உங்களுள் ஒவ்வொருவரும் தம் சகோதரர் சகோதரிகளை மனமாற மன்னிக்காவிட்டால் என் தந்தையும் உங்களை மன்னிக்க மாட்டார்.
+மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 18: 21-35
அக்காலத்தில் பேதுரு இயேசுவை அணுகி, “ஆண்டவரே, என் சகோதரர் சகோதரிகளுள் ஒருவர் எனக்கு எதிராகப் பாவம் செய்துவந்தால் நான் எத்தனை முறை அவரை மன்னிக்க வேண்டும்? ஏழு முறை மட்டுமா?” எனக் கேட்டார்.
அதற்கு இயேசு அவரிடம் கூறியது: “ஏழுமுறை மட்டுமல்ல; எழுபது தடவை ஏழுமுறை என நான் உனக்குச் சொல்கிறேன்.
விண்ணரசைப் பின்வரும் நிகழ்ச்சிக்கு ஒப்பிடலாம்; ஓர் அரசர் தம் பணியாளர்களிடம் கணக்குக் கேட்க விரும்பினார். அவர் கணக்குப் பார்க்கத் தொடங்கியபொழுது, அவரிடம் பத்தாயிரம் தாலந்து கடன்பட்ட ஒருவனைக் கொண்டு வந்தனர். அவன் பணத்தைத் திருப்பிக் கொடுக்க இயலாத நிலையில் இருந்தான். தலைவரோ, அவனையும் அவன் மனைவி மக்களோடு அவனுக்குரிய உடைமைகள் யாவற்றையும் விற்றுப் பணத்தைத் திருப்பி அடைக்க ஆணையிட்டார்.
உடனே அப்பணியாள் அவர் காலில் விழுந்து பணிந்து, `என்னைப் பொறுத்தருள்க; எல்லாவற்றையும் உமக்குத் திருப்பித் தந்துவிடுகிறேன்’ என்றான்.
அப்பணியாளின் தலைவர் பரிவு கொண்டு அவனை விடுவித்து அவனது கடன் முழுவதையும் தள்ளுபடி செய்தார்.
ஆனால் அப்பணியாள் வெளியே சென்றதும், தன்னிடம் நூறு தெனாரியம் கடன்பட்டிருந்த உடன்பணியாளர் ஒருவரைக் கண்டு, `நீ பட்ட கடனைத் திருப்பித் தா’ எனக் கூறி அவரைப் பிடித்துக் கழுத்தை நெரித்தான். உடனே அவனுடைய உடன்பணியாளர் காலில் விழுந்து, `என்னைப் பொறுத்தருள்க; நான் திருப்பிக் கொடுத்துவிடுகிறேன்’ என்று அவனைக் கெஞ்சிக் கேட்டார்.
ஆனால் அவன் அதற்கு இசையாது, கடனைத் திருப்பி அடைக்கும்வரை அவரைச் சிறையில் அடைத்தான்.
அவருடைய உடன்பணியாளர்கள் நடந்ததைக் கண்டபோது மிகவும் வருந்தித் தலைவரிடம் போய் நடந்தவற்றை எல்லாம் விளக்கிக் கூறினார்கள்.
அப்போது தலைவர் அவனை வரவழைத்து, `பொல்லாதவனே, நீ என்னை வேண்டிக்கொண்டதால் அந்தக் கடன் முழுவதையும் உனக்குத் தள்ளுபடி செய்தேன். நான் உனக்கு இரக்கம் காட்டியதுபோல நீயும் உன் உடன்பணியாளருக்கு இரக்கம் காட்டியிருக்க வேண்டும் அல்லவா?’ என்று கேட்டார்.
அத்தலைவர் சினங் கொண்டவராய், அனைத்துக் கடனையும் அவன் அடைக்கும்வரை அவனை வதைப்போரிடம் ஒப்படைத்தார்.
உங்களுள் ஒவ்வொருவரும் தம் சகோதரர் சகோதரிகளை மனமார மன்னிக்காவிட்டால் விண்ணுலகில் இருக்கும் என் தந்தையும் உங்களை மன்னிக்கமாட்டார்.”
ஆண்டவரின் அருள்வாக்கு.
——————————————-
மறையுரைச் சிந்தனை
மன்னிப்பே மகத்தான மருந்து
இரண்டாம் உலகப் போரின்போது அமெரிக்காவிற்கும், ஜப்பானுக்கும் இடையே நடந்த போரில் இரண்டு அமெரிக்க இராணுவ வீரர்கள் சிறைபிடிக்கப்பட்டு ஜப்பானில் பிணைக் கைதிகளாக வைக்கப்பட்டார்கள். ஆனால் சில ஆண்டுகளுக்குப் பிறகு இரண்டு நாடுகளுக்கும் இடையே நடைபெற்ற சமரசப் பேச்சுவார்த்தையின் காரணமாக அவர்கள் இருவரும் ஜப்பான் சிறையிலிருந்து விடுதலை செய்யப்பட்டு, தங்களுடைய சொந்த நாட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டார்கள்.
ஆண்டுகள் பல உருண்டோடின. 1995 ஆம் ஆண்டு ஏறக்குறைய ஐம்பது ஆண்டுகளுக்குப் பிறகு அந்த இரண்டு இராணுவவீரர்களும் சந்தித்துக் கொண்டார்கள். அப்போது ஒருவர் மற்றவரைப் பார்த்துக் கேட்டார், “நம்மை சிறைபிடித்து வைத்திருந்த அந்த ஜப்பான் நாட்டு இராணுவ வீரர்களை மன்னித்துவிட்டாயா? என்று. அதற்கு அவர், “இல்லை, இல்லை என்னால் அவர்களை அவ்வளவு சீக்கிரமாக மன்னிக்க முடியவில்லை” என்றார்.
உடனே கேள்வி கேட்டவர் மற்றவரிடம், “உன்னால் அவர்களை இன்னும் மன்னிக்க முடியவில்லையா, அப்படியானால் இன்னும் நீ அந்தச் சிறையில்தான் இருக்கிறாய்” என்று முடித்தார்.
ஆம், நமக்கெதிராக குற்றம் செய்தவர்களை மன்னிக்காதபோது, நாம் இன்னும் சிறையில்தான் இருக்கிறோம் என்பதை இந்த நிகழ்வானது நமக்கு அழகாக எடுத்துரைக்கிறது. நற்செய்தி வாசகத்தில் சீமோன் பேதுரு ஆண்டவர் இயேசுவிடம், “ஆண்டவரே! என்னுடைய சகோதரர், சகோதரிகளுள் ஒருவர் எனக்கெதிராக குற்றம் செய்தால், நான் அவர்களை எத்தனை முறை மன்னிப்பது, ஏழுமுறையா?” என்று கேட்கின்றார். அதற்கு இயேசு, “ஏழுமுறை அன்று, எழுபது முறை ஏழுமுறை” என்கிறார். அதாவது நாம் ஒவ்வொருவரும் நிபந்தனையற்ற முறையில் மன்னிக்கவேண்டும் என்பதுதான் இயேசு நமக்கு உணர்த்த விரும்பும் பாடமாக இருக்கின்றது.
தொடர்ந்து ஆண்டவர் இயேசு கூறும் மன்னிக்க மறுத்த பணியாளனின் உவமை நம்மை இன்னும் ஆழ்ந்து சிந்திக்கத் தூண்டுகிறது. கடவுள் நம்மை கணக்கற்ற விதமாய் மன்னிக்கிறார். ஆனால் நாமோ நம்மோடு வாழும் சக மனிதர்கள் செய்யும் சாதாரண குற்றத்தையும் பெரிதுபடுத்தி, அவர்களை மன்னிக்காமலே இருக்கிறோம் என்பதை இவ்வுவமை வேதனையோடு பதிவுசெய்கிறது.
விவிலியம் முழுமைக்கும், குறிப்பாக திருப்பாடல் 130:4 ஆம் வசனத்தில் படிக்கின்றோம், “கடவுள் மன்னிப்பு அளிப்பவர்” என்று. ஆகவே கடவுள் நம்மை அளவுகடந்த விதமாய் மன்னிப்பது போன்று, நாமும் பிறரை மன்னிக்க வேண்டும். இன்றைய நற்செய்தியின் இறுதிப்பகுதியில் இயேசு சொல்வார், “உங்களுள் ஒவ்வொருவரும் தம் சகோதரர், சகோதரிகளை மனமார மன்னிக்காவிட்டால், விண்ணுலகில் இருக்கும் என் தந்தையும் உங்களை மன்னிக்கமாட்டார்” என்று. எனவே நாம் பிறர் செய்த குற்றங்களை மன்னித்து, இறைவனுக்கு ஏற்ற மக்களாக வாழுவோம்.
Source: New feed