இத்தீய தலைமுறையினர்க்கு யோனாவின் அடையாளத்தைத் தவிர வேறு அடையாளம் எதுவும் கொடுக்கப்படமாட்டாது.
+லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 11: 29-32
அக்காலத்தில் மக்கள் வந்து கூடக்கூட இயேசு கூறியது: இந்தத் தீய தலைமுறையினர் அடையாளம் கேட்கின்றனர். இவர்களுக்கு யோனாவின் அடையாளத்தைத் தவிர வேறு அடையாளம் எதுவும் கொடுக்கப்படமாட்டாது.
யோனா நினிவே மக்களுக்கு அடையாளமாய் இருந்ததைப் போன்று மானிடமகனும் இந்தத் தலைமுறையினருக்கு அடையாளமாய் இருப்பார். தீர்ப்பு நாளில் தென்னாட்டு அரசி இத்தலைமுறையினரோடு எழுந்து இவர்களைக் கண்டனம் செய்வார்.
ஏனெனில் அவர் சாலமோனின் ஞானத்தைக் கேட்க உலகின் கடைக்கோடியிலிருந்து வந்தவர். ஆனால் இங்கிருப்பவர் சாலமோனிலும் பெரியவர் அல்லவா! தீர்ப்பு நாளில் நினிவே மக்கள் இத்தலைமுறையினரோடு எழுந்து இவர்களைக் கண்டனம் செய்வார்கள். ஏனெனில் யோனா அறிவித்த செய்தியைக் கேட்டு அவர்கள் மனம் மாறியவர்கள். ஆனால் இங்கிருப்பவர் யோனாவைவிடப் பெரியவர் அல்லவா!
இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.
மையசிந்தனை .
அடையாளம் கேட்க அற்ப மானிடர்கள்!
மறையுரை .
சிறுவன் ஒருவன் இருந்தான். அவனுக்குத் திடிரென்று ஒருநாள் சந்தேகம் வந்தது. அக்காவிடம் கேட்டான். “கடவுளை நாம் பார்க்க முடியுமா?”. அக்கா சொன்னாள், “அவரெங்கோ விண்ணகத்தில் இருக்கிறார்… நாமெங்கே பார்க்க முடியும்?”. அதன்பிறகு அவன் தன் அம்மாவிடம் கேட்டான். “அவர் நம் இதயத்துக்குள்தான் இருக்கிறார்… அதனால் நாம் பார்க்க முடியாது.” என்றார் அவனுடைய அம்மா. பையனுக்கு ஏமாற்றம்.
பிறகு, தன் தாத்தாவிடம் கேட்டான். “நீங்கள் கடவுளைப் பார்த்திருக்கிறீர்களா தாத்தா?”. அவர் சொன்னார். “நான் எதைப் பார்த்தாலும் கடவுளைத்தான் பார்க்கிறேன். பூக்களின் சிரிப்பில், சூரியனின் உதயத்தில், பறவைகளின் பாட்டில், குழந்தைகளின் பேச்சில், ஏழையரின் புன்னகையில், இப்படி எல்லாவற்றிலும் கடவுளைப் பார்க்கிறேன்.” சிறுவனுக்கு இப்போது மகிழ்ச்சி தாங்க முடியவில்லை. தன்னால் கடவுளைப் பார்க்க முடியும் என்ற சந்தோசத்தில் அவன் துள்ளிக் குதித்தான்.
காணும் திசையெங்கும் கடவுளின் அதிசயம் இருக்கின்றது. அப்படி இருக்கையில், வேறோர் அதிசயத்தை/ அடையாளத்தைக் கேட்பது எந்தவிதத்தில் நியாயம்?. நற்செய்தியில் பரிசேயர்கள் அடையாளம் கேட்கின்றனர். அவர்களுக்கு இயேசு அளித்த பதில் என்ன? அப்பதிலின் மூலம் நாம் அறிந்துகொள்ளவேண்டிய உண்மையென்ன என்று சிந்தித்துப் பார்ப்போம்.
1) இயேசுவை ஏற்றுக்கொள்ள மறுத்த பரிசேயக் கூட்டம்.
இயேசு தன்னுடைய பணிவாழ்வில் பல்வேறு அருமடையாளங்களையும் வல்ல செயல்களையும் நிகழ்த்திக் காட்டி, தான்தான் இறைமகன் என்பதை மக்களுக்கு நிரூபித்துக்காட்டினார். அப்படியிருந்தும் அவரை நம்பவும் ஏற்றுக்கொள்ளவும் மறுத்த பரிசேயக் கூட்டம் அவரிடம் அடையாளத்தைக் கேட்கின்றது. பரிசேயர்கள் கேட்டுக்கொண்டதுபோல் இயேசு அடையாளத்தை நிகழ்த்தி இருந்தாலும், அவர்கள் அவரை ஏற்றுக்கொண்டிருக்க மாட்டார்கள், அவரை அவர்கள் நம்பியிருக்கவும் மாட்டார்கள். ஏனென்றால், அவர்களுடைய நோக்கம் இயேசுவை எப்படியாவது ஒழித்துக்கட்ட வேண்டும் என்பதுதான். அதனால்தான் அவர்கள் இதுபோன்ற குதர்கமான கேள்விகளை அவரிடம் கேட்டார்கள். இயேசு அவர்களுடைய எண்ணத்தை அறிந்து அவர்களிடம், “இவர்களுக்கு யோனாவின் அடையாளத்தைத் தவிர வேறு அடையாளம் எதுவும் கொடுக்கப்பட மாட்டாது’ என்கின்றார்.
2) யோனாவின் அடையாளம்.
தன்னிடம் அடையாளம் கேட்டவர்களுக்கு இயேசு, யோனாவின் அடையாளத்தைக் கொடுத்ததற்கு மிக முக்கியமான காரணம், இயேசுவின் பாடுகளும் அவருடைய மரணமும் உயிர்ப்பும் இறைவாக்கினர் யோனாவோடு ஒத்துப் போனதால்தான். யோனா மீனின் வயிற்றில் மூன்று நாட்கள் இருந்து வெளியே வந்தார். இயேசுவும் மூன்று நாட்கள் கல்லறையினுள்ளே இருந்து வெற்றி வீரராய் உயிர்த்தெழுந்தார். இதில் இன்னொரு முக்கியமானதொரு விடயம், யோனா அறிவித்த செய்தியைக் கேட்டு, புறவினத்து மக்களாகிய நினிவே நகர மக்கள் மனம்மாறினார்கள். ஆனால், யோனாவை விட பெரியவரான இயேசு அறிவித்த நற்செய்தியைக் கேட்டு ‘தேர்ந்தெடுக்கப்பட்ட மக்களினம்’ என அழைக்கப்பட்ட யூதர்கள் மனம்மாறாமல் இருந்தார்கள்.
3) சாலமோனின் அடையாளம்.
இயேசு, இறைவாக்கினர் யோனாவைக் குறித்துப் பேசிவிட்டு, சாலமோன் அரசரைக் குறித்துப் பேசுகின்றார். இயேசு சாலமோனைக் குறித்துப் பேசுவதற்கு மிக முக்கியமான காரணம், அவரிடம் வெளிப்பட்ட ஞானம்தான். அவரிடம் வெளிப்பட்ட ஞானத்தைக் குறித்துக் கேள்விப்பட்டு, தென்னாட்டு அரசி அவரிடம் வருகின்றார் (1 அர 10). இந்த தென்னாட்டு அரசி யூதர் கிடையாது, ஒரு புறவினத்துப் பெண்மணி. அப்படியிருக்கையில் சாலமோனை விடப் பெரியவரான இயேசுவின் வார்த்தைகளைக் கேட்டும், அவரை நம்பாமல் இருந்ததால், இயேசு அவர்களைக் கடுமையாகச் சாடுகின்றார்.
4) நம்பிக்கையற்ற தன்மைக்கு கிடைக்கும் தண்டனை.
யோனாவின் போதனையைக் கேட்டு புறவினத்து மக்களான நினிவே நகர மக்கள் மனம்மாறியிருக்கும்போது, சாலமோன் அரசரின் ஞானத்தைக் கேட்க தென்னாட்டு அரசி வந்திருக்கும்போது, இவர்கள் எல்லாரையும்விட உயர்ந்த தன்னுடைய போதனையைக் கேட்டு மனம்மாறாமல் இருந்த யூதர்களுக்கு எதிராகத் தீர்ப்பு நாளில் நினிவே நகர மக்களும் தென்னாட்டு அரசியும் அவர்களுக்கு எதிராகக் கண்டங்களைத் தெரிவிப்பார்கள் என்கின்றார் இயேசு. யூதர்கள் இயேசுவை இறைமகனாக ஏற்றுக்கொள்ளவும் இல்லை, நம்பவும் இல்லை (யோவா 1:11) அதனால்தான் அவர்களுக்கு அப்படியொரு தண்டனை கிடைக்கும் என்கின்றார் இயேசு.
அனுதினமும் இறைவார்த்தையைக் கேட்டும் அவருடைய நற்கருணை விருந்தில் கலந்துகொண்டும் இருந்துவிட்டு அவரிடம் நம்பிக்கை கொள்ளாமல் இருந்தால், யூதர்களுக்குக் கிடைத்த அதே தண்டனை நமக்கும் கிடைக்கும் என்பது உறுதி.
சிந்தனை.
‘அவர்களது நம்பிக்கையின்மையைக் கண்டு வியப்புற்று, உடல் நலமற்றோர் சிலர்மேல் கைகளை வைத்துக் குணமாக்கியதைத் தவிர, வேறு வல்ல செயல்கள் எதையும் இயேசுவால் –அவரால் – செய்ய இயலவில்லை’ என்கின்றார் மாற்கு நற்செய்தியாளர் (மாற் 6:3-6). நம்மிடம் நம்பிக்கையின்மை இருக்கும் பட்சத்தில் கடவுளுடைய ஆசியைப் பெறுவது மிகவும் கடினம். ஆகவே, இறைவனிடம் ஆழமான நம்பிக்கை கொண்டு வாழ்வோம். அதன்வழியாக இறையருள் நிறைவாய்ப் பெறுவோம்.
Source: New feed