அப்போது யூதாவில் உள்ளவர்கள் மலைகளுக்குத் தப்பி ஓடட்டும்”
2008 ஆம் ஆண்டு, ஆகஸ்ட் மாதம், ஒரிசா மாநிலத்தில் உள்ள கந்தமால் மாவட்டத்தில், கிறிஸ்தவர்களுக்கு எதிராக நடைபெற்ற மதக் கலவரத்தை நாம் அவ்வளவு எளிதாக மறந்துவிட முடியாது. 2008 ஆம் ஆண்டு, ஆகஸ்ட் மாதம் 23 ஆம் நாள், ஜாலேஸ்பட் (Jalespate) என்ற நகரில் இருந்த லக்ஷ்மானந்தா சரஸ்வதி என்ற மதவெறியனை யாரோ ஒரு மர்ம நபர் கொன்றுபோட்டுவிட்டார். அவனைக் கொன்றது கிறிஸ்தவர்கள்தான் என நினைத்துகொண்டு இந்து மத வெறியர்கள் கந்தமால் மாவட்டம் முழுவதும் இருந்த கிறிஸ்தவர்களுக்கு எதிரான கலவரத்தில் ஈடுபட்டார்கள்.
ஆகஸ்ட் 24 ஆம் நாள், அதாவது லக்ஷ்மானந்தா சரஸ்வதி கொல்லப்பட்ட மறுதினம், அவனுடைய உடலை வானகத்தில் தூக்கிக்கொண்டு, அவனுடைய சொந்த ஊரான ரைக்காவில் (Raika) புதைக்க வைத்தார்கள். வரும் வழியெங்கும் அவர்கள், எங்கெல்லாம் கிறிஸ்தவர்களுடைய வீடுகள், கடைகள், ஆலயங்கள் இருந்தனவோ அவற்றையெல்லாம் தீக்கிரையாக்கிப் போட்டுக்கொண்டு வந்தார்கள்; கண்ணில் பட்ட கிறிஸ்தவர்களையும் அவர்கள் விட்டுவைக்கவில்லை.
மாலை 6 மணிக்கு லக்ஷ்மானந்தா சரஸ்வதியின் உடல் ரைக்காவை வந்தடைந்தது. அவனை அவர்கள் அடக்கம் செய்துவிட்டு, அங்கிருந்த கிறிஸ்தவ இல்லங்களையும் அவர்களுடைய கடைகளையும் தீயிட்டுக் கொளுத்தத் தொடங்கினார்கள். ரைக்காவில் மிகப்பெரிய தேவாலயம் ஒன்று இருந்தது. அதற்குள்ளே புகுந்த மதவெறியர்கள், அங்கிருந்த நற்கருணைப் பேழையையும் சிரூபங்களையும் உடைத்துப் போட்டு ஆலயத்திற்குத் தீ வைத்தார்கள்.
இவையெல்லாம் நடக்கும் என்று தெரிந்து ரைக்காவில் இருந்த கிறிஸ்தவர்கள் காட்டுக்குள் ஓடி மறைந்துகொண்டார்கள். ஆனால் ரைக்காவில் பள்ளிக்கூடமும் விடுதியும் அனாதை இல்லமும் நடத்தி வந்த தூய வின்சென்ட் தே பவுல் சபையைச் சார்ந்த அருட்சகோதரிகள் (Daughters of charity of St. Vincent de paul) விடுதியில் உள்ள பிள்ளைகளையும் அனாதைகளையும் விட்டுவிட்டு தாங்கள் மட்டும் காட்டுக்குள் ஓடி, தப்பித்துக்கொள்வது நல்லதல்ல என்று, மடத்திற்குள்ளாகவே இருந்து, நற்கருணை ஆண்டவரிடம் உருக்கமாக ஜெபித்துக் கொண்டிருந்தார்கள். நேரம் ஆக ஆக அவர்களை பயம் அதிகமாகத் தொற்றிக்கொண்டது. அப்படிப்பட்ட சூழலிலும் அவர்கள் நற்கருணை ஆண்டவருக்கு முன்பாக உருக்கமாக வேண்டி வந்தார்கள்.
இரவு 12 மணி இருக்கும். மதவெறிக் குப்பல் கன்னியர் மடத்தில் உள்ள கன்னியர்களைப் பிடித்துக் கொல்வதற்காக கொலை வெறியோடு கன்னியர் மடத்தின் வாசலை நெருங்கியது. அப்போது அந்தக் கூட்டத்தில் இருந்த யாரோ ஒருவன், “கதவின் வெளிப்பக்கம் பூட்டுப்போட்டிருக்கிறது, அதனால் உள்ளே யாரும் இருப்பதற்கு வாய்ப்பில்லை, எல்லாரும் பயந்து ஓடிவிட்டார்கள் என நினைக்கிறேன்” என்றான். அவன் சொன்னதை மற்றவர்கள் ஆமோதிப்பதுபோல், “ஆமாம், அவர்கள் பயந்து ஓடிவிட்டார்கள். அதனால் திரும்பி விடுவோம்” என்று திரும்பிப் போனார்கள். எல்லாவற்றையும் சிற்றாலயத்தினுள்ளே இருந்து கேட்டுக்கொண்டிருந்த அருட்சகோதர்கள், “நற்கருணை ஆண்டவர்தான் நம்மை எதிரிகளிடமிருந்து காப்பாற்றினார்” என்று அவருக்கு செலுத்தித் தொடங்கினார்கள்.
உயிருக்கு ஆபத்து வந்த வேளையில், ரைக்காவில் இருந்த அருட்சகோதரிகள் நற்கருணை ஆண்டவரின் துணையை நாடியதால் காப்பாற்றப்பட்டார்கள் என்ற செய்தி, உண்மையில் நம்மை ஆச்சரியப்பட வைக்கிறது.
நற்செய்தி வாசகத்தில், ஆண்டவர் இயேசு எருசலேம் நகருக்கு நேர இருந்த அழிவினைப் பற்றிக் குறிப்பிடுகின்றார். அப்படிக் குறிப்பிடும் அவர் சொல்லக்கூடிய, “யூதேயாவில் உள்ளவர்கள் மலைகளுக்குத் தப்பி ஓடட்டும்” என்ற வார்த்தையை மட்டும் நம்முடைய இன்றைய சிந்தனைக்கு எடுத்துக்கொள்வோம்.
இஸ்ரயேல் மக்கள் ஆண்டவரையும் அவருடைய வழிகளையும் புறக்கணித்ததால், அவர்கள் அழிவினைச் சந்திப்பார்கள் என்று இயேசு எடுத்துச் சொல்கின்றார். அப்படிச் சொல்லும்போது, “யூதேயாவில் உள்ளவர்கள் மலைகளுக்குத் தப்பி ஓடட்டும்; நடுவில் உள்ளவப்ர்கள் வெளியேறட்டும்” என்கின்றார். இயேசு சொன்ன இந்த வார்த்தைகளை நினைவில் கொண்டு, யாராரெல்லாம் யூதேயாவின் மீதான உரோமையர்களின் படையெடுப்பின்போது மலைகளுக்குத் தப்பி ஓடினார்களோ, அவர்களெல்லாம் உயிர்பிழைத்தார்கள். அப்படி மலைகளுக்குத் தப்பி ஓடாமல், நகரில் இருந்தவர்கள் எல்லாம் உரோமையர்களால் கொன்றொழிக்கப்பட்டார்கள். இது யூத வரலாற்று ஆசிரியரான ஜோசேப்புஸ் சொல்லக்கூடிய செய்தி.
இங்கே மலை என்று இயேசு குறிப்பிடுவதை, ‘எல்லாம் வல்ல இறைவன்’ என்றுகூட எடுத்துக்கொள்ளலாம். மேலே சொல்லப்பட்ட நிகழ்வில் வரும் அருட்சகோதரிகள் போன்று, யாராரெல்லாம் இறைவனிடம் தஞ்சம் அடைகின்றாரோ அவர்கள் எல்லாம் ஆபத்திலிருந்து காப்பாற்றப்படுவார்கள். அப்படி இறைவனிடம் தஞ்சம் அடையாமல், அவருடைய வார்த்தையைக் கேட்டு நடக்காதவர்கள் அழிவைச் சந்திப்பார்கள் என்பது உறுதி.’
Source: New feed