முன்னாள் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்கள், திருஅவையின் தலைமைப்பணியிலிருந்து ஓய்வுபெறுவதற்கு தன்னால் எடுக்கப்பட்ட தீர்மானம், கடினமான தெரிவாக இருந்தது, என்றும், அது, முழு மனச்சான்றுடன் மேற்கொள்ளப்பட்ட தீர்மானம் என்பதிலும், அதை நன்றாகச் செய்தேன் என்பதிலும், தனக்கு நம்பிக்கை இருக்கிறது என்றும் கூறியுள்ளார்.
பிப்ரவரி 28ம் தேதி, தன் தலைமைப்பணியைத் துறந்ததன் எட்டாம் ஆண்டு நிறைவை எட்டியுள்ள முன்னாள் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்களைப் பேட்டி கண்ட, Corriere della Sera என்ற இத்தாலிய நாளிதழிடம், இவ்வாறு அவர் கூறினார்.
தலைமைப் பணியிலிருந்து ஓய்வு, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் ஈராக் திருத்தூதுப்பயணம், அமெரிக்க ஐக்கிய நாட்டு புதிய அரசுத்தலைவர் ஜோ பைடன் போன்ற தலைப்புக்களில் கேட்கப்பட்ட கேள்விகளுக்குப் பதிலளித்த திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்கள், தான் தலைமைப்பணியை துறந்தது குறித்து ஒருபோதும் வருந்தியதில்லை என்று தெரிவித்தார்.
தான் எடுத்த பணி ஓய்வு முடிவை விரும்பாத, மற்றும், அதுபற்றி கோபம் கொண்டிருக்கும் தன் அபிமான நண்பர்கள் வெளியிடும் செய்திகளை, தான் தொடர்ந்து பார்த்து வருவதாகவும், அச்செய்திகளுக்கு, பல நேரங்களில் மறுப்பு தெரிவித்திருப்பதாவும், தன் பேட்டியில் குறிப்பிட்டார், முன்னாள் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.
ஈராக் திருத்தூதுப்பயணம்
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் ஈராக் திருத்தூதுப்பயணம், மிகவும் முக்கியத்துவம் பெற்றது என தான் நினைப்பதாகக் கூறிய முன்னாள் திருத்தந்தை, நிலையற்ற சூழலிலுள்ள ஈராக் நாட்டில், இக்காலக்கட்டத்தில் மேற்கொள்ளப்படும் பயணம், பாதுகாப்புக் காரணங்களுக்காக, மிகவும் கடினமானது எனவும் கூறினார்.
இத்திருத்தூதுப் பயணம், கோவிட்-19 பெருந்தொற்று காலத்தில் இடம்பெறுவதும், அதனை கடினமானதாக ஆக்குகின்றது என்றும், எனது செபத்தால் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களோடு ஒன்றித்திருப்பேன் என்றும், திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்கள் கூறியுள்ளார்.
எட்டு ஆண்டுகளுக்குமுன், 2013ம் ஆண்டு பிப்ரவரி 11ம் தேதி, கத்தோலிக்கத் திருஅவையின் தலைமைப்பணியிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்து, அதே பிப்ரவரி 28ம் தேதி, அப்பணியிலிருந்து முழுவதுமாக ஓய்வுபெற்றார், முன்னாள் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.
Source: New feed