திருக்குடும்ப விழா
அன்பில் மலரும் குடும்பங்கள்
தாய் தந்தை அவர்களுடைய ஒரே செல்ல மகள் என்றிருந்த குடும்பத்தில் ஒரு நாள் மகள் தந்தையிடம் சென்று, “அப்பா! எனக்கு ஒரு சந்தேகம்… மனித இனம் எப்படித் தோன்றியது? சொல்லுங்கள்” என்று கேட்டாள். அதற்குத் தந்தை, “கடவுள் ஆதாமையும் ஏவாளையும் படைத்தார், அவர்களிடமிருந்து பிள்ளைகள் தோன்றினார்கள். அவர்களுடைய பிள்ளைகளிலிருந்து பிள்ளைகள் தோன்றினார்கள். இப்படித்தான் மனித இனம் தோன்றியது” என்றார். மகளும் அதற்குச் சரியென்று சொல்லிவிட்டு அவரிடமிருந்து நகர்ந்து சென்றார்.
பின்னர் சமயலறையில் வேலைபார்த்துக் கொண்டிருந்த தாயிடம் சென்ற மகள் தந்தையிடம் கேட்ட அதே கேள்வியை கேட்டாள். அவளோ, “மனித இனம் குரங்கிலிருந்து தோன்றியது” என்றாள்.
இருவர் சொன்ன பதிலையும் கேட்டுக் குழம்பிப்போன மகள் மீண்டுமாக தந்தையிடம் சென்று, “அப்பா மனித இனம் எப்படித் தோன்றியது என்ற ஒரு கேள்விக்கு இருவரும் இருவேறு விதமாகப் பதில் தருகின்றீர்கள். இதில் எது உண்மை?” என்று கேட்டார். அதற்கு அவளுடைய தந்தை, “நான் என்னுடைய முன்னோர் எப்படித் தோன்றினார்கள் என்று சொன்னேன். உன் தாயோ அவளுடைய முன்னோர்கள் எப்படித் தோன்றினார்கள் என்று சொல்கின்றார். இதில் குழம்புவதற்கு என்ன இருக்கின்றது?” என்றார்.
இதைக் கேட்டு சமையறையில் வேலை பார்த்துக்கொண்டிருந்த மனைவி தன்னுடைய கணவன்மீது செல்லமாய் கோபம் கொண்டு முகத்தைத் திருப்பிக்கொண்டாள். உடனே கணவன் மனைவிடத்தில் சென்று, அவளை சமாதானப்படுத்தி ஒரு வழிக்குக் கொண்டுவர அக்குடும்பத்தில் இன்பம் கரைபுரண்டு ஓடியது.
சிறு சிறு சண்டைகள், ஒருவர் ஒருவர்மீதான உள்ளார்ந்த அன்புப் பரிமாற்றங்கள். இவைகள்தான் ஒரு குடும்பத்தை இன்னும் உறவில் வலுப்பெறச் செய்கின்றன. “நெருப்பில்லாமல் மனித முன்னேற்றமில்லை, குடும்ப உறவில்லாமல் வாழ்க்கை இல்லை” என்பார் ராபர்ட் இங்கர்சால் என்னும் எழுத்தாளர். ஆம், மனித முன்னேற்றத்திற்கான விதை குடும்பத்தில்தான் விதைக்கப்படுகின்றன. பின்னர் அது வளர்ந்து நிறைந்த பலனைக் கொடுக்கின்றது.
இன்று நாம் திருக்குடும்ப விழாவைக் கொண்டாடுகின்றோம். இந்த நல்ல நாளில் இன்று நாம் வாசிக்கக்கேட்ட இறைவார்த்தை நமக்கு என்ன செய்தியைத் தருகின்றது என்று சிந்தித்துப் பார்த்து நிறைவு செய்வோம்.
‘கல்லாலும் மண்ணாலும் செங்கற்களாலும் மட்டும் ஒரு வீடானது கட்டப்படுவதில்லை, அன்பினாலேயே ஒரு வீடு கட்டப்படுகின்றது” என்பார் மறைந்த நா. முத்துக்குமார் என்ற கவிஞர். ஆம், அன்பில்தான் ஒரு வீடானது கட்டப்படுகின்றது. அப்படி அன்பில் கட்டப்படாத வீடானது ஒருபோதும் உறுதியாக இருக்காது என்பதுதான் உண்மை.
நற்செய்தி வாசகத்தில் அன்பில் கட்டப்பட்ட ஒரு வீட்டைக் குறித்துப் படிக்கின்றோம். அக்குடும்பம் வேறெதுவும் கிடையாது இயேசு மரி சூசையை உள்ளடக்கிய திருக்குடும்பம்தான். இக்குடும்பத்தில்தான் எத்துணை அன்பு கரைபுரண்டு ஓடியிருக்கும் என்று நினைத்துப் பார்க்கும்போது உண்மையிலே மெய்சிலிர்க்கின்றது. குறிப்பாக அன்னை மரியா தன்னுடைய கணவர் சூசையப்பர் மீதும், இயேசுவின் மீதும் மிகுந்த அன்பு கொண்டிருப்பார்; ஒருசிறந்த மனைவிக்குரிய, தாய்க்குரிய இலட்சணங்களோடு விளங்கி இருப்பாள் என்று சொன்னால் அதில் மாற்றுக் கருத்து கிடையாது. இத்தனைக்கும் மரியா தன்னுடைய கணவராகிய யோசேப்பு தன்னைவிட நிறைய வயது மூத்தவராக இருந்தாலும்கூட அவர்மீது மிகுந்த அன்பு காட்டியிருப்பார். அந்த அன்பில் யோசேப்பும் மகிழ்ந்திருப்பார்.
ஆகையால், ஒவ்வொரு மனைவிமாரும் மரியாவைப் போன்று தன்னுடைய கணவர்மீதும் பிள்ளைகள் மீதும் மிகுந்த அன்பு காட்டி அவர்களை சிறந்த விதமாய் பராமரிக்கவேண்டும் என்பதுதான் நம்முடைய மனதில் பதிய வைக்கவேண்டிய முதன்மையான செய்தியாக இருக்கின்றது.
யோவான் எழுதிய முதல் திருமுகத்திலிருந்து எடுக்கப்பட்ட இன்றைய இரண்டாம் வாசகத்தில் நாம் வாசிக்கின்றோம், “கடவுள் நமக்குக் கொடுத்த கட்டளைப்படி, (அவருடைய மகன் இயேசுவிடம் நம்பிக்கை கொண்டு) ஒருவர் மற்றவரிடம் அன்பு செலுத்தவேண்டும். கடவுளுடைய கட்டளைகளைக் கடைப்பிடிப்பவர் அவரோடு இணைந்திருக்கின்றார்; கடவுளும் அவரோடு இணைந்திருக்கின்றார் ” என்று. ஆம், அன்னை மரியா கடவுளின் கட்டளையான அன்பினை தன்னுடைய கணவர்மீதும், மகன்மீது காட்டி அதனைக் கடைப்பிடித்துவந்தார். அதனாலேயே கடவுளின் அன்பு அக்குடும்பத்தில் என்றும் குடிகொண்டிருந்தது. (மரியா சூசையப்பர்மீது அன்பு காட்டினார் என்று சொல்லும்போது, சூசையப்பர் மரியாவின் மீதும் இயேசுவின் மீதும் அன்பு காட்டவில்லை என்று அர்த்தம் கிடையாது. அவரும் மரியாவின் மீது மிகுந்த அன்பு காட்டினார் என்பதே உண்மை)
ஒரு குடும்பம் சிறந்த, முன்மாதிரியான குடும்பமாக விளங்குவதற்கு அந்த குடும்பத்தில் இருக்கின்ற மனைவி மட்டும் அன்புள்ளம் கொண்டவராக இருப்பது போதாது. அக்குடும்பத்தில் இருக்கின்ற கணவனும் அன்புள்ளம் கொண்டவராக இருக்கவேண்டும். அதிலும் குறிப்பாக கணவர் தன்னுடைய மனைவிக்கு மிகுந்த மதிப்பளிப்பவராகும் அவருக்கு முன்னுரிமை கொடுப்பவராகவும் இருக்கவேண்டும். அப்போதுதான் அந்தக் குடும்பம் முன்மாதிரியான குடும்பமாய் விளங்கமுடியும். இயேசு, மரி, சூசையைக் கொண்ட குடும்பம் திருக்குடும்பமாக துலங்கியதற்கு சூசை தன்னுடைய மனைவி மரியாவுக்கு மிகுந்த மதிப்பளித்ததை ஒரு காரணமாகச் சொல்லலாம். இன்றைய நற்செய்தி வாசகம் சூசை தன்னுடைய மனைவி மரியாவுக்கு முக்கியத்துவம் கொடுத்து வாழ்ந்ததற்கு மிகச் சிறந்த உதாரணமாகச் சொல்லலாம்.
நற்செய்தி வாசகத்தில் சூசையும் மரியாவும் குழந்தை இயேசுவும் பாஸ்கா விழாவிற்காக எருசலேம் செல்கின்றார்கள். சென்ற இடத்தில் குழந்தை இயேசுவோ தொலைந்து போய்விடுகின்றார். மூன்று நாட்களாக அவரை சூசையும் மரியாவும் தேடி, இறுதியில் எருசலேம் திருக்கோவிலில் கண்டு கொள்கின்றார்கள். இங்கே ஒன்றைப் புரிந்துகொள்ளவேண்டும், எருசலேம் திருக்கோவிலானது எல்லாரும் குழுமி இருக்கக்கூடிய ஒரு பொதுவான இடம். பொது இடத்தில் பெண்கள் பேசுவதற்கு உரிமை மறுக்கப்பட்ட காலம் அது. அக்காலத்திலும் கூட சூசை தன்னுடைய மனைவி மரியாவைப் பேச அனுமதிக்கின்றார். அதனால்தான் மரியா, “மகனே, ஏன் இப்படிச் செய்தாய்? இதோ பார், உன் தந்தையும் நானும் உன்னை மிகுந்த கவலையோடு தேடிக்கொண்டிருந்தோம்” என்கின்றார். மரியா பொது இடத்த்தில் இவ்வாறு பேசியது, சூசை தன்னுடைய மனைவி மரியாவுக்கு மிகுந்த முக்கியத்துவமும் மதிப்பும் அளித்து வந்தார் என்பதைத்தான் காட்டுகின்றது. ஆகையால், ஒவ்வொரு கணவரும் தன்னுடைய மனைவிக்கு மிகுந்த மதிப்பளித்து, அவருக்கு தன்னுடைய வாழ்வில் முக்கியத்துவம் தரவேண்டும் என்பதைத்தான் இந்த நிகழ்வு நமக்கு எடுத்துக்காட்டுகின்றது.
இன்றைக்கு நிறைய குடும்பங்களில் மனைவிக்கு மதிப்பில்லாத சூழ்நிலை நிலவிக்கொண்டிருக்கின்றது. மனைவியை ஏதோ போகப் பொருளாகவும் குழந்தை பெற்றெடுக்கின்ற எந்திரமாகவும் பார்ப்பதுகூட நிறைய குடும்பங்களில் நிலவும் அவல நிலையாகத்தான் இருக்கின்றது. இந்த நிலை மாறவேண்டும், சூசையைப் போன்று ஒவ்வொரு கணவரும் தன்னுடைய மனைவிக்கு மிகுந்த மதிப்பளிப்பவராக இருக்கவேண்டும்.
மனைவியும் கணவனும் ஒரு திருக்குடும்பத்தைக் கட்டி எழுப்புவதற்கு எப்படி இருக்கவேண்டும் என்று சிந்தித்த நாம், ஒரு குடும்பத்திற்கு கிடைக்கின்ற மிகப்பெரிய சொத்தாகிய பிள்ளை(கள்) எப்படி இருக்கவேண்டும், அது எப்படி வளர்க்கப்படவேண்டும். குடும்பத்தில் அதனுடைய பங்கு என்ன என்று சிந்தித்துப் பார்க்க அழைக்கப்படுகின்றோம்.
இன்றைய முதல் வாசகமும் நற்செய்தி வாசகமும் பெற்றோர்கள் தன்னுடைய பிள்ளைகளை இறைவழியில் எப்படி வளர்த்தெடுக்கவேண்டும் என்பதைக் குறித்துப் பேசுகின்றன. முதல் வாசகத்தில் அன்னா தனக்குப் பிறந்த சாமுவேலை ஆண்டவரின் ஆலயத்தில் ஒப்புக்கொடுத்து, அவரை கடவுளின் பிள்ளையாகவே வளர்த்தெடுக்கின்றாள். நற்செய்தி வாசகத்தில் சூசையும் மரியாவும் பனிரெண்டு வயது நிரம்பிய இயேசுவை எருசலேமில் நடந்த பாஸ்காவிற்கு அழைத்துச் சென்று, அவரை இறைவழியில் வளர்த்தெடுத்து, கடவுளுக்கு உகந்தவராக மாற்றுகின்றார்கள். இவ்வாறு சூசையும் மரியாவும் குழந்தை இயேசுவை நல்வழியில் வழிநடத்திச் சென்ற மிகச் சிறந்த பெற்றோரை விளங்குகின்றார்கள்.
இன்றைக்கு உள்ள பெற்றோர்கள் தங்களுடைய பிள்ளைகளை இறைநெறியில் வளர்கின்றார்களா?, அவர்கள்மீது உண்மையான அன்பு காட்டுகின்றார்களா? அவர்களுக்கு போதுமான நேரத்தை ஒதுக்கின்றார்களா? என்பது மிகப்பெரிய கேள்விக்குறியாக இருக்கின்றது.
குருவானவர் ஒருவர் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமை மாலையிலும் அருகாமையில் இருக்கும் சிறைச்சாலைக்குச் சென்று, அங்கிருக்கும் கைதிகளுக்கு ஆற்றுப்படுத்தும் பணியினைச் (Counselling) செய்வது வழக்கம். ஒருநாள் அவர் அங்கு சென்றபோது ஒரு சிறைக்கூடத்தில் பதினெட்டு வயதுக்கும் குறைவான சிறுவன் ஒருவன் இருந்தான். அவர் அவனைத் தன் அருகே அழைத்து, அவன் தோள்மேல் கைகளைப் போட்டு வாஞ்சையோடு பேசியபோது அவன் கண்ணீர்விட்டு அழுது தன்னுடைய கதையை குருவானவரிடம் சொல்லத் தொடங்கினான். “என்னுடைய குடும்பம் வசதியான குடும்பம், என்னுடைய அப்பா எப்போதும் வேலை வேலை என்று அலையக்கூடியவர், அம்மாவோ என்னை எதற்கும் கண்டுகொள்ளவே மாட்டார். அதனால்தான் இந்த சிறிய வயதிலேயே கெட்டு, இந்த சிறைச்சாலையில் கிடக்கின்றேன். ஒருவேளை என்னுடைய தந்தையும் தாயும் உங்களைப் போன்று என் தோள்மீது கைகளைப் போட்டு வாஞ்சையோடு பேசி என்னுடைய தவற்றைச் சுட்டிக்காட்டியிருந்தால், இன்றைக்கு நான் இந்த நிலை ஆளாகியிருக்க மாட்டேன்” என்றான்.
ஆம், நிறைய குழந்தைகள் இன்றைக்குக் கெட்டுப்போவதற்குக் காரணமே பெற்றோர்களின் சரியான வளர்ப்பு இல்லாமையால்தான். ஆனால், சூசையும் மரியும் இதற்கு விதிவிலக்கு. அவர்கள் இயேசுவை இறைவனுக்கு உகந்த வழியில் வளர்த்தெடுத்து, உலகம் போற்றும் பிள்ளையாக மாறினார்கள்.
ஆகவே, திருக்குடும்பப் பெருவிழாவைக் கொண்டாடும் இந்த நல்ல நாளில் நம்முடைய குடும்பங்கள் திருக்குடும்பமாக விளங்க இயேசு மரி, சூசையை நம்முடைய முன்மாதிரியாகக் கொண்டு வாழ்வோம். ஒருவர் மற்றவர்மீது உண்மையான அன்பு காட்டுவோம், ஒருவர் மற்றவருக்கு உகந்த மதிப்பளிப்போம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.
Source: New feed