உங்களுள் பாவம் இல்லாதவர் முதலில் இப்பெண்மேல் கல் எறியட்டும்.
யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 8: 1-11
அக்காலத்தில்
இயேசு ஒலிவ மலைக்குச் சென்றார். பொழுது விடிந்ததும் அவர் மீண்டும் கோவிலுக்கு வந்தார். அப்போது மக்கள் அனைவரும் அவரிடம் வந்தனர். அவரும் அங்கு அமர்ந்து அவர்களுக்குக் கற்பித்தார். மறைநூல் அறிஞரும் பரிசேயரும் விபசாரத்தில் பிடிபட்ட ஒரு பெண்ணைக் கூட்டிக்கொண்டுவந்து நடுவில் நிறுத்தி, ‘‘போதகரே, இப்பெண் விபசாரத்தில் கையும் மெய்யுமாகப் பிடிபட்டவள். இப்படிப்பட்டவர்களைக் கல்லால் எறிந்து கொல்ல வேண்டும் என்பது மோசே நமக்குக் கொடுத்த திருச்சட்டத்திலுள்ள கட்டளை. நீர் என்ன சொல்கிறீர்?” என்று கேட்டனர். அவர்மேல் குற்றம் சுமத்த ஏதாவது வேண்டும் என்பதற்காக அவர்கள் இவ்வாறு கேட்டுச் சோதித்தார்கள்.
இயேசு குனிந்து விரலால் தரையில் எழுதிக்கொண்டிருந்தார். ஆனால் அவர்கள் அவரை விடாமல் கேட்டுக்கொண்டிருந்ததால், அவர் நிமிர்ந்து பார்த்து, ‘‘உங்களுள் பாவம் இல்லாதவர் முதலில் இப்பெண்மேல் கல் எறியட்டும்” என்று அவர்களிடம் கூறினார். மீண்டும் குனிந்து தரையில் எழுதிக்கொண்டிருந்தார். அவர் சொன்னதைக் கேட்டதும் முதியோர் தொடங்கி ஒருவர் பின் ஒருவராக அவர்கள் யாவரும் அங்கிருந்து சென்றுவிட்டார்கள். இறுதியாக இயேசு மட்டுமே அங்கு இருந்தார். அப்பெண்ணும் அங்கேயே நின்றுகொண்டிருந்தார்.
இயேசு நிமிர்ந்து பார்த்து, ‘‘அம்மா, அவர்கள் எங்கே? நீர் குற்றவாளி என்று எவரும் தீர்ப்பிடவில்லையா?” என்று கேட்டார். அவர், ‘‘இல்லை, ஐயா” என்றார். இயேசு அவரிடம், ‘‘நானும் தீர்ப்பு அளிக்கவில்லை. நீர் போகலாம். இனிப் பாவம் செய்யாதீர்” என்றார்.
ஆண்டவரின் அருள்வாக்கு.
————————————————–
தவக்காலம் ஐந்தாம் வாரம் திங்கட்கிழமை
I தானியேல் (இ) 2: 1-9, 15-17, 19-30, 33-62
II யோவான் 8: 1-11
“நானும் தீர்ப்பளிக்கவில்லை”
அற்புதமான குரு:
மலையடிவாரம் தன் சீடர்களோடு வாழ்ந்தவந்த துறவி ஒருவர், ஒருநாள் ஒரு சீடரை அழைத்து, அவரிடம் பக்கத்திலுள்ள நகருக்குச் சென்று மளிகைப்பொருள்களை வாங்கிவரச் சொன்னார். துறவி தன்னிடம் சொன்னதுபோன்றே அச்சீடரும் பொருள்களை வாங்க நகருக்குச் சென்றார். வழியில் சீடரை இடைமறித்த வேறொரு துறவி ஒருவர், “உன்னுடைய குருவிற்கு என்ன தெரியும் என்று நீ அவரிடம் சீடராய் இருக்கின்றாய். அவருக்கு என்னைப்போல் தண்ணீரில் நடக்கத் தெரியுமா அல்லது என்னைப்போல் வானில் பறக்கத் தெரியுமா?” என்றார். அவர் சொன்னதை அமைதியாகக் கேட்டுக்கொண்டிருந்த சீடர், “இப்பொழுது நீங்கள் சொன்ன எதுவும் என்னுடைய குருவிற்குத் தெரியாது; ஆனால், அவர் உங்களைப் போன்று யாரையும் தீர்ப்பிட்டுக்கொண்டிருக்க மாட்டார். அதனாலேயே நான் அவரிடம் சீடராக இருக்கின்றேன்” என்றார். இதைக்கேட்ட அந்தத்துறவி வாயடைத்துப் போனார்.
ஆம், பலரும் இந்நிகழ்வில் வருகின்ற துறவியைப்போன்று அடுத்தவரைத் தீர்ப்பிடுவதை ஒரு தொழிலாக வைத்து வாழ்ந்துகொண்டிருக்கின்றார்கள். இந்நிலையில் இன்றைய இறைவார்த்தை மற்றவரை நாம் தீர்ப்பிடக்கூடாது என்ற செய்தியைத் தருகின்றது. அதைக்குறித்து நாம் சிந்தித்துப் பார்ப்போம்.
விவிலியப் பின்னணி:
நற்செய்தியில், மறைநூல் அறிஞரும் பரிசேயரும் விபசாரத்தில் பிடிபட்ட ஒரு பெண்ணை இயேசுவிடம் கொண்டுவந்து, மோசேயின் சட்டத்தைக் கூறிவிட்டு, “நீர் என்ன சொல்கிறீர்?” என்கின்றார்கள். இவர்களின் நோக்கம் இயேசுவிடம் குற்றம் காணவேண்டும் என்பதுதானே அன்றி, இயேசு அப்பெண்மணிக்கு என்ன தீர்ப்பு வழங்கப்போகிறார் என்பதைத் தெரிந்துகொள்வது அல்ல. இதனை நன்றாகவே அறிந்த இயேசு அவர்களிடம், “உங்களுள் பாவம் இல்லாதவர் முதலில் இப்பெண்மேல் கல் எறியட்டும்” என்கின்றார். உடனே முதியவர் தொடங்கி, ஒருவர் பின் ஒருவராக அவர்கள் யாவரும் அங்கிருந்து சென்றுவிடுகின்றார்கள்.
தானியேல் நூலிலிருந்து எடுக்கப்பட்ட இன்றைய முதல்வாசகத்தில் சூசன்னா தங்களுடைய ஆசைக்கு இணங்க மறுத்ததும், இரண்டு முதியவர்கள் அவருக்கு எதிராகப் பொய்ச்சான்று சொல்கின்றார்கள். முடிவில் தானியேலின் தலையிட்டால், சூசன்னா காப்பாற்றப்படுகின்றார்; இரண்டு முதியவர்களும் தண்டிக்கப்படுகின்றார்கள். நற்செய்தியில் வரும் மறைநூல் அறிஞர் மற்றும் பரிசேயராக இருக்கட்டும், முதல்வாசகத்தில் வரும் இரண்டு முதியவர்களாக இருக்கட்டும், இவர்கள் யாவரும் அடுத்தவருக்கு எதிராகப் பொய்ச்சான்று சொல்லி, அநியாயமாகத் தீர்ப்பிட்டுக் கொண்டே இருக்கின்றார்கள். இவர்கள் அதற்குரிய தண்டனையைப் பெறுவார்கள் என்பது உறுதி. நாம் அவர்களைப் போன்று மற்றவர்களைத் தீர்ப்பிட்டுக் கொண்டிருக்காமல் இயேசுவைப் போன்று தீர்ப்பிடாமல் இருப்போம்.
சிந்தனைக்கு:
உலக முடிவில் ஒவ்வொருவருக்கும் அவரவர் செயல்களுக்கேற்பக் கடவுள் தீர்ப்பிட இருக்கும்போது, மற்றவரைத் தீர்ப்பிட நாம் யார்?
எந்த அளவையால் நாம் அழைக்கின்றோமோ, அதே அளவையால் நமக்கும் அளக்கப்படும் (மத் 7: 2)
தீர்ப்பிட வேண்டாம், தீர்ப்புக்கு உள்ளாக வேண்டாம் (மத் 7:1)
ஆன்றோர் வாக்கு:
‘அடுத்தவரைத் தீர்ப்பிடும்போது அல்ல, மன்னிக்கும்போதே மன அமைதி கிடைக்கும்’ என்பார் ஜெரால்ட் ஜாம்போல்ஸ்கி என்ற அறிஞர். எனவே, நாம் மற்றவர்களைத் தீர்ப்பிடாமல், மன்னித்து வாழ்ந்து, இறையருளை நிறைவாகப் பெறுவோம்.
Source: New feed