எதிர்காலத்திற்கான ஒரு நிலையான, வளர்ச்சியை உள்ளடக்கிய, மற்றும் மீளுருவாக்கம் செய்யும் பொருளாதாரத்தை உருவாக்குதல்” என்ற தலைப்பில், ஜனவரி 12, புதன்கிழமையன்று நடத்தப்பட்ட ஒரு கருத்தரங்கிற்குத் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் செய்தி ஒன்றை அனுப்பியுள்ளார்.
கொரோனா தொற்றுநோய் தொடங்கியபோதே, இந்த நெருக்கடியின்போது நல்லது, கெட்டது, அல்லது என்ன நடக்கும் என்பது நமது அர்ப்பணிப்பைப் பொறுத்துதான் அமையும் என்று நான் மீண்டும் மீண்டும் சொன்னேன் என்றுரைத்துள்ள திருத்தந்தை பிரான்சிஸ், இந்தக் காரணத்திற்காக, நான் வத்திக்கான் கோவிட்-19 ஆணையத்திடம், நற்செய்தியின் எதார்த்தங்களின் அடிப்படையில் கிடைக்கக்கூடிய சிறந்த அறிவியலைக் கொண்டு, ஓரங்கட்டப்பட்ட மக்களுடன் ஒரு நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கான எதிர்காலத்தைத் தயாரிக்குமாறு கேட்டுக் கொண்டேன் என்றும் கூறியுள்ளார்.
தொற்றுநோய் தொடங்கி இரண்டு ஆண்டுகள் கடந்தும் கூட, நமது அணுகுமுறையை மாற்றிக்கொள்ள நமக்குப் பல வாய்ப்புகள் கிடைத்தும், அதைப் பயன்படுத்தத் தவறிவிட்டோம் என்பதை நாம் ஒப்புக்கொள்ள வேண்டும் என்று கூறியுள்ள திருத்தந்தை, இப்போது நாம் புதிய அநீதிகளையும் ஏற்றத்தாழ்வுகளையும் இழைத்து வருகிறோம் என்றும் தெரிவித்துள்ளார்.
நமது பொதுவான இல்லத்தைப் பராமரிப்பது, தடுப்பூசி விநியோகம், பசியின் அதிகரிப்பு, வறுமை மற்றும் ஆயுத வர்த்தகம் ஆகியவைகள் முன்னுரிமை கொண்டதாகவும், மற்றும் சவால்கள் நிறைந்ததாகவும் தொடர்கின்றன என்றுரைத்துள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், பொருளாதாரம், மற்றும் நிதி உலகம் ஒரு முன்னுதாரண மாற்றத்தை ஊக்குவிப்பதிலும் ஆக்கப்பூர்வமான தீர்வுகளைக் கண்டறிய உதவுவதிலும் முக்கியப் பொறுப்பைக் கொண்டுள்ளன என்றும் எடுத்துக்காட்டியுள்ளார்.
மாற்றத்திற்கான உங்களின் அளவுகோல் என்பது இலாபத்திற்கானதாக அமையாமல், வெற்றியை மையப்படுத்தியதாக அமையவேண்டும் என்று அழைப்பு விடுத்துள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், எதிர்காலத்தை உருவாக்குவதில் நீங்கள் ஒவ்வொருவரும் மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என்றும் நம்பிக்கைத் தெரிவித்து தன் செய்தியை நிறைவு செய்துள்ளார்.
Source: New feed