இந்தப் பத்துச் சிற்பங்களில் ஒன்றில் குறையிருக்கின்றது?” என்று சொல்லிவிட்டு அமைதியாக இருந்தது. “என்னுடைய சிற்பத்தில் குறையா? எங்கே?” என்று சொல்லிக்கொண்டு சாத்தான் முன்பு கோரலால் வந்தபோது, சாத்தான், “இதோ இங்கே!” என்று சொல்லிச் சாத்தான் அவருடைய உயிரைப் பறித்தது.
ஒருவரிடம் இருக்கும் தான் என்ற ஆணவம் எப்படி அவருக்கு அழிவினைத் தருகின்றது என்ற செய்தியை இந்தக் கதையானது நமக்கு உணர்த்துகின்றது. இன்றைய இறைவார்த்தையும் நமக்கு இதே செய்தியைத் தருகின்றது. அது குறித்து நாம் சிந்திப்போம்.
திருவிவிலியப் பின்னணி:
பணித்தளங்களுக்கு அனுப்பப்பட்ட இயேசுவின் எழுபத்து இரண்டு சீடர்கள் அவரிடம் திரும்பி வருவதைப் பற்றி இன்றைய நற்செய்தி வாசகத்தில் நாம் வாசிக்கின்றோம். அவ்வாறு வருபவர்களிடம் அவர், “மகிழ வேண்டாம்… மகிழுங்கள்” என்கிறார்.
எதற்காகச் சீடர்கள் “மகிழவேண்டாம்” என்று இயேசு கூறுகின்றார் எனில், தீய ஆவிகள் அவர்களுக்கு அடிபணிகின்றன என்பதற்காக! ஏனெனில், தீய ஆவிகள் இயேசுவின் வல்லமையால்தான் அவர்களுக்கு அடிபணிகின்றனவே அன்றி, அவர்களுடைய சொந்த வல்லமையால் அல்ல, அதனால் அவர்கள் அதை நினைத்து மகிழ வேண்டாம் என்று இயேசு கூறுகின்றார். இன்றைய முதல் வாசகத்தில் யோபு, “நீர் அனைத்தையும் ஆற்ற வல்லவர்” என்கிறார். ஆண்டவரால்தான் அனைத்தையும் ஆற்ற முடியும். நாமெல்லாம் அவரது கருவிகள் என்ற புரிதல் நமக்கு இருந்தால் நாம் ஆணவம் கொள்ளமாட்டோம்.
எதற்காக மகிழவேண்டாம் என்று சொன்ன இயேசு, தொடர்ந்து தம் சீடரிடம், “உங்கள் பெயர்கள் விண்ணகத்தில் எழுதப்பட்டிருக்கின்றன என்பது பற்றியே மகிழுங்கள்” என்கிறார். விண்ணகத்தில் ஒருவர் பெயர் எழுதப்பட்டிருப்பது என்பது மிகப்பெரிய ஆசி. இத்தகைய ஆசி, ஆண்டவர்மீது நம்பிக்கை வைத்தவர்களுக்கே உண்டு. நம்பிக்கை இல்லாதவர்களுக்கு அத்தகைய ஆசி இல்லை (எரே 17: 13),
ஆதலால், நாம் ஆண்டவரே எல்லாம் வல்லவர் என்பதை உணர்ந்து, அவர்மீது நம்பிக்கை வைத்து, மிகத் தாழ்ச்சியோடு வாழ்ந்து, யோபுவைப் போன்று இரு மடங்கு ஆசி பெறுவோம்.
சிந்தனைக்கு:
கடவுளின் கையில் நாம் ஓர் எழுதுகோல் என்பதை உணர்வது ஞானம்.
கடவுளுக்கு முன்பாகத் தாழ்த்துவோர் கடவுளால் உயர்த்தப்படுவர்.
நமக்கு விண்ணகமே தாய் என்பதை உணர்வோம்.
இறைவாக்கு:
‘முதலில் வருவது இறுமாப்பு; அதனை அடுத்து வருவது அழிவு’ (நீமொ 18: 12) என்கிறது நீதிமொழிகள் நூல். எனவே, நாம் இறுமாப்பைத் தவிர்த்து, இறைப்பற்றுடன் வாழ்ந்து, இறையருளை நிறைவாகப் பெறுவோம்
Source: New feed