கோதுமை மணி மண்ணில் விழுந்து மடிந்தால்தான் மிகுந்த விளைச்சலை அளிக்கும்.
யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 12: 20-33
அக்காலத்தில்
வழிபாட்டுக்காகத் திருவிழாவுக்கு வந்தோருள் கிரேக்கர் சிலரும் இருந்தனர். இவர்கள் கலிலேயாவிலுள்ள பெத்சாய்தா ஊரைச் சேர்ந்த பிலிப்பிடம் வந்து, “ஐயா, இயேசுவைக் காண விரும்புகிறோம்” என்று கேட்டுக்கொண்டார்கள். பிலிப்பு அந்திரேயாவிடம் வந்து அது பற்றிச் சொன்னார்; அந்திரேயாவும் பிலிப்பும் இயேசுவிடம் சென்று அதைத் தெரிவித்தனர்.
இயேசு அவர்களைப் பார்த்து, “மானிடமகன் மாட்சி பெற வேண்டிய நேரம் வந்துவிட்டது. கோதுமை மணி மண்ணில் விழுந்து மடியாவிட்டால் அது அப்படியே இருக்கும். அது மடிந்தால்தான் மிகுந்த விளைச்சலை அளிக்கும் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன். தமக்கென்றே வாழ்வோர் தம் வாழ்வை இழந்துவிடுவர். இவ்வுலகில் தம் வாழ்வைப் பொருட்டாகக் கருதாதோர் நிலைவாழ்வுக்குத் தம்மை உரியவராக்குவர். எனக்குத் தொண்டு செய்வோர் என்னைப் பின்பற்றட்டும். நான் இருக்கும் இடத்தில் என் தொண்டரும் இருப்பர். எனக்குத் தொண்டு செய்வோருக்குத் தந்தை மதிப்பளிக்கிறார்” என்றார். மேலும் இயேசு, “இப்போது என் உள்ளம் கலக்கமுற்றுள்ளது. நான் என்ன சொல்வேன்? ‘தந்தையே, இந்த நேரத்திலிருந்து என்னைக் காப்பாற்றும்’ என்பேனோ? இல்லை! இதற்காகத்தானே இந்நேரம்வரை வாழ்ந்திருக்கிறேன். தந்தையே, உம் பெயரை மாட்சிப்படுத்தும்” என்றார்.
அப்போது வானிலிருந்து ஒரு குரல், “மாட்சிப்படுத்தினேன்; மீண்டும் மாட்சிப்படுத்துவேன்” என்று ஒலித்தது. அங்குக் கூட்டமாய் நின்றுகொண்டிருந்த மக்கள் அதைக் கேட்டு, “அது இடிமுழக்கம்” என்றனர். வேறு சிலர், “அது வானதூதர் ஒருவர் அவரோடு பேசிய பேச்சு” என்றனர். இயேசு அவர்களைப் பார்த்து, “இக்குரல் என் பொருட்டு அல்ல, உங்கள் பொருட்டே ஒலித்தது. இப்போதே இவ்வுலகு தீர்ப்புக்குள்ளாகிறது; இவ்வுலகின் தலைவன் வெளியே துரத்தப்படுவான். நான் மண்ணிலிருந்து உயர்த்தப்படும்போது அனைவரையும் என்பால் ஈர்த்துக்கொள்வேன்” என்றார்.
தாம் எவ்வாறு இறக்கப் போகிறார் என்பதைக் குறிப்பிட்டே இப்படிச் சொன்னார்.
ஆண்டவரின் அருள்வாக்கு.
—————————————————
I எரேமியா 11: 18-20
II யோவான் 7: 40-53
“கலிலேயாவிலிருந்து இறைவாக்கினர் யாரும் தோன்றுவதில்லை”
கோயிலில் காந்தியடிகள் புறக்கணிக்கப்படல்:
காந்தியடிகள் சிறுவனாக இருக்கும்பொழுது திருவிவிலியத்தின்மீது மிகுந்த ஈடுபாடு கொண்டு அதை வாசிக்கத்தொடங்கினார். ஒருகட்டத்தில் திருவிவிலியம் அவரது உள்ளத்தைத் தொட, அவர் கிறிஸ்துவ மாதத்திற்கு மாறலாம் என்று முடிவு செய்தார்.
அதன்படி அவர் ஒரு ஞாயிற்றுக்கிழமைக் காலையில் கோயிலுக்குச் சென்றார். அங்கு ஒரு வெளிநாட்டு மறைப்பணியாளர் திருவழிபாட்டை நடத்திக்கொண்டிருந்தார். அவர் காந்தியடிகளைக் கண்டதும், வெளியே வந்து, “உனக்கு என்ன வேண்டும்?” என்று கேட்க, காந்தியடிகள் அவரிடம், “நான் கிறிஸ்தவ மதத்தில் சேர விரும்புகின்றேன்” என்ற தன்னுடைய விருப்பத்தைச்சொன்னார். “உங்களைப் போன்றவர்களுக்கு இங்கு இடம் கிடையாது; நீங்கள் உங்களுடைய மக்களோடு சேர்ந்து வழிபட்டுக் கொள்ளுங்கள்” என்று சொல்லி மறைப்பணியாளர் அவரை அனுப்பிவிட்டார். இதனால் கிறிஸ்தவராகி, இந்தியாவில் நிலவும் சாதியக் கொடுமைகளுக்கு ஒரு முடிவு காணவேண்டும் என்ற மிகப்பெரிய கனவோடு வந்த காந்தியடிகள், கிறிஸ்தவத்துக்குள்ளும் வேறுபாடு இருப்பதைக் கண்டு மிகவும் வருந்தி, கிறிஸ்தவராகவே வேண்டும் என்ற எண்ணத்தை அடியோடு விட்டுவிட்டார்.
ஒருவேளை கோயிலில் இருந்த மறைப்பணியாளர் மட்டும் காந்தியடிகளை வேறுபாடு பார்க்காமல் அப்படியே ஏற்றுக்கொண்டிருந்தால், அவர் இயேசுவை மெசியா ஏற்றுக்கொண்டிருந்திருப்பார் (Our Daily Bread, March 6, 1994). நற்செய்தியில், “கலிலேயாவிலிருந்து இறைவாக்கினர் யாரும் தோன்றுவதில்லை” என்று பரிசேயர்களும் தலைமைக்குருக்களும் இயேசுவைப் புறக்கணிக்கின்றனர். அதைக் குறித்து நாம் சிந்திப்போம்.
திருவிவிலியப் பின்னணி:
யூதர்களின் திருவிழாவின்போது இயேசு பேசியதைக் கேட்டு, “வரவேண்டிய இறைவாக்கினர் இவரே!” (இச 18: 15-18), “மெசியா இவரே”, “கலிலேயாவிலிருந்தா மெசியா வருவார்?” என்று பேசிக்கொள்கின்றார்கள். இதனால் மக்கள் நடுவில் பிளவு ஏற்படுகின்றது.
இயேசு பெத்லகேமில் பிறந்தாலும், தன் பெற்றோரோடு எகிப்துக்குச் சென்று, தன்னைக் கொல்லமுயன்ற ஏரோது இறந்த பிறகு நாசேரத்தில் குடியேறி, நசரேயன் என அழைக்கப்பட்டார் (மத் 2: 13-23). இவையெல்லாம் அவரை ஏற்றுக்கொள்ள மறுத்தவர்களுக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. மேலும் கலிலேயாவிலிருந்துதான் இறைவாக்கினர்கள் எலியாவும் (1 அர 17: 1), யோனாவும் (2 அர 14: 25) வந்திருந்தார்கள். இவை எதுவுமே தெரியாமல், இயேசுவை அவருடைய வெளித்தோற்றத்தைப் பார்த்து தலைமைக் குருக்களும் பரிசேயர்களும் பேசிய போதுதான், நிக்கதேம் அவர்களிடம், “ஒருவரது வாக்குமூலத்தைக் கேளானது, அவர் என்ன செய்தாரென்று அறியாது ஒருவருக்குத் தீர்ப்பளிப்பது நமது சட்டப்படி முறையாகுமா?” என்கிறார். நாமும்கூட ஒருவரை முழுமையாக அறியாமல், முன்சார்பு எண்ணத்தோடு தீர்ப்பிடுகின்றோம். இத்தகைய போக்கை நாம் நம்மிடமிருந்து அகற்றுவோம்.
சிந்தனைக்கு:
ஒருவரைப் பற்றி முழுமையாக அறியாமல், அவரைப் பற்றித் தீர்ப்பிடுவது குற்றம்.
முன்சார்ப்பு எண்ணங்களோடு வாழ்வது முழுமையான வாழ்வாக இருக்காது.
நீதியின்படி தீர்ப்பிடுங்கள் (இச 1: 16).
ஆன்றோர் வாக்கு:
‘முன்சார்பு எண்ணம் என்பது அறியாமையின் குழந்தை’ என்பார் வில்லியம் ஹஸ்லிட் என்ற அறிஞர். எனவே, ஒருவரைத் திறந்த மனத்தோடு ஏற்கப் பழகி, இறைவனுக்குகந்த வாழ்க்கை வாழ்ந்து, இறையருளை நிறைவாகப் பெறுவோம்.
Source: New feed