முதியோரின் உரிமைகள் மீறப்படுவதற்கு எதிரான உலக விழிப்புணர்வு நாள் ஜூன் மாதம் 15ம் தேதி, ஐ.நா. நிறுவனத்தால் சிறப்பிக்கப்பட்டதையொட்டி, சமுதாயத்தில் முதியோரின் முக்கியத்துவம் குறித்து டுவிட்டர் செய்தியொன்றை இத்திங்களன்று வெளியிட்டார் திருத்தந்தை பிரான்சிஸ்.
முதியோரின் உடல் பலவீனங்களையும், மாண்பையும் சரியான முறையில் மதித்து, சமுதாயத்தில் ஒன்றிணைக்கும் கட்டமைப்புகளை நம் சமுதாயம் கொண்டிருக்கவில்லை என்பதை, கோவிட்-19 கொள்ளைநோய்க் காலம் நமக்கு வெளிச்சம் போட்டுக்காட்டியுள்ளது, என தன் டுவிட்டரில் கவலையை வெளியிட்ட திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், முதியோர் மீது நாம் சரியான அக்கறை காட்டவில்லையெனில், இளையோருக்கு வருங்காலம் என்பது இல்லாமல் போய்விடும், என அதில் மேலும் கூறியுள்ளார்.
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் இதே திங்களன்று வெளியிட்டுள்ள இரண்டாவது டுவிட்டர் செய்தியில், நாமனைவரும் கடவுளின் அன்பு குழந்தைகள் என்பதை, நம் ஒன்றிப்பின் மூலகாரணமாக இருக்கும் தூய ஆவியாரே நமக்கு நினைவூட்டுகிறார், நாமனைவரும் சகோதர சகோதரிகள் என கூறியுள்ளார்.
மேலும், கிறிஸ்துவின் தூய்மைமிகு திரு உடல், திரு இரத்தம் பெருவிழாவான இஞ்ஞாயிறன்று 6 டுவிட்டர் செய்திகளை வெளியிட்ட திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், லிபியாவில் அமைதி நிலவ, அனைத்துலக பொறுப்பிலுள்ளோர் மேற்கொள்ளவேண்டிய நடவடிக்கைகளுக்கு அழைப்பு விடுத்து ஒரு டுவிட்டரையும், இரத்ததான நிகழ்வில் பங்குபெறுவோர் அனைவரையும் பாராட்டி இரத்ததான தினம் குறித்த விழிப்புணர்வை குறிப்பிட்டு ஒரு டுவிட்டரையும் வெளியிட்டுள்ளார்.
ஏனைய நான்கு டுவிட்டர்களிலும், கிறிஸ்துவின் திரு உடல் திரு இரத்தம் குறித்த முக்கியக் கூறுகளை எடுத்துரைத்துள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்
Source: New feed