மரியாளின் அமல உற்பவப் பெருவிழா
பாரதியின் காலத்தில் குள்ளசாமி என்றதொரு சித்தர் வாழ்ந்துவந்தார். பாரதிக்கு அவர்மேல் எப்போதும் மிகுந்த மதிப்பும், மரியாதையும் இருந்தது. காரணம் மக்கள் செய்யக்கூடிய தவற்றை அவர் நேருக்கு நேர் சுட்டிக்காட்டிவிடுவார்.
ஒருநாள் குள்ளசாமி என்ற அந்த சித்தர் பழைய கந்தைகள், குப்பைகள் அடங்கிய ஒரு பொதிமூட்டையை முகுகில் சுமந்துவந்தார். அவரைப் பார்த்த பாரதிக்கு ஒரே ஆச்சரியமாகப் போய்விட்டது. நாம் வெகுவாக மதிக்கக்கூடிய ஒரு மனிதர் இப்படி பிச்சைக்காரரைப் போன்று குப்பையைச் சுமந்து வருகிறாரே என்று உள்ளுக்குள்ளே ஒருவிதமான நெருடலை உணர்ந்தார்.
வேகமாகச் சென்ற பாரதி சித்தரிடம், “எதற்காக இப்படி பழையகந்தையையும், குப்பையையும் சுமந்து வருகிறீர்கள்?” என்று கேட்டார். அதற்கு அவர், நானோ வெளியில்தான் அழுக்கைச் சுமந்து அலைகிறேன்; ஆனால் மக்களோ, “உள்ளுக்குள் அழுக்கையும், குப்பையையும் சுமந்து திரிகிறார்கள்” என்று எல்லாவற்றையும் போட்டு உடைத்தார். “புறத்தே நான் சுமக்கிறேன்; அகத்தினுள்ளே இன்னொதொரு பழங்குப்பையை சுமக்கிறாய் நீ” என்று இதனை பாரதி தன்னுடைய கவிதையிலே எழுதுகிறார்.
சித்தர் பாரதியைப் பார்த்துச் சொன்ன வார்த்தைகள் நமக்கு பொருந்தும். வெளிப்புறத்திலே ஆடம்பரமாக, அழகாகக் காட்சியளிக்கும் நாம் உட்புறத்தில் பாவக்கறை படிந்த வாழ்வு வாழ்கிறோம். இத்தகைய ஒரு பின்னணியில் இன்று நாம் கொண்டாடும் ‘கருவிலே பாவக் கறையில்லாது பிறந்த மரியன்னையின் விழாவைக் கொண்டாடுவது மிகப் பொருத்தமாக இருக்கும்.
இன்று திருச்சபையானது மரியாளின் அமல உற்பவப் பெருவிழாக் கொண்டாடுகிறது. மரியாள் கருவில் உதிக்கும்போதே பாவக்கறையில்லாமல் பிறந்தார் என்பதே இவ்விழாவின் சாரம்சமாக இருக்கிறது. இவ்விழா கீழைத் திருச்சபையில் 7 ஆம் நூற்றாண்டிலிருந்தும், மேலைத் திருச்சபையில் 9ஆம் நூற்றாண்டிலிருந்தும் கொண்டாடப்பட்டு வருகிறது.
பதிமூன்றாம் நூற்றாண்டில் வாழ்ந்த கான்டர்பரி என்பவர் ‘அமல உற்பவம்’ என்ற தலைப்பிலே ஒரு புத்தகத்தை எழுதினார். இப்புத்தகத்தில் அவர் ‘மரியாள் கருவில் தோன்றும்போது பாவக்கறையில்லாது – ஜென்மப் பாவமில்லாது – உதித்தார்’ என்று எழுதி இருந்தார். இதை எதிர்த்து இறையியலாளர்களின் இளவரசர் என்று அழைக்கப்படக்கூடிய தாமஸ் அக்குவினாஸ் ‘மரியாள் பாவக்கறையில்லாமல் தோன்றினாள் என்று சொன்னால் கடவுளது மீட்பின் பயன் மரியாளிடத்தில் செயல்படாது போய்விடுமே’ என்று விவாதம் செய்தார். ஆனால் அவருக்குப் பின்னர் வந்த யோவான் டன்ஸ் ஸ்காட்டுஸ் என்பவர், “கடவுளது மீட்பின் பலன் மரியாளுக்குதான் அதிகமாகத் தேவைப்படுகிறது” என்று சொல்லி இந்த விவாதத்திற்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்தார். அதன்பின்னர் இக்கோட்பாடு படிப்படியாக வளர்ந்துகொண்டே வந்தது.
1854 ஆம் ஆண்டு டிசம்பர் 8 ஆம் நாள் அன்று திருத்தந்தையாக இருந்த ஒன்பதாம் பத்திநாதர் இறை உந்துதலின் பேரில் ‘மரியாள் கருவிலே பாவக்கறையில்லாமல் உதித்தாள்’ என்று சொல்லி ‘அமல உற்பவியான மரியா’ என்ற கோட்பாட்டைப் பிரகடம் செய்தார். இதற்கு முத்தாய்ப்பாக 1858 ஆம் ஆண்டு மார்ச் 25 ஆம் தேதி லூர்து நகரிலே பெர்னதெத்து என்ற சிறுமிக்குக் காட்சி தந்த மரியா ‘நாமே அமல உற்பவம்’ என்று இக்கோட்பாட்டை உறுதி செய்தார். இவ்வாறு திருச்சபையிலே மரியாள் அமல உற்பவி’ என்ற விழாவானது கொண்டாடப்பட்டு வருகிறது.
இவ்வேளையில் மரியாள் அமல உற்பவி என்று சொல்வதற்கு விவிலியச் சான்றுகள் இருக்கின்றதா என்று சிந்தித்துப் பார்ப்போம்.
இன்றைய நற்செய்தி வாசகத்தில் வானதூதர் கபிரியேல் மரியாவுக்குத் தோன்றும்போது, “அருள் நிறைந்தவளே வாழ்க!” என்று தான் வாழ்த்துகிறார் (லூக் 1:29). மரியாள் இறைவனின் அருளை நிரம்பப் பெற்றுக்கிறாள் என்பதே இதன் அர்த்தமாக இருக்கிறது. மேலும் தமதிருத்துவத்தில் இரண்டாம் ஆளாக இருக்கக்கூடிய மகனாகிய இயேசு, எபிரேயருக்கு எழுதப்பட்ட திருமுகம் 4:15 ல் வாசிப்பதுபோல ‘பாவம் செய்யாதவர்’. எனவே பாவம் செய்யாத ஆண்டவர் இயேசு மனிதனாகப் பிறக்கவேண்டும் என்று சொன்னால் பாவமே அறியாத ஒரு பெண்ணின் வயிற்றில்தான் மகனாகப் பிறக்கவேண்டும். அதனால்தான் கடவுள் மரியாளை பாவக்கறை சிறிதும் இல்லாமல் தோன்றச் செய்தார்.
Source: New feed