மழலையர்பள்ளி ஒன்றில் குழந்தைகள் அனைவரும் மிக மும்முரமாக வரைந்துகொண்டிருந்தனர். ஒவ்வொருவரின் ஓவியத்தையும் ஆசிரியர் பார்த்து இரசித்தபடியே சுற்றி வந்துகொண்டிருந்தார். ஆழ்ந்த ஈடுபாட்டுடன் எதையோ வரைந்து கொண்டிருந்த ஒரு சிறுமியை ஆசிரியர் அணுகி, “என்ன வரைந்துகொண்டிருக்கிறாய்?” என்று கேட்டார். தன் ஓவியத்திலிருந்து கவனத்தைச் சிறிதும் திருப்பாமல், “நான் கடவுளை வரைந்துகொண்டிருக்கிறேன்” என்று பதில் சொன்னாள், அக்குழந்தை. உடனே ஆசிரியர், “கடவுள் எப்படியிருப்பார் என்று யாருக்குமே தெரியாதே!” என்று கூறினார். அக்குழந்தை, ஆசிரியரை நிமிர்ந்துபார்த்து, “கொஞ்சம் பொறுங்கள்… இன்னும் சிறிது நேரத்தில் அவர் எப்படியிருப்பார் என்று தெரிந்துவிடும், பாருங்கள்!” என்று புன்சிரிப்புடன் பதில் சொன்னாள்.
‘இறைவனை யாரும் பார்த்ததில்லை’ என்பது, வளர்ந்துவிட்ட ஆசிரியரின் கணிப்பு. ‘இறைவனை என்னால் எளிதில் காட்டமுடியும்’ என்பது, குழந்தையின் நம்பிக்கை. குழந்தையின் வடிவில் இறைவனைக் காணமுடியும் என்பதையும், குழந்தைகள் இறைவனுக்கு நெருக்கமானவர்கள் என்பதையும் ஏறத்தாழ எல்லா மதங்களும் கூறுகின்றன. உலகில் பிறக்கும் குழந்தைகள், இறைவன் என்ற பேரொளியின் சிறு பொறிகளாக, இவ்வுலகிற்கு வருகின்றனர். வயது வளர வளர, இந்த ஒளி மங்கி, மறைந்துவிடுகிறது.
மங்கி, மறைந்துவரும் அந்த ஒளியை, மீண்டும் ஒளிரவைப்பதற்கு, இந்த ஞாயிறு, நமக்கு ஓர் அழைப்பு வந்துள்ளது. இன்று நாம் கொண்டாடும் மூவொரு இறைவன் பெருவிழாவை, குழந்தை மனதுடன் அணுகினால் மட்டுமே, இப்பெருவிழாவின் மையப்பொருளை, ஓரளவாகிலும் நம்மால் புரிந்துகொள்ளமுடியும். மூவொரு இறைவன் என்ற பெருங்கடலில், ஒரு குழந்தையின் குதூகலத்துடன் குளித்து மகிழ்வதற்குப் பதில், அக்கடலை, தன் அறிவுக் குழிக்குள் சிறைப்படுத்த முயன்ற புனித அகுஸ்தின் பற்றி சொல்லப்படும் கதை நமக்கு நினைவிருக்கலாம்.
இறையியல் மேதையான புனித அகுஸ்தின், ஒருநாள், ஆழ்ந்த சிந்தனையோடு கடற்கரையில் நடந்துகொண்டிருந்தார். இறைவன், மூன்று ஆட்களாய், அதேவேளையில், ஒரே கடவுளாய் இருப்பது எவ்விதம் சாத்தியம் என்று, தன் மூளையைக் கசக்கிப்பிழிந்து, விடை தேடிக்கொண்டிருந்தார். கடற்கரையில், ஒரு சிறுவன், சிறியதொரு சிப்பியில், கடல் நீரை அள்ளி எடுத்து, கரையில் இருந்த ஒரு குழியில் ஊற்றிவிட்டு, மீண்டும் கடலுக்குச் சென்று நீர் எடுத்து வந்தான். சிறுவன் இவ்வாறு நான்கைந்து முறை செய்ததைப் பார்த்த அகுஸ்தின், சிறுவனிடம் சென்று, “என்ன செய்கிறாய்?” என்று கேட்டார். சிறுவன் அவரிடம், “பார்த்தால் தெரியவில்லையா? நான் இந்தக் கடல் நீர் முழுவதையும், அந்தக் குழிக்குள் ஊற்றிக்கொண்டிருக்கிறேன்” என்றான். அந்தக் குழந்தைத்தனமான பதிலைக்கேட்டு, இலேசாகப் புன்னகைத்த அகுஸ்தின், அச்சிறுவனிடம், “இந்தக் கடல் நீர் முழுவதையும் உன்னால் அந்தச் சிறு குழிக்குள் ஊற்றிவிட முடியுமா?” என்று கேட்டார். அச்சிறுவன், அகுஸ்தினை ஆழமாகப் பார்த்து, “உங்களுடைய சிறிய அறிவைக்கொண்டு, அளவுகடந்த கடவுளை உங்களால் புரிந்துகொள்ள முடியுமா?” என்று பதில் கேள்வி கேட்டுவிட்டு, மறைந்துபோனான்.
அன்று, புனித அகுஸ்தின், அக்குழந்தையிடம் கற்றுக்கொண்டது, மூவொரு கடவுளைப்பற்றிய உண்மை என்பதைவிட, தன்னைப்பற்றிய உண்மை என்று சொல்வதே பொருந்தும். அக்குழந்தையிடம் கற்றுக்கொண்ட பாடம், புனித அகுஸ்தினை, வாழ்நாள் முழுவதும் பணிவுடன் வாழவைத்தது. முக்கியமாக, கடவுளைப்பற்றிய சிந்தனைகளை, பணிவுடன் கற்றுக்கொள்ளவைத்தது. பணிவுடன், தன் ஆழ்மனதில் பதியவைக்க வேண்டிய ஓர் உண்மையை, புனித அகுஸ்தின், தன் அறிவுத்திறன் கொண்டு, அறிந்து, தெரிந்து, புரிந்துகொள்ள முயன்றார். அதில் தோல்வியும் கண்டார்.
அறிவியலில் வியக்கத்தக்க வளர்ச்சி பெற்றுவிட்டதாக, அனைத்து புதிர்களுக்கும் விடைகளைக் கண்டுபிடித்துவிட்டதாக எண்ணிவந்த நம் தலைமுறையினருக்கு, கண்ணுக்குத் தெரியாத ஒரு கிருமி, பணிவுப்பாடங்களைப் புகட்டிவருகிறது. இவ்வுலகத்தில் இனி வெல்வதற்கு எதுவுமே கிடையாது, இந்த உலகைத் தாண்டிய உண்மைகளும் கிடையாது என்ற மமதையில் வாழ்ந்த பலர், இந்தக் கிருமியின் முழு உண்மையை அறிந்துகொள்ள இயலாமல் தடுமாறுவதை நாம் அறிவோம். நம் ஒவ்வொருவரையும், நாம் வாழும் உலகையும், படைப்பு அனைத்தையும் இயக்கும் ஒரு சக்தி உள்ளது; அந்த சக்திக்கு முன், பணிவுடன் தலைவணங்குவது ஒன்றே, மனிதர்களாகிய நாம் செய்யக்கூடிய பொருத்தமானச் செயல் என்பதை, அண்மைய மூன்று மாதங்களில், நாம் கற்றுவருகிறோம் என்பதை மறுக்க இயலாது.
Source: New feed