அவரிடம் வாழ்வு இருந்தது; அவ்வாழ்வு மனிதருக்கு ஒளியாய் இருந்தது”
கிறிஸ்டினா தெய்ஸ். அமெரிக்க ஐக்கிய நாட்டைச் சேர்ந்த இந்த பெண்மணிக்கு ட்ரிஸ்டின் (2), பிராண்டன் (4) என்ற இரண்டு ஆண் குழந்தைகள் உண்டு.
2016 ஆம் ஆண்டில் ஒருநாள், இவர் தன்னுடைய பிள்ளைகள் மற்றும் தோழியுடன் அட்லாண்டிக் பெருகடலில் உள்ள, சிங்கர் தீவில் தன்னுடைய நேரத்தைச் செலவழிக்கப் போனார். அந்தத் தீவின் கடற்கரைப் பகுதியானது தடுப்புச் சுவர் இல்லாத, பாதுகாப்புக் குறைவான பகுதி. எனவே அவரும் அவருடைய பிள்ளைகளும் அவரோடு வந்திருந்த அவருடைய தோழியும் கடற்கரைக்குக் கொஞ்சம் தள்ளியே அமர்ந்து பேசிக்கொண்டும் விளையாடிக்கொண்டும் இருந்தனர்.
அந்நேரத்தில், கடலில் இரண்டு சிறுவர்கள் மிதந்து கொண்டிருப்பதையும் அவர்களுடைய தலைகள் மட்டுமே தெரிவதையும் கண்டு கிறிஸ்டினா தெம்ஸ் அதிர்ந்துபோனார். ஒருநிமிடம் என்ன செய்வதென்று தெரியாமல் திகைத்து நின்ற அவர், வந்தது வரட்டும் என்று தன்னுடைய இரண்டு குழந்தைகளையும் தோழியையும் கடற்கரையிலே விட்டுவிட்டு, கடலுள்ளுள் ஓடி, மிதந்துகொண்டு இருந்த அந்த இரண்டு சிறுவர்களையும் காப்பாற்றி கடற்கரைக்குக் கொண்டுவந்தார்.
இதில் ஆச்சரியப்பட வேண்டிய விஷயம் என்னவெனில், கிறிஸ்டினாவுக்கு நீச்சலே தெரியாது. அப்படி இருந்தாலும் தன்னுடைய வாழ்வை/ உயிரை ஒரு பொருட்டாகக் கூடக் கருதாமல், உயிரைப் பணயம் வைத்து, அந்த இரண்டு சிறுவர்களையும் காப்பாற்றினார். கிறிஸ்டினா செய்த இந்த அரும் செயலைப் பாராட்ட அமெரிக்காவில் உள்ள செஞ்சிலுவைச் சங்கமானது அவருக்கு விருது வழங்கி கெளரவித்தது.
எல்லாரிடத்திலும் இருப்பது போன்றே கிறிஸ்டினா தெம்ஸிடமும் வாழ்வு இருந்தது. ஆனால், அந்த வாழ்வை அவர் தனக்காக மட்டும் பயன்படுத்திக் கொள்ளவில்லை, மற்றவர் வாழ்வுபெறவேண்டும் என்பதற்காகப் பயன்படுத்தினார். அதனால்தான் அவர் மற்றவர்களிடமிருந்து தனித்துத் தெரிகின்றார்.
இன்றைய நற்செய்தி வாசகமானது, யோவான் நற்செய்தியினுடைய முதல் அதிகாரம், முதல் பகுதியிலிருந்து எடுக்கப்பட்டிருக்கின்றது. இதில் வருகின்ற ஒரு சொற்றொடர்தான், “அவரிடம் வாழ்வு இருந்தது; அவ்வாழ்வு மனிதருக்கு ஒளியாய் இருந்தது” என்பதாகும். இதைக் குறித்து நாம் இன்றைய நாளில் சிந்தித்துப் பார்த்து நிறைவு செய்வோம்.
வாக்கு என்னும் இயேசு தொடக்கத்திலே இருந்தார், அவர் கடவுளோடு கடவுளாகவும் இருந்தார். அப்படிப்பட்டவர் வானத்திலே உறைந்துகொண்டிருக்கவில்லை. மாறாக மறுவுரு எடுத்து நம்மைப் போன்று ஆனார். அது மட்டுமல்லாமல் வாழ்வை, அதுவும் நிறைவாழ்வை நமக்குக் கொடையாகத் தந்தார். இப்படி நமக்கு வாழ்வைத் தந்த இயேசுவைப் போன்று, நாம் மற்றவர்களுக்கு வாழ்வைத் தருகின்றோமா? என்பதுதான் நாம் இங்கே சிந்தித்துப் பார்க்கவேண்டிய ஒன்றாக இருக்கின்றது.
ஆண்டின் நிறைவுநாளான இன்று, நம்முடைய வாழ்வு, இயேசுவின் வாழ்வைப் போன்று பலருக்கு ஒளி தந்திருக்கின்றதா? என்று சிந்தித்துப் பார்ப்பது மிகவும் பொருத்தமாக இருக்கும் என்று தோன்றுகின்றது. ஏனென்று சொன்னால், நம்மில் பலர், தானுண்டு, தன்னுடைய குடும்பம் உண்டு என்று சுயநலத்தோடு ஒவ்வொரு நாளையும், ஏன் ஒவ்வொரு ஆண்டையும் வீணாய்க் கழித்துக் கொண்டிருப்பதைப் பார்க்க முடிகின்றது. இத்தகைய சூழலில் நம்முடைய வாழ்வை ஆய்வுக்குட்படுத்தி, அதை சீர்தூக்கிப் பார்ப்பது மிகவும் நல்லது.
அன்னை தெரசா ஒருமுறை இவ்வாறு குறிப்பிட்டார், “இந்த உலகம் ஒருவாடகை வீடு. நம்முடைய நற்செயல்கள்தான், நாம் இந்த உலகத்திற்குச் செலுத்தும் வாடகையாகும்” என்று. ஆமாம், வாடகை வீட்டில் வசித்தோம் என்றால், வீட்டின் உரிமையாளருக்கு ஒவ்வொரு மாதமும் வாடகைப் பணம் கொடுக்கவேண்டும். அப்படியில்லை என்றால், வீட்டின் உரிமையாளர் நம்மை வீட்டைவிட்டே துரத்திவிடுவார். அதுபோன்றுதான், இந்த உலகத்தில் நாம் வாழ்கின்றோம் என்றால், இங்கே வாழ்வதற்கான வாடகையாக நற்செயல்களைச் செய்யவேண்டும். அப்படியில்லை என்றால், நாம் ஆண்டவரிடம் நிச்சயம் கணக்குக் கொடுத்தாகவேண்டும். ஆகையால், நம்முடைய நம்முடைய வாழ்வு, இயேசுவின் வாழ்வைப் போன்று மனிதருக்கு ஒளிதரக்கூடியதாய் இருக்கவேண்டும் என்றால், நற்செயல் செய்து வாழவேண்டும்.
வாழ்வின் ஊற்றாகிய, வாழ்வளிக்கும் வாக்காகிய இயேசு கடவுளோடே இருந்துவிட வில்லை. அவர் தன்னுடைய நிலையிலிருந்து இறங்கி வந்து மக்களுக்கு வாழ்வினைத் தந்தார். நாமும், கவுரவம், அந்தஸ்து பார்க்காமல், நம்முடைய நிலையிலிருந்து இறங்கி வந்து, இந்த உலகிற்கு நம்முடைய நற்செயல்களால், நற்சிந்தனைகளால் வாழ்வு கொடுப்போம். புதிதாக பிறக்கக்கூடிய ஆண்டினை அர்த்தமுள்ள ஆண்டாக மாற்றுவோம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.
Source: New feed