நேர்மையாளர்களை அல்ல, பாவிகளையே மனம் மாற அழைக்க வந்தேன்.
+லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 5: 27-32
அக்காலத்தில் இயேசு சுங்கச் சாவடியில் அமர்ந்திருந்த லேவி என்னும் பெயருடைய வரிதண்டுபவர் ஒருவரைக் கண்டார்; அவரிடம், “என்னைப் பின்பற்றி வா!” என்றார். அவர் அனைத்தையும் விட்டுவிட்டு எழுந்து இயேசுவைப் பின்பற்றிச் சென்றார்.
இந்த லேவி தம் வீட்டில் அவருக்கு ஒரு பெரிய விருந்து அளித்தார். வரிதண்டுபவர்களும் மற்றவர்களும் பெருந்திரளாய் அவர்களோடு பந்தியில் அமர்ந்தார்கள்.
பரிசேயர்களும் அவர்களைச் சேர்ந்த மறைநூல் அறிஞர்களும் முணுமுணுத்து இயேசுவின் சீடரிடம், “வரிதண்டுபவர்க ளோடும் பாவிகளோடும் சேர்ந்து நீங்கள் உண்பதும் குடிப்பதும் ஏன்?” என்று கேட்டனர்.
இயேசு அவர்களுக்கு மறுமொழியாக, “நோயற்றவர்க்கு அல்ல, நோயுற்றவர்க்கே மருத்துவர் தேவை. நேர்மையாளர்களை அல்ல, பாவிகளையே மனம் மாற அழைக்க வந்தேன்” என்றார்.
இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.
——————————————————–
மறையுரைச் சிந்தனை (பிப்ரவரி 17)
லேவியின் மனமாற்றம்!
தென் பொலிவியாவில், பெரும்பாலான நேரங்களில் ஞாயிறு வழிபாடு ஆலயத்திற்கு வெளியே இருக்கக்கூடிய மர நிழலில்தான் நடைபெறும். ஞாயிறு வழிபாட்டின் இடையில், அதாவது காணிக்கை பவனியின் போது, கூட்டத்தில் இருந்து நான்கு இளைஞர்கள் எழுந்து, கையில் அப்பம், ரசம், மெழுகுதிரி, கல் போன்றவற்றை ஏந்தி பீடத்தை நோக்கி வருவர். அவர்கள் பீடத்தை அடைந்ததும் கல்லை தன்னுடைய கையில் ஏந்தியிருக்கக்கூடிய இளைஞர் வானத்தை அண்ணார்ந்து, “வானகத் தந்தையே இறைவா! இதோ என்னுடைய கையில் ஏந்தியிருக்கின்ற இந்தக் கல் இறைமக்களாகிய எங்களைக் குறிக்கின்றது. இந்த கல்லைப் போன்று நாங்கள் கடின மனத்தவராய் இல்லாமல், கனிவுள்ள நெஞ்சத்தினராய் வாழச் செய்யும். எங்களுடைய நெஞ்சத்தில் உண்மையான அன்பும், இரக்கமும் குடிகொள்ளச் செய்யும்” என்று சொல்லி வேண்டிவிட்டு, அவர்கள் நான்கு பேரும் திரும்பிச் சென்று அமர்ந்து கொள்வர்.
அப்பம், இரசம், மெழுகுதிரி இவற்றோடு கல்லையும் பெற்றுக்கொள்கின்ற குருவானவர் பீடத்திற்கு வந்ததும், வானத்தை அண்ணார்ந்து பார்த்து, “இரக்கம் நிறைந்த இறைவா! இறைமக்கள் கொண்டு வந்திருக்கின்ற அப்பத்தையும் இரசத்தையும் உம்முடைய திருவுடலாகவும் இரத்தமாகவும் மாற்றுகின்ற நீர், இக்கல்லை – இறைமக்களின் இதயத்தை – கனிவுள்ள நெஞ்சமாக மாற்றும்” என்று சொல்லி ஜெபித்துவிட்டு திருப்பலியைத் தொடர்ந்து நிறைவேற்றுவார்.
தென் பொலிவியா மக்கள் செய்கின்ற இச்சடங்கின் வழியாக அவர்கள் மனதில் மாற்றம் ஏற்படுவதாக நம்புகிறார்கள். நாம் ஒவ்வொருவருமே பாவத்திலிருந்து விலகி, இறைவனுக்கு உகந்த அன்பு மக்களாக மாறவேண்டும் அதுதான் இறைவனின் திருவுளமாக இருக்கின்றது. நற்செய்தியில் பாவத்திலிருந்து விலகி, இயேசுவின் திருதூதர்கள் அணியில் சேர்ந்த லேவியைக் குறித்து வாசிக்கின்றோம். லூக்கா நற்செய்தியில் லேவி என்ற பெயரில் வருகின்ற இவர் மத்தேயு தானே தவிர, வேறு யாருமில்லை.
லேவி சுங்கச் சாவடியில் அமர்ந்து வரிவசூலித்துக் கொண்டிருகின்றார். அவரை ஆண்டவர் இயேசு தடுத்தாட்கொண்டு, “என் பின்னே வா” எனப் பணிக்கின்றார். இயேசு அவரை அழைத்தவுடன் எல்லாவற்றையும் விட்டுவிட்டு இயேசுவோடு இணைந்துகொள்கின்றார். இவ்வாறு அவர் லேவி (joined to) என்ற தன்னுடைய பெயருக்கு ஏற்ப, பாவத்திலிருந்து விலகி இயேசுவோடு இணைந்தார். லேவியின் மனமாற்றம் அல்லது அழைப்பு நமக்கு இரண்டு முக்கியமான செய்திகளை உணர்த்துவதாக இருக்கின்றது. அது என்னென்ன என்று இப்போது சிந்தித்துப் பார்ப்போம்.
லேவியின் மனமாற்றம் நமக்குச் சொல்லக்கூடிய முதலாவது செய்தி, நாம் ஒவ்வொருவரும் நம்முடைய குற்றங்குறைகளை உணர்ந்து மனம்மாற வேண்டும் என்பதாகும். லேவி செய்துவந்த வரிவசூலிக்கும் தொழிலில் நிறைய முறைகேடுகள் நடக்கும். குறிப்பாக உரோமை அரசாங்கம் நிர்ணயிக்கம் தொகையை விடவும் அதிகமாக தொகையை வரிதண்டுவோர் வசூலித்து வந்தார்கள். லேவியும், அரசாங்கம் அதே தவற்றினைச் செய்திருக்கவேண்டும். எனவே, அவர் ஒருவிதமான குற்றவுணர்வோடு வாழ்ந்திருக்கவேண்டும். இத்தகைய சூழ்நிலையில் ஆண்டவர் இயேசு அவரை அழைக்கின்றபோது, அவர் தன்னுடைய குற்றத்தை உணர்ந்து, அதே நேரத்தில் எல்லாவற்றையும் விட்டுவிட்டு இயேசுவைப் பின்தொடர்ந்து வருகின்றார். லேவியைப் போன்று நாம் ஒவ்வொருவரும் நம்முடைய குற்றங்களை உணர்ந்து திருந்துவதுதான் இறைவனுக்கு ஏற்ற செயலாகும். ஏனென்றால் லூக்கா நற்செய்தி 15:7 ல் வாசிப்பது போல், “மனம் மாறத் தேவையில்லாத தொண்ணூற்று ஒன்பது நேர்மையாளர்களைக் குறித்து உண்டாகும் மகிழ்ச்சியை விட, மனம் மாறிய ஒரு பாவியைக் குறித்து விண்ணுலகில் மிகுதியான மகிழ்ச்சி உண்டாகும்”.
லேவியின் மனமாற்றம் நமக்கு எடுத்துரைக்கின்ற இரண்டாவது செய்தி, இயேசு இழந்து போனதைத் தேடி மீட்கவே வந்தார் என்பதாகும். இயேசு தன்னை அழைத்தவுடன், லேவி தன்னுடைய வீட்டில் விருந்தொன்று ஏற்பாடு செய்கின்றார். அதில் இயேசுவும் அவருடைய சீடர்களும் ஏனையோரும் கலந்து கொள்கின்றார்கள். அப்போது பரிசேயர்களும் மறைநூல் அறிஞர்களும், “இவர் வரிதண்டுவோரோடும் பாவிகளோடும் விருந்துண்கின்றாரே” என்று முணுமுணுக்கத் தொடங்குகின்றார்கள். உடனேதான் இயேசு, “நோயற்றவருக்கு அல்ல, நோயுற்றவருக்கே மருத்துவர் தேவை. நேர்மையாளர்களை அல்ல, பாவிகளையே அழைக்க வந்தேன்” என்று கூறுகின்றார். இயேசு இந்த உலகத்திற்கு வந்ததே பாவிகளாகிய நம் ஒவ்வொருவரையும் மீட்பதற்காகத் தான் (லூக் 19: 10; 1 யோவா 1: 8- 10). இந்த உண்மையை உணராமல் பரிசேயக் கூட்டம் இருந்தது வேடிக்கையாக இருக்கின்றது.
ஆகவே, பாவிகளைத் தேடி மீட்க வந்த இயேசுவின் அன்பை உணர்ந்து, நம்முடைய பாவ வாழ்க்கையிலிருந்து விலகி, இயேசுவிடம் திரும்பி வருவோம், இறைவனுக்கு உகந்த வழியில் நடப்போம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.
Source: New feed