நிலைவாழ்வு அளிக்கப் பொங்கி எழும் ஊற்று கிறிஸ்துவே.
யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 4: 5-42
அக்காலத்தில் இயேசு சமாரியாவில் உள்ள சிக்கார் என்னும் ஊருக்கு வந்து சேர்ந்தார். யாக்கோபு தம் மகன் யோசேப்புக்குக் கொடுத்த நிலத்துக்கு அருகே அந்த ஊர் இருந்தது. அவ்வூரில் யாக்கோபின் கிணறும் இருந்தது. பயணத்தால் களைப்புற்றிருந்த இயேசு கிணற்று ஓரமாய் அமர்ந்தார். அப்போது ஏறக்குறைய நண்பகல். அவருடைய சீடர் உணவு வாங்குவதற்காக நகருக்குள் சென்றிருந்தனர். சமாரியப் பெண் ஒருவர் தண்ணீர் மொள்ள வந்தார். இயேசு அவரிடம், ‘‘குடிக்க எனக்குத் தண்ணீர் கொடும்” என்று கேட்டார். அச்சமாரியப் பெண் அவரிடம், ‘‘நீர் யூதர்; நானோ சமாரியப் பெண். நீர் என்னிடம் குடிக்கத் தண்ணீர் கேட்பது எப்படி?” என்று கேட்டார். ஏனெனில் யூதர்கள் சமாரியரோடு பழகுவதில்லை. இயேசு அவரைப் பார்த்து, ‘‘கடவுளுடைய கொடை எது என்பதையும் ‘குடிக்கத் தண்ணீர் கொடும்’ எனக் கேட்பவர் யார் என்பதையும் நீர் அறிந்திருந்தால் நீரே அவரிடம் கேட்டிருப்பீர்; அவரும் உமக்கு வாழ்வு தரும் தண்ணீரைக் கொடுத்திருப்பார்” என்றார். அவர் இயேசுவிடம், ‘‘ஐயா, தண்ணீர் மொள்ள உம்மிடம் ஒன்றுமில்லை; கிணறும் ஆழமானது. அப்படியிருக்க வாழ்வு தரும் தண்ணீர் உமக்கு எங்கிருந்து கிடைக்கும்? எம் தந்தை யாக்கோபைவிட நீர் பெரியவரோ? அவரே எங்களுக்கு இக்கிணற்றை வெட்டித் தந்தார். அவரும் அவருடைய மக்களும் கால்நடைகளும் இதிலிருந்துதான் தண்ணீர் குடிப்பது வழக்கம்” என்றார். இயேசு அவரைப் பார்த்து, ‘‘இந்தத் தண்ணீரைக் குடிக்கும் ஒவ்வொருவருக்கும் மீண்டும் தாகம் எடுக்கும். நான் கொடுக்கும் தண்ணீரைக் குடிக்கும் எவருக்கும் என்றுமே தாகம் எடுக்காது; நான் கொடுக்கும் தண்ணீர் அதைக் குடிப்பவருக்குள் பொங்கி எழும் ஊற்றாக மாறி நிலைவாழ்வு அளிக்கும்” என்றார். அப்பெண் அவரை நோக்கி, ‘‘ஐயா, அத்தண்ணீரை எனக்குக் கொடும்; அப்போது எனக்குத் தாகமும் எடுக்காது; தண்ணீர் மொள்ள நான் இங்கு வரத் தேவையும் இருக்காது” என்றார். இயேசு அவரிடம், ‘‘நீர் போய், உம் கணவரை இங்கே கூட்டிக்கொண்டு வாரும்” என்று கூறினார். அப்பெண் அவரைப் பார்த்து, ‘‘எனக்குக் கணவர் இல்லையே” என்றார். இயேசு அவரிடம், ‘‘ ‘எனக்குக் கணவர் இல்லை’ என நீர் சொல்வது சரியே. உமக்கு ஐந்து கணவர்கள் இருந்தார்கள் என்றாலும் இப்போது உம்முடன் இருப்பவர் உம் கணவர் அல்ல. எனவே நீர் கூறியது உண்மையே” என்றார். அப்பெண் அவரிடம், ‘‘ஐயா, நீர் ஓர் இறைவாக்கினர் எனக் கண்டுகொண்டேன். எங்கள் முன்னோர் இம்மலையில் வழிபட்டு வந்தனர். ஆனால் நீங்கள் எருசலேமில்தான் வழிபட வேண்டும் என்கிறீர்களே” என்றார். இயேசு அவரிடம், ‘‘அம்மா, என்னை நம்பும். காலம் வருகிறது. அப்போது நீங்கள் தந்தையை இம்மலையிலோ எருசலேமிலோ வழிபடமாட்டீர்கள். யாரை வழிபடுகிறீர்கள் எனத் தெரியாமல் நீங்கள் வழிபடுகிறீர்கள். ஆனால் நாங்கள் தெரிந்து வழிபடுகிறோம். யூதரிடமிருந்தே மீட்பு வருகிறது. காலம் வருகிறது; ஏன், வந்தேவிட்டது! அப்போது உண்மையாய் வழிபடுவோர் தந்தையை அவரது உண்மை இயல்புக்கேற்ப உள்ளத்தில் வழிபடுவர். தம்மை வழிபடுவோர் இத்தகையோராய் இருக்கவே தந்தை விரும்புகிறார். கடவுள் உருவமற்றவர். அவரை வழிபடுவோர் அவரது உண்மை இயல்புக்கு ஏற்ப உள்ளத்தில்தான் வழிபடவேண்டும்” என்றார். அப்பெண் அவரிடம், ‘‘கிறிஸ்து எனப்படும் மெசியா வருவார் என எனக்குத் தெரியும். அவர் வரும்போது அனைத்தையும் எங்களுக்கு அறிவிப்பார்” என்றார். இயேசு அவரிடம், ‘‘உம்மோடு பேசும் நானே அவர்” என்றார். அந்நேரத்தில் இயேசுவின் சீடர் திரும்பி வந்தனர். பெண் ஒருவரிடம் அவர் பேசிக்கொண்டிருப்பதைக் கண்டு அவர்கள் வியப்புற்றனர். எனினும் ‘‘என்ன வேண்டும்?” என்றோ, ‘‘அவரோடு என்ன பேசுகிறீர்?” என்றோ எவரும் கேட்கவில்லை. அப்பெண் தம் குடத்தை விட்டுவிட்டு ஊருக்குள் சென்று மக்களிடம், ‘‘நான் செய்த எல்லாவற்றையும் என்னிடம் சொன்ன மனிதரை வந்து பாருங்கள். அவர் மெசியாவாக இருப்பாரோ!” என்றார். அவர்கள் ஊரிலிருந்து புறப்பட்டு இயேசுவிடம் வந்தார்கள். அதற்கிடையில் சீடர், ‘‘ரபி, உண்ணும்” என்று வேண்டினர். இயேசு அவர்களிடம், ‘‘நான் உண்பதற்குரிய உணவு ஒன்று உண்டு. அது உங்களுக்குத் தெரியாது” என்றார். ‘‘யாராவது அவருக்கு உணவு கொடுத்திருப்பார்களோ” என்று சீடர்கள் தங்களிடையே பேசிக் கொண்டார்கள். இயேசு அவர்களிடம், ‘‘என்னை அனுப்பியவரின் திருவுளத்தை நிறைவேற்றுவதும் அவர் கொடுத்த வேலையைச் செய்து முடிப்பதுமே என் உணவு. ‘நான்கு மாதங்களுக்குப் பின்தான் அறுவடை’ என்னும் கூற்று உங்களிடையே உண்டே! நிமிர்ந்து வயல்வெளிகளைப் பாருங்கள். பயிர் முற்றி அறுவடைக்குத் தயாராய் உள்ளது. அறுப்பவர் கூலி பெறுகிறார்; நிலைவாழ்வு பெறுவதற்காக மக்களைக் கூட்டிச் சேர்க்கிறார். இவ்வாறு விதைப்பவரும் அறுப்பவரும் ஒருமிக்க மகிழ்ச்சியடைகின்றனர். நீங்கள் உழைத்துப் பயிரிடாததை அறுவடை செய்ய நான் உங்களை அனுப்பினேன். மற்றவர்கள் உழைத்தார்கள்; ஆனால் நீங்கள் அந்த உழைப்பின் பயனை அடைந்தீர்கள். இவ்வாறு ‘விதைப்பவர் ஒருவர்; அறுவடை செய்பவர் வேறு ஒருவர்’ என்னும் கூற்று உண்மையாயிற்று” என்றார். ‘நான் செய்தவை அனைத்தையும் என்னிடம் சொன்னார்’ என்று சான்று பகர்ந்த பெண்ணின் வார்த்தையை முன்னிட்டு அவ்வூரிலுள்ள சமாரியர் பலர் இயேசுவிடம் நம்பிக்கை கொண்டனர். சமாரியர் அவரிடம் வந்தபோது அவரைத் தங்களோடு தங்குமாறு கேட்டுக்கொண்டனர். அவரும் அங்கு இரண்டு நாள் தங்கினார். அவரது வார்த்தையை முன்னிட்டு இன்னும் பலர் அவரை நம்பினர். அவர்கள் அப்பெண்ணிடம், ‘‘இப்போது உன் பேச்சைக் கேட்டு நாங்கள் நம்பவில்லை; நாங்களே அவர் பேச்சைக் கேட்டோம். அவர் உண்மையிலே உலகின் மீட்பர் என அறிந்து கொண்டோம்” என்றார்கள்.
ஆண்டவரின் அருள்வாக்கு.
——————————————
தவக்காலம் மூன்றாம் ஞாயிறு
I விடுதலைப் பயணம் 17: 3-7
II உரோமையர் 5: 1-2, 5-8
III யோவான் 4: 5-42
பாவிகளுக்கு வாழ்வளிக்கும் தண்ணீரைத் தரும் மெசியாவாம் இயேசு
நிகழ்வு
சில மாதங்களுக்கு முன்பாக திருத்தந்தை பிரான்சிஸ் உரோமையிலுள்ள ஒரு பங்கிற்குச் சென்றிருந்தார். பங்கில் திருப்பலியை நிறைவேற்றிவிட்டு, அங்கிருந்த சிறுவர் சிறுமியரிடம், “உங்களுக்கு என்னிடத்தில் ஏதாவது கேள்வி கேட்கவேண்டும் என்றால், கேட்கலாம்” என்றார். உடனே இம்மானுவேல் என்ற சிறுவன் எழுந்தான். அவனுக்கு எல்லாருக்கும் முன்பாகத் திருத்தந்தையிடம் கேள்வி கேட்பதற்குச் சற்று அச்சமாக இருந்ததால், திருத்தந்தையின் அருகில் சென்று, அவருடைய காதுகளில் மெல்லக் கிசுகிசுத்து விட்டு, தன்னுடைய இடத்தில் வந்து அமர்ந்துகொண்டான்.
கோயிலில் இருந்தவர்களெல்லாம் சிறுவன் இம்மானுவேல், திருத்தந்தையிடம் என்ன கேட்டிருப்பான் என்பதைத் தெரிந்துகொள்ள மிகவும் ஆவலோடு இருந்தார்கள். அப்பொழுது திருத்தந்தை அவர்களிடம் பேசத் தொடங்கினார். “என்னிடத்தில் வந்த சிறுவன் இம்மானுவேல் ஒரு கேள்வியைக் கேட்டுச் சென்றிருக்கின்றான். அவன் கேட்ட கேள்வி இதுதான்: ‘என்னுடைய தந்தை கடவுள்மீது நம்பிக்கை இல்லாதவர். இருந்தாலும், அவருக்குப் பிறந்த என்னையும் என்னோடு பிறந்த மூன்று சகோதர சகோதரிகளையும் திருமுழுக்குப் பெற வைத்து, இறைவழியில் வளர்த்திருக்கின்றார். அப்படிப்பட்டவர் சில நாள்களுக்கு முன்பாக இறந்துவிட்டார். இப்பொழுது அவர் விண்ணகத்தில் இருப்பாரா? பாதாளத்தில் இருப்பாரா..?’ இது குறித்து நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?”
மக்கள் யாவரும், “சிறுவன் இம்மானுவேலுவின் தந்தை விண்ணகத்தில் இருப்பார்” என்று ஒருமித்த குரலில் சொன்னார்கள். இதைத் தொடர்ந்து திருத்தந்தை பிரான்சிஸ், சிறுவன் இம்மானுவேலிடம் எல்லாருக்கும் கேட்கும் விதமாக, “இம்மானுவேல்! உன்னுடைய தந்தை கடவுள்மீது நம்பிக்கை இல்லாதவராக இருந்திருக்கலாம்; ஆனால், நீங்கள் பிறந்தபிறகு, அவர் ‘நாம்தான் கடவுள்மீது நம்பிக்கை இல்லாமல் இருந்துவிட்டோம். நம்முடைய பிள்ளைகளாவது கடவுள்மீது நம்பிக்கை கொண்டவர்களாக இருக்கட்டும்’ என்று தன்னுடைய தவற்றை உணர்ந்து, உங்களைத் திருமுழுக்குப் பெற வைத்திருக்கின்றார். அப்படிப்பட்ட ஒரு நல்ல தந்தை நிச்சயம் விண்ணகத்தில்தான் இருப்பார்” என்றார். இதைக் கேட்டு சிறுவன் இம்மானுவேல் ஆனந்தக் கண்ணீர் வடித்தான்.
செய்த குற்றத்தை உணர்ந்த பாவிகளுக்கு நிலைவாழ்வை அல்லது வாழ்வளிக்கும் தண்ணீரை இறைவன் அளிப்பார் என்ற உண்மையை இந்த நிகழ்வு எடுத்துரைக்கின்றது. தவக்காலத்தின் மூன்றாம் ஞாயிறான இன்று நாம் வாசிக்கக்கேட்ட இறைவார்த்தையும் நமக்கு இதே செய்தியைத்தான் எடுத்துக்கூறுகின்றது. நாம் அது குறித்து இப்பொழுது சிந்தித்துப் பார்ப்போம்.
பாவிகளைத் தேடிச் செல்லும் இயேசு
நற்செய்தி வாசகத்தில் இயேசுவுக்கும் சமாரியப்பெண்ணும் இடையே ஒரு சந்திப்பு அல்லது நீண்ட நெடிய உரையாடலானது நடைபெறுகின்றது. இந்தச் சந்திப்பின் முக்கியத்துவை நாம் உணர்ந்துகொள்ளவேண்டும் என்றால், இது நடந்த சூழலை நாம் தெரிந்துகொள்ளவேண்டும்.
இயேசு, சமாரியப் பெண்ணைச் சந்திப்பதற்கு முன்பாக யூதேயாவில் இருந்தார் (யோவா 3:22). அங்கிருந்து அவர் கலிலேயாவிற்குச் செல்லவிருந்தார். இங்கு நாம் கவனிக்கவேண்டிய முக்கிய செய்தி, இயேசு யூதேயாவிலிருந்து கலிலேயாவிற்குச் செல்வதற்குச் சமாரியா வழியாகச் செல்லும் பாதையைத் தேர்ந்தெடுத்துதான். ‘பிறவினத்தார் வாழுகின்ற சமாரியப் பகுதி வழியாகச் சென்றால் தாங்கள் தீட்டுப்பட்டுவிடுவோம்’ என்று கருதும் ‘தூய்மைவாதம் பேசும்’ எந்தப் பரிசேயரும் கலிலேயாவிற்குச் செல்கின்றபொழுது, சமாரியா வழியாகச் செல்வதில்லை; அவர் யோர்தான் ஆற்றங்கரை வழியாகவே செல்வார் (இத்தனைக்கும் அந்த வழியாகச் சென்றால் நீண்ட நேரம் எடுக்கும் என்றாலும்); ஆனால், பிறப்பால் உயர்ந்தவன், தாழ்ந்தவன் என்ற வேறுபாடு பார்க்காத இயேசு, சமாரியப் பகுதியாகச் சென்று, கிணற்றில் நண்பகலில் நீர் எடுக்க வந்த பாவிப்பெண்ணோடு உரையாடுகின்றார். இதுவே அவர் பாவிகளைத் தேடிவந்தார் (லூக் 19:10) என்ற உண்மையை உரக்கச் சொல்வதாக இருக்கின்றது.
பொதுவாகப் பெண்கள் கிணற்றில் நீர் எடுக்க காலையிலோ அல்லது மாலையிலோ வருவார்கள். ஆனால், நற்செய்தியில் வருகின்ற சமாரியப் பெண்ணோ நண்பகல் வேளையில் வருகின்றார். காரணம், நண்பகல் வேளையில் வந்தால், யாரும் இருக்கமாட்டார்கள். இது பாவியாகிய தனக்கு வசதியாக இருக்கும் என்று அவர் வருகின்றார். இப்படிப்பட்ட ஒரு பெண்ணைத்தான் இயேசு சந்திக்கின்றார்; அவரிடம் தண்ணீர் கேட்கின்றார்.
வாழ்வளிக்கும் தண்ணீரை அளிக்கும் இயேசு
யூதர்கள் சமாரியர்களோடு உறவு வைத்துக்கொள்வதில்லை. அப்படி அவர்கள் உறவு வைத்துக்கொண்டால் அது தீட்டு என்று கருதினார்கள் என்று மேலே பார்த்தோம். இதற்கு முக்கியமான காரணம், கிமு 722 ஆம் ஆண்டு நடந்த அசிரியப் படையெடுப்புப் பிறகு, அந்த மக்களோடு சமாரியப்பகுதியில் இருந்தவர்கள் கலப்புமணம் செய்துகொண்டார்கள் என்பதால்தான். இதற்குப் பின்பு குரு எஸ்ராவின் காலத்தில் எருசலேம் திருக்கோயில் மீண்டுமாகக் கோயில் கட்டப்பட்டபொழுதும் (எஸ் 4: 1-5) நெகேமியாவின் காலத்தில் சுற்றுச் சுவர் எழுப்பட்டபொழுதும் (நெகே 4: 1-3) சமாரியர்களின் உதவியை யூதர்கள் மறுத்தார்கள். இதனால் இரண்டு பிரிவினருக்கும் இடையே அடிக்கடி சண்டை ஏற்பட்டு, உறவு இல்லாமலே போனது. இந்நிலையில்தான் இயேசு சமாரியப்பெண்ணிடம் குடிக்கத் தண்ணீர் கேட்கின்றார்.
இயேசு அப்பெண்ணிடம் தன்னிடம் கேட்டதும், அவர், “நீர் யூதர்; நானோ சமாரியப் பெண். நீர் என்னிடம் குடிக்கத் தண்ணீர் கேட்பது எப்படி?” என்கின்றார். உடனேதான் இயேசு அவரிடம் தான் வாழ்வளிக்கும் தண்ணீரைக் கொடுப்பவர் என்று கூறுகின்றார். திருவிவிலியம் ஆண்டவரை வாழ்வளிக்கும் நீரூற்றாக எடுத்துக்கூறுகின்றது (எரே 17:13; எசே 12:3 44:3; யோவா 7: 37-39). இங்கு இயேசு தன்னை வாழ்வளிக்கும் தண்ணீரைக் கொடுப்பவர் அல்லது நிலைவாழ்வைக் கொடுப்பவர் என்று குறிப்பிடுவது நமது கவனத்திற்கு உரியதாக இருக்கின்றது. இப்பொழுது இயேசு அளிக்கும் வாழ்வளிக்கும் தண்ணீரை அல்லது நிலைவாழ்வைப் பெற நாம் என்ன செய்வது என்று சிந்தித்துப் பார்ப்போம்.
வாழ்வளிக்கும் தண்ணீரைப் பெற இயேசுவிடம் நம்பிக்கை கொள்ளவேண்டும்
இயேசு அளிக்கும் வாழ்வளிக்கும் தண்ணீரைப் பெற ஒருவர் இரண்டு செயல்களைச் செய்யவேண்டும். ஒன்று, இயேசுவை யாரென அறிந்துகொள்ளவேண்டும். இரண்டு, அறிந்த பின்பு அவர்மீது நம்பிக்கை கொள்ளவேண்டும். நற்செய்தியில் வருகின்ற சமாரியப்பெண் இயேசுவை முதலில் ஒரு யூதராகத்தான் அறிந்திருந்தார். பின்னர் அவருடைய அறிதல் ஐயா, இறைவாக்கினர், மெசியா, மீட்பர் என்று செல்கின்றது. இறுதியில் அவர் இயேசுவின்மீது நம்பிக்கை கொள்கின்றார். மற்றவர்களும் அவர்மீது நம்பிக்கை கொள்ளக் காரணமாக இருக்கின்றார். இவ்வாறு பாவியாக இருந்த அப்பெண்மணி இயேசுவின்மீது நம்பிக்கை வைப்பதன்மூலம் வாழ்வளிக்கும் தண்ணீரைப் பெற்றுக்கொள்பவராக இருக்கின்றார்.
இயேசுவின் வழியில் நடக்கின்ற நாம், இயேசுவை யாரென அறிந்து, அவர்மீது ஆழமான நம்பிக்கை கொண்டு வாழ்கின்றோமா? சிந்தித்துப் பார்ப்போம். புனித பவுல் உரோமையருக்கு எழுதிய மடலில் இவ்வாறு கூறுவார்: “ ‘இயேசுவே ஆண்டவர்’ என வாயார அறிக்கையிட்டு இறந்த அவரைக் கடவுள் உயர்த்தெழச் செய்தார் என உள்ளூர நம்பினால் மீட்புப் பெறுவீர்கள்.” (உரோ 10:9). ஆகையால், நாம் இயேசுவில் நம்பிக்கைகொண்டு அவர் தருகின்ற வாழ்வளிக்கும் தண்ணீராம் நிலைவாழ்வைப் பெற்றுக்கொள்வோம்.
சிந்தனை
‘அவரிடம் நம்பிக்கை கொள்ளும் அனைவரும் நிலைவாழ்வு பெறுவர்’ (யோவா 3:15) என்பார் யோவான் நற்செய்தியாளர். ஆகையால், நாம் வாழ்வு தரும் தண்ணீராம் நிலைவாழ்வை அளிக்கும் இயேசுவிடம் ஆழமான நம்பிக்கை கொண்டு வாழ்வோம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.
Source: New feed