மண்ணுலகில் பாவங்களை மன்னிக்க மானிடமகனுக்கு அதிகாரம் உண்டு என்பதை நீங்கள் அறிந்துகொள்ளவேண்டும்”
குருவானவர் ஒருவர் கடற்கரையை ஒட்டிய கிராமம் ஒன்றில் பங்குத்தந்தையாக பணியாற்றி வந்தார். ஒருநாள் மாலைவேளையில் அவர் கடற்கரையோரமாக நடந்துபோய்க் கொண்டிருக்கும்போது, பெண் ஒருவர் அவர் எதிரே வந்தார்.
அந்தப் பெண் குருவானவரிடம், “சுவாமி! என்னுடைய கையில் என்ன இருக்கிறது என்று பார்த்துச் சொல்லுங்கள்?” என்றார். உடனே குருவானவர் அந்தப் பெண்ணின் கைகளை உற்றுப்பார்த்தார். அவருடைய கைகளில் கடற்கரை மணல் இருந்தது. பின்னர் குருவானவர் அந்தப் பெண்ணிடம், “இது தெரியாதா… உன்னுடைய கைகளில் கடற்கரை மணல் இருக்கிறது” என்றார். அதற்கு அந்தப் பெண்மணி, “சுவாமி! வெளிப் பார்வைக்குத்தான் இது கடற்கரை மணல், உண்மையில் இது என் பாவங்கள். இந்தக் கடற்கரை மணல் அளவுக்கு நான் பாவங்களைக் கட்டிக்கொண்டிருக்கிறேன். இவற்றையெல்லாம் நான் எப்படிக் களைவது?” என்று கண்ணீர் மல்கச் சொன்னார்.
அந்தப் பெண் சொல்வதை பொறுமையாகக் கேட்டுக்கொண்டிருந்த குருவானவரிடம் அவரிடம், “உன் பாவங்களை எப்படிக் களைவது என்று யோசிக்கின்றாரா?… உன்னுடைய கையில் இருக்கும் இந்த மணலை வைத்து இங்கே ஒரு சிறிய வீடு கட்டு. அதன்பிறகு என்ன நடக்கின்றது என்று பார்” என்றார். குருவானவர் சொன்னதுபோன்ற அந்தப் பெண்ணும் தன்னுடைய கையில் இருந்த மணலை வைத்து ஒரு சிறிய வீடு கட்டினார். அவர் கட்டிய அந்த மணல்வீட்டை பெரிய அலை ஒன்று வந்து அடித்து ஒன்றுமில்லாமல் செய்தது.
அதைப் பார்த்துவிட்டு குருவானவர் அந்தப் பெண்ணிடம் சொன்னார், “மணல்தான் உன் பாவங்கள் என்றால், அலையானது கடவுளின் மன்னிப்பு. அவரிடத்தில் உன் பாவங்களை எல்லாம் ஒப்புகொடுத்துவிட்டு, அவரிடத்தில் நீ தஞ்சம் அடைந்தாய் எனில், அவர் உன் பாவங்களை எல்லாம் மன்னித்துவிட்டு, உன்னைத் தன் அன்பு மகளாக ஏற்றுக்கொள்வார்” என்றார். மறுகணமே அந்தப் பெண் தன்னுடைய பாவத்தை உணர்ந்து, குருவானவரிடத்தில் நல்லதொரு ஒப்புரவு அருட்சாதனம் மேற்கொண்டு மனம்மாறிய ஒரு பெண்ணாய் வாழத் தொடங்கினார்.
செய்த பாவங்களை/ குற்றங்களை உணர்ந்து, இறைவனிடத்தில் நாம் மன்னிப்புக் கேட்டால், அவர் நம்முடைய பாவங்களை எல்லாம் மன்னித்து, நமக்குப் புதுவாழ்வு தருவார் என்ற உண்மையை உரக்கச் சொல்லும் இந்த நிகழ்வு, ஆழமாக சிந்தித்துப் பார்க்கப்பட வேண்டிய ஒன்றாக இருக்கின்றது.
நற்செய்தி வாசகத்தில் ஆண்டவர் இயேசு, முடக்குவாதமுற்ற ஒருவரைக் குணப்படுத்துகிறார். இயேசு முடுக்குவாதமுற்றவரை மற்ற மனிதர்களுக்கு நலமளித்தது போன்று தொட்டோ அல்லது நலமாகுக என்று சொல்லியோ குணமாக்கவில்லை, மாறாக ‘உன் பாவங்கள் மன்னிக்கப்பட்டன’ என்று சொல்லிக் குணப்படுத்துகின்றார். இயேசு இவ்வாறு சொல்லிக் குணப்படுத்தியதைப் பார்த்த மறைநூல் அறிஞர்களும் பரிசேயர்களும், “கடவுளைப் பழித்துரைக்கும் இவன் யார்? கடவுள் மட்டுமன்றி பாவங்களை மன்னிக்க யாரால் இயலும்?” என்று கேட்கின்றார்.
மறைநூல் அறிஞர்களும் பரிசேயர்களும் கேட்பதுபோன்று, “கடவுளைத் தவிர பாவங்களை மன்னிக்க வேறு யாராலும் முடியாது”. ஆனால் இறைமகனாகிய இயேசுவால் முடியும். ஏனெனில் அவருக்கு எல்லா அதிகாரமும் கொடுக்கப்பட்டிருக்கின்றது. இது அவர்களுக்குத் தெரியாததால்தான் இயேசு அவர்களிடம், “மண்ணுலகில் பாவங்களை மன்னிக்க மானிடமகனுக்கு அதிகாரம் உண்டு என்பதை நீங்கள் அறிந்துகொள்வேண்டும்” என்கின்றார்.
இங்கே ஒரு கேள்வி எழலாம். முடுக்குவாதமுற்றவரைக் குணப்படுத்தும் இயேசு, அவரிடம் நேரடியாக, “உன் நோய் நீங்கி நலமாகுக” என்று சொல்லியிருக்கலாமே! எதற்காக அவர் அவரைப் பார்த்து, உன் பாவங்கள் மன்னிக்கப்பட்டன? எனச் சொல்லவேண்டும்? என்பதுதான் அந்தக் கேள்வி. இஸ்ரயேல் மக்கள், ஒருவருக்கு வருகின்ற நோய்க்கும் அவர் செய்த பாவத்திற்கும் தொடர்பிருப்பதாக நினைத்தார்கள். அந்த முடக்குவாதமுற்றவர் அப்படி இருக்கக் காரணம், அவர் ஒருகாலத்தில் செய்த பாவமே என்பதே மக்களின் எண்ணம். எனவேதான் இயேசு, நோய்க்குக் காரணமாக இருக்கும் பாவத்தை (?) மன்னித்து அவருக்கு நலமளிக்கின்றார்.
நிறைவாக, நற்செய்தி வாசகம் நமக்கு இன்னொரு முக்கியமான செய்தியையும் சொல்கின்றது. அது என்னவெனில், ஒருவர் பாவ மன்னிப்புப் பெற, நோயிலிருந்து நலமாக இறைவனிடம் வந்தாக வேண்டும் என்பதாகும். முடக்கவாதமுற்றவர் இயேசுவிடம் வந்தார் அல்லது கொண்டுவரப் பட்டார். அதனால் அவர் நோய் நீங்கி நலமடைந்தார், தன்னுடைய பாவங்கள் மன்னிக்கப்பட்டார். நாமும் நம்பிக்கையோடு இயேசுவிடம் வந்தால், நோய் நீங்கி நலமடைவதும் பாவங்கள் மன்னிக்கப்படுவதும் உறுதி.
ஆகவே, நம்பிக்கையோடு இயேசுவிடம் வருவோம். அதன்வழியாக நம்முடைய நோய் நீங்கி நலம் பெறுவோம்.
Source: New feed