பார்வை பெறும்; உமது நம்பிக்கை உம்மை நலமாக்கிற்று”
அந்த நகரில் பீட்டர் என்ற இளைஞன் ஒருவன் இருந்தான். ஒருநாள் அவன் தன்னுடைய காரில் நகரத்தைவிட்டு வெளியே சென்றான். ஒரு குறிப்பிட்ட இடத்தைக் கண்டுபிடிப்பதற்காக அவன் கூகுல் மேப்பில் தேடினான். அதற்குள் அவனுடைய கார் தவறுதலாக ஒரு சேற்றுப் பள்ளத்தில் இறங்கிவிட்டது. காருக்கு ஒன்றும் சேதமில்லை. ஆனாலும் காரின் சக்கரம் சேற்றில் சிக்கிக்கொண்டது. அவன் எவ்வளவோ முயன்றும்கூட அவனால் சேற்றிலிருந்து காரை எடுக்கமுடியவில்லை. இதனால் அவன் பக்கத்தில் இருந்த பண்ணைக்குச் சென்று உதவி கேட்டான்.
பண்ணையிலிருந்து வெளியே வந்த ஒரு விவசாயி காரைப் பார்த்துவிட்டு, “என் ஜாக் இந்த வேலையை எளிதாகச் செய்துவிடுவான்” என்றார். பின்னர் அவர் அருகில் கட்டியிருந்த தனது கோவேறு கழுதையைக் காண்பித்தார். பீட்டருக்கு நம்பிக்கை இல்லை. இருந்தாலும் வேறு வழியில்லை என்பதற்காக விவசாயினுடைய கழுதையையே உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தான். விவசாயி தனது கோவேறு கழுதையைக் கூட்டி வந்தார். அதைக் காருக்குப் பின்னால் கட்டினார்.
பின்பு விவசாயி, “பிளாக்கி நன்றாக இழு!, ராக்கி நன்றாக இழு!, டாமி நன்றாக இழு!” என்று மீண்டும் மீண்டும் கத்தினார். கடைசியாக, “ஜாக்! வேகமாக இழு!” என்று கத்தினார். உடனே அந்த கோவேறுக் கழுதை காரை ஒரே இழுப்பில் வெளியே கொண்டு வந்துவிட்டது. பீட்டருக்கு ஆச்சரியம் தாங்கமுடியவில்லை. தன்னுடைய காரை சேற்றுப் பள்ளத்திலிருந்து வெளியே கொண்டு வந்து சேர்த்ததற்காக விவசாயிக்கு நன்றி கூறினார். ஆனால் அவருக்கு ஒன்று மட்டும் புரியவில்லை.
பீட்டர் விவசாயியைப் பார்த்துக் கேட்டார், “முதலில் பிளாக்கி, ராக்கி, டாமி என்று வேறு வேறு பெயர்களைச் சொல்லி இழுக்கச் சொன்னீர்கள். கடைசியாக ஜாக்கியின் பெயரைச் சொல்லி இழுக்கச் சொன்னீர்களே, ஏன்?”. விவசாயி மெல்ல சிரித்துக்கொண்டே சொன்னார், “எனது ஜாக்கிற்கு கண் தெரியாது. இன்னும் பலபேர் தன்னுடைய சேர்ந்து இழுக்கிறார்கள் என்று அவனை நம்ப வைப்பதற்குத்தான் அப்படி வேறு வேறு பெயர்களைச் சொன்னேன். இன்னும் சில பேர் அவனுடைய சேர்ந்து இழுக்கிறார்கள் என்று அவன் நம்பியதால்தான் அவனால் இந்தக் காரை வெளியே இழுக்க முடிந்தது”.
ஒரு சாதாரண கோவேறு கழுதையான ஜாக், தன்னோடு சேர்ந்து மற்றவர்களும் இழுக்கிறார்கள் என்ற நம்பியதால்தான், அதனால் காரை சேற்றுப் பள்ளத்திலிருந்து வெளியே கொண்டுவர முடிந்தது. நாமும் நம்முடைய வாழ்வில் எதை செய்தாலும் நம்பிக்கையோடு செய்தால் அதில் வெற்றிபெறுவோம் என்பது உறுதி.
நற்செய்தி வாசகத்தில், ஆண்டவர் இயேசு எரிக்கோ நகரை நெருங்கி வந்துகொண்டிருக்கும்போது, பாதையோரம் அமர்ந்து பிச்சை எடுத்துக் கொண்டிருந்த பார்வையற்ற ஒருவர், இயேசு அவ்வழியாக வருகின்றார் என்று கேள்விப்பட்டு தனக்குப் பார்வை கிடைக்கவேண்டும் என்பதற்காக, “தாவீதின் மகனே, எனக்கு இரங்கும்” என்று கத்துகிறார். அப்போது இயேசுவைச் சூழ்ந்து வந்துகொண்டிருந்த கூட்டமோ, அவரைக் கத்தவேண்டாம் என்று அதட்டுகிறது. ஆனாலும் அந்த பார்வையற்ற மனிதர், இன்னும் உரக்கக் கத்தி, இயேசுவின் கவனத்தை ஈர்த்து கடைசியில் பார்வையும் பெறுகின்றார்.
இஸ்ரயேல் சமூகத்தைப் பொறுத்தளவில் பார்வையின்மையோ அல்லது பார்வைக் குறைபாடோ குணப்படுத்த முடியாத ஒன்றாகவே கருதப்பட்டது. எனவே, பார்வையற்றவர்கள் பெரும்பாலும் பிச்சை எடுத்து உண்ணவேண்டிய நிலைக்குத் தான் தள்ளப்பட்டார்கள். நற்செய்தியில் வருகின்ற மனிதரும் அப்படித்தான் பிச்சை எடுத்து வாழ்ந்து வருகின்றார். ஆனால் இவர் பிறவிக் குருடர் இல்லை, இடையில் பார்வையிழந்தவர் என்பது இவருடைய வார்த்தைகளில் இருந்து தெரியவருகிறது. தன்னுடைய வாழ்வில் எல்லாம் முடிந்துபோய்விட்டது, இனிமேலும் திரும்பப் பார்வை பெறுவதற்கு வாய்ப்பே இல்லை என்று இவர் நினைத்துக் கொண்டிருந்த தருணத்தில்தான், இயேசு இவர் இருக்கும் பகுதி வழியாக வருகின்றார்.
இயேசு செய்த அருமடையாளங்களைப் பற்றிக் கேட்டு, அவர்தான் மெசியா என நினைத்திருந்த அந்த பார்வையற்றவர், இயேசு அப்பக்கம் வருகின்றார் என்று கேள்விப்பட்டு, “தாவீதின் மகனே, எனக்கு இரங்கும்” என உரக்கக் கத்துகின்றார். அவருடைய குரல்/கத்தல் இயேசுவின் காதுகளை எட்டுகிறது. இதனால் இயேசு அவரை அழைத்து, அவருடைய நம்பிக்கையைக் கண்டு, அவருக்கு நலமளிக்கின்றார். இங்கே பார்வையற்ற மனிதரின் அசைக்க முடியாத நம்பிக்கை அவருக்கு நலமளிக்கின்றது.
நாம் பார்வையற்ற மனிதரைப் போன்று இயேசுவிடம் ஆழமான நம்பிக்கை கொண்டிருக்கின்றோமா? என்று சிந்தித்துப் பார்க்கவேண்டும். ஒருவேளை இறைவனிடம் நம்பிக்கை குறைவாக இருந்தால், ‘நம்பிக்கையை மிகுதியாக்கும்’ என்று அவரிடத்தில் வேண்டுவோம், இறைவனிடம் ஆழமான நம்பிக்கை கொண்டு வாழ்வோம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.
Source: New feed