எனவே நான் சொல்கிறேன்; தூய ஆவியின் தூண்டுதலுக்கேற்ப வாழுங்கள்; அப்போது ஊனியல்பின் இச்சைகளை நிறைவேற்ற மாட்டீர்கள். ஊனியல்பின் இச்சை தூய ஆவிக்கு முரணானது. தூய ஆவியின் விருப்பம் ஊனியல்புக்கு முரணானது………. தூய ஆவியின் கனியோ, அன்பு, மகிழ்ச்சி, அமைதி, பொறுமை, பரிவு, நன்னயம், நம்பிக்கை, கனிவு, தன்னடக்கம் என்பவை ஆகும். இவையுள்ள இடத்தில் திருச்சட்டத்திற்கு இடமில்லை’ என புனித பவுல் கலாத்தியருக்கு எழுதிய திருமடலின் வார்த்தைகளை அடிப்படையாக வைத்து, பத்துக்கட்டளைகள் குறித்த மறைக்கல்வித் தொடரின் இறுதிப் பகுதியை, இப்புதனன்று வழங்கினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
அன்பு சகோதரர் சகோதரிகளே, பத்துக்கட்டளைகள் குறித்த இந்த நம் மறைக்கல்வித் தொடரின் இறுதிப் பகுதியில் இன்று, கிறிஸ்துவின் ஒளியில் இந்த பத்துக் கட்டளைகள் எவ்வாறு நோக்கப்பட வேண்டும் என்பது குறித்துப் பார்ப்போம். இந்த பத்துக்கட்டளைகள் சட்டங்களின் தொகுப்பாக நோக்கப்படாமல், உண்மையான மனித வாழ்வுக்கான வழிகாட்டியாக நோக்கப்பட வேண்டும். ஆம். இறைத்தந்தையின் விருப்பத்திற்கு கீழ்ப்படிந்ததன் வழியாக பிறக்கும் அமைதி, மகிழ்ச்சி மற்றும் அன்பில் தன் நிறைவைக் காணும் உண்மையான மனித வாழ்விற்கான வழிகாட்டியாக இக்கட்டளைகள் உள்ளன. நமதாண்டவர் இங்கு வந்தது, சட்டத்தை ஒழிக்க அல்ல, மாறாக, அதனை நிறைவேற்றவேயாகும். இயேசு கிறிஸ்துவில் ஒரு புதிய வாழ்வை வாழ்வதற்கு நம்மைத் தூண்டுவதன் வழியாக, நம் இதயங்களின் ஊனியல்புக்கு உரியவைகளை எடுத்துவிட்டு, பாவங்களைக் கைவிடுவதற்கான அவைகளின் தூய விருப்பத்திற்குத் திறந்து, இயேசுவின் இதயத்திற்கும், அன்பிற்கும், விருப்பங்களுக்கும் இயைந்த வகையில் வாழ, நம்மைத் தூண்டுகிறார் தூய ஆவியார். நம் தந்தையாம் இறைவனுடன், அன்புடனும் விசுவாசத்துடனும்கூடிய உறவில் நுழைவதற்கு, இந்த பத்துக் கட்டளைகள், முதலில் நமக்கு அழைப்பு விடுக்கின்றன. நம்மை அடிமைப்படுத்தும் அனைத்து தீய பழக்கங்களையும் கைவிட்டு,
நம் உண்மையான இளைப்பாறலை இயேசு கிறிஸ்து, மற்றும், தூய ஆவியார் வழங்கும் விடுதலையில் கண்டுகொள்ளவும் நாம், பத்துக்கட்டளைகள் வழியாக அழைப்புப் பெறுகிறோம். மேலும், நமக்கு அடுத்திருப்பவரைப் பொறுத்தவரையில் நாம் நேர்மையுடனும், ஒருமைப்பாடுடனும், நம்பிக்கைக்கு உரியவராகவும், மீட்படைந்த ஒரு வாழ்வை வாழும் வழிகள் குறித்து இக்கட்டளைகள் நமக்குச் சொல்லித் தருகின்றன. இயேசு கிறிஸ்துவின் முகத்தை நமக்குக் காட்டும் இக்கட்டளைகள், அருளின் புதிய வாழ்விற்கான கதவுகளை நமக்குத் திறக்கின்றன. கடவுள் நமக்கு வழங்கும் மீட்பளிக்கும் அன்பை நாம் ஏற்றுக் கொள்வதன் வழியாக, என்றுமே முடிவுறாத மகிழ்ச்சியின் ஆதாரத்தையும், நம்மைக் குறித்த முழு உண்மைகளையும் நாம் கண்டுகொள்கிறோம்.
இவ்வாறு தன் புதன் மறைக்கல்வியுரையை வழங்கிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், வரும் ஞாயிறன்று நாம் துவக்க உள்ள திருவருகைக்காலத்தைப் பற்றி எடுத்துரைத்து, மனித குலத்தை, குறிப்பாக, இன்றும் சமூகத்தின் விளிம்புநிலைக்குத் தள்ளப்பட்டுள்ள மக்களையும், உதவி தேவைப்படும் நிலையிலிருப்போரையும், துன்புறுவோரையும், பல்வேறு போர்களால் துன்புறுவோரையும் சந்திக்க வரும் குழந்தை இயேசுவை எதிர்கொள்ளும் விதமாக, நம்மைத் தயாரிப்போம் என அழைப்பு விடுத்து அனைவருக்கும் தன் அப்போஸ்தலிக்க ஆசீரையும் அளித்தார்.
Source: New feed