முன்பொரு காலத்தில் அரசன் ஒருவன் இருந்தான். அவன் மக்களை அதிகம் அன்புசெய்தான். மக்களும் அவனை அதிகமாக அன்பு செய்தார்கள். அப்படிப்பட்ட அரசன் ஒருநாள் தன்னுடைய அமைச்சர் மற்றும் படைவீரர்களோடு நகர்வலம் சென்றான். அவன் சென்ற வழியில் குழந்தை ஒன்று அழுதுகொண்டிருந்தது. அதைக் கவனித்த அரசன் அந்தக் குழந்தையை தன்னுடைய கையில் ஏந்தி, “பிள்ளாய்! ஏன் இப்படி அழுகின்றாய்?, உனக்கு என்ன வேண்டும் சொல், நான் அதைத் தருகின்றேன்?” என்றான். அதற்கு அந்த குழந்தை, “நான் என்னுடைய தாயை விட்டுப்பிரிந்து வழிதவறி வந்துவிட்டேன். அவளிடம் மீண்டுமாக நான் போகவேண்டும்” என்று அழுதுகொண்டே சொன்னது. அதற்கு அரசன், “நான் உன்னை உன்னுடைய தாயிடத்தில் கொண்டுபோய் விடுகிறேன். ஆனால் அவள் எப்படி இருப்பாள் என்பதை மட்டும் சொல்?” என்றான். “என்னுடைய தாய் மிகவும் அழகாக இருப்பாள்” என்றது அந்தக் குழந்தை.
உடனே அரசன் தன்னுடைய நாட்டில் இருக்கும் அனைத்து அழகான தாய்மார்களையும் அரண்மனைக்கு வருமாறு தண்டோரா போட்டு அறிவித்தான். அரசனுடைய அறிவிப்பைத் தொடர்ந்து நாட்டில் இருந்த அழகான தாய்மார்கள் எல்லாரும் அரண்மனைக்கு வந்தார்கள். ஆனால் அந்தக் கூட்டத்தில் யாருமே குழந்தையின் தாயாக இருக்கவில்லை. அவர்கள் நீண்ட நேரம் காத்திருந்தார்கள். கடைசியல் பெண்ணொருத்தி மெலிந்த தேகத்தோடு கொஞ்சம் கருமை நிறத்தில் அரண்மனைக்கு உள்ளே நுழைந்தான். அவளுடைய முகத்தில் தன்னுடைய குழந்தையை இழந்த சோகம் தெரிந்தது. அவளைப் பார்த்த குழந்தை அம்மா என்று சொல்லிக்கொண்டு ஓடிவந்து, அவளுடைய தோளைக் கட்டிப்பிடித்து அணைத்துக் கொண்டது. எல்லாவற்றையும் பார்த்துக்கொண்டிருந்த அரசனுக்கு ஆச்சரியம் தாங்கமுடியவில்லை. ‘அழகான தாய் என்று சொல்லிவிட்டு, இப்படி மெலிந்த தேகத்தோடு கருமை நிறத்தில் இருக்கும் பெண்ணொருத்தியை தாயென்று கட்டிக்கொள்கிறதே’ என்று ஒரு கணம் அவன் யோசித்தான். பின்னர் அவன் குழந்தைக்கு தன்னுடைய தாய் எப்போதுமே அழகானவள் என்ற உண்மையை உணர்ந்தவனாய் ஆறுதல் அடைந்தான்.
ஆம், நம் அனைவருக்கும் எப்போதுமே நம்முடைய தாயானவள் அழகானவள். அதிலும் குறிப்பாக பாவ மாசில்லாது இந்த மண்ணுலகத்தில் பிறந்த நம் அன்புத் தாய் அன்னை மரியா இன்னும் அழகானவள்.
வரலாற்றுப் பின்னணி
இன்று நாம் அன்னை மரியாவின் அமலோற்பவப் பெருவிழாவைக் கொண்டாடி மகிழ்கின்றோம். இவ்விழா தொடக்கத்தில் பல்வேறு பெயர்களில் கொண்டாப்பட்டு வந்தாலும் 1854 ஆம் ஆண்டு டிசம்பர் 8 நாள்தான் திருத்தந்தை ஒன்பதாம் பத்திநாதர் ‘மரியாவின் அமலோற்பவப் பெருவிழா’ என்ற பெயரில் கொண்டாட அதிகாரப் பூர்வமாக அறிவித்தார். மேலும் அவர் தான் எழுதிய Ineffabilis Deus என்ற மடலில் “மனுக்குல மீட்பரான இயேசு கிறிஸ்துவின் பயன்களை முன்னிட்டு கன்னிமரி கருவான நொடிப்பொழுதிலேயே எல்லாம் வல்ல இறைவனது அருளாலும் சலுகையாலும் ஜென்மப் பாவமாசு அணுகாதவளாய்த் தோன்றினார்” என்று குறிப்பிட்டு அமலோற்பவியான கன்னி மரியா என்ற விசுவாசப் பிரகடனத்தை அறிவித்தார்.
திருத்தந்தையின் அறிவிப்பை உறுதிசெய்யும் வகையில் 1858 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 25 ஆம் நாள் பிரான்சு நாட்டில் உள்ள லூர்து நகரில் பெர்னதத் என்ற பதினான்கு வயது சிறுமிக்குக் காட்சி கொடுத்த மரியா ‘நாமே அமல அற்பவம்’ என்று அறிவித்தார். அன்றிலிருந்து இன்றுவரை மரியா அமலோற்பவி என்பதை நினைவுகூரும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதம் 8 நாள் மரியாவின் அமலோற்பவப் பெருவிழாவைக் கொண்டாடி வருகின்றோம். இந்த நேரத்தில் இவ்விழா உணர்த்தும் செய்தி என்ன என்று சிந்தித்துப் பார்ப்போம்.
பழைய ஏற்பாட்டில் தாவீது அரசன் ஆண்டவருக்காக கோவில் கட்ட நினைத்தபோது, ஆண்டவர் அவரிடம், “நீ மிகுதியான குருதியைச் சிந்தினாய், பெரும் போர்களை நடத்தினாய்; எனக்கு முன்பாகத் தரையில் நீ மிகுதியான குருதியைச் சிந்தியதால், என் பெயருக்கு நீ கோவில் கட்ட வேண்டாம்” என்கிறார் ( 1 குறி 22 :8), கடவுளுக்கு கோவில் கட்ட இருப்பவர் தூய்மையாக இருக்கவேண்டும் என்று நினைக்கும் அவர், தன்னுடைய மகனைப் பெற்றெடுக்க இருக்கும் பெண் எவ்வளவு தூய்மையாக இருக்கவேண்டும் என்று நினைத்திருப்பார்?. ஆதலால்தான் பாவக்கறை சிறுதும் இல்லாத தன்னுடைய மகன் இயேசு பிறக்க பாவமாசு அணுகாத மரியவைத் தேர்ந்தெடுக்கின்றார். அதற்காக அவர் மரியாவை ஜென்மப் பாவத்திலிருந்து விடுக்கின்றார்; அவரை இறைவன் தங்கும் இல்லிடமாக மாற்றுகின்றார். இத்தகைய சிறப்புகளைக் கொண்டவளாய் விளங்கியதால்தான் வானதூதர் கபிரியேல் கூட, “அருள் மிகப் பெற்றவரே வாழ்க, ஆண்டவர் உம்முடனே” என்று வாழ்த்துகிறார் (லூக் 1: 28). ஆகவே மரியாவின் அமலோற்பவத்தை நினைவுகூறும் வேளையில் கடவுள் மரியாவுக்கு அளித்த மிகப்பெரிய பேற்றினை நினைவுகூர்ந்து பார்ப்போம்.
கற்றுக்கொள்ளவேண்டிய பாடம்
மரியாவின் அமலோற்பவப் பெருவிழாவைக் கொண்டாடும் இந்த நாளில், இவ்விழா நமக்கு உணர்த்தும் செய்தி என்ன என்று சிந்தித்துப் பார்த்து நிறைவு செய்வோம்.
தூய மாசற்ற வாழ்க்கை வாழ முயற்சிப்போம்
மரியா பாவ மாசின்றிப் பிறந்தார், அது மட்டுமல்லாமல் பாவத் தூண்டுகை இல்லாது இருந்தார். அவருடைய விழாவை கொண்டாடும் நாம் அவரைப் போன்று மாசற்ற தூய வாழ்க்கை வாழ்கின்றோமா? என சிந்தித்துப் பார்க்கவேண்டும்.
திருத்தந்தை தூய இரண்டாம் யோவான் பவுல் கூறுவார், “இன்றைக்கு மனிதர்கள் பாவம் என்ற உணர்வே இல்லாமல் வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள். இதுதான் இன்றைய காலத்தின் மிகப்பெரிய பாவம்” என்று. இது முற்றிலும் உண்மை. மனிதர்கள் கடவுளுக்கும் பயப்படாமல், தங்களுடைய மனசாட்சிக்கும் பயப்படாமல் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். இன்னும் ஒருசிலர் தங்களுடைய மனசாட்சியை அடகு வைத்து வாழ்கிறார்கள். இத்தகைய சூழ்நிலையில் மரியாவின் மாசற்ற தன்மையை நினைத்துப் பார்ப்பது மிகவும் பொருத்தமானதாகும். அவர் தன்னையே கடவுளுக்கு உகந்த தூய, நறுமணம் வீசும் பலிபொருளாக ஒப்புக்கொடுத்தார். நாமும் நம்மையே கடவுளுக்கு உகந்த தூய பலிபொருளாக ஒப்புக்கொடுக்கவேண்டும் (எபே 5:2). அதுதான் நம்முன்னே இருக்கும் மிகப்பெரிய சவாலாக இருக்கின்றது.
தூய பவுல் எபேசியருக்கு எழுதிய திருமுகத்தில் (இன்றைய இரண்டாம் வாசகம்) கூறுவார், “நாம் தூயோராகவும், மாசற்றோராகவும் தம் திருமுன் விளங்கும்படி, உலகம் தோன்றுவதற்கு முன்பே கடவுள் நம்மை கிறிஸ்து வழியாகத் தேர்ந்தெடுத்தார் (எபே 1:4) என்று. ஆகவே, நாம் தூயோராகவும் மாசற்றோராகவும் விளங்க வேண்டும் அதுதான் இறைவனிடமிருந்து எதிர்பார்க்கும் ஒன்றாகும்.
இது ஒரு யூதக் கதை. ஒருநாள் ரெப் லிப் (Reb Lieb) என்ற யூத இளைஞர் மெஸ்ரிச்சர் மாகித் (Mezritcher Maggid) என்ற இரபியை பார்க்கச் சென்றார். வழியில் ரெப் லிப் தன்னுடைய நண்பரைச் சந்திக்க நேர்ந்தது. நண்பர் அவரிடம், “எங்கே செல்கிறாய்?” என்று கேட்டார். அதற்கு ரெப்லிப், “நான் மெஸ்ரிச்சர் மாகித் என்ற இராபியைச் சந்திக்கச் செல்கிறேன்” என்றார். அதற்கு அவருடைய நண்பர் அவரிடம், “ஓ! அவர் கொடுக்கும் மறைநூல் விளக்கங்களை அறிந்துகொள்ளப் போகிறாயா?” என்று கேட்டார். அதற்கு ரெப் லிப், “இல்லை இல்லை, நான் அவரிடமிருந்து அவரை தூய்மையான வாழ்க்கையை பாடமாகக் கற்றுக்கொள்ளப்போகிறேன். அவரைப் போன்ற தூய்மையான மனிதர் இந்த உலகத்தில் பார்க்க முடியாது” என்றார். ரெப் லிப், மெஸ்ரிச்சேர் மாகிதின் தூய்மையைக் கண்டு வியந்ததுபோன்று, நம்முடைய தூய்மையான வாழ்வைக் கண்டு, மற்றவர்கள் வியக்கும் நாள் எந்நாளோ?.
ஆகவே, மரியாவின் அமலோற்பவப் பெருவிழாவைக் கொண்டாடும் இந்த நாளில் அவரிடமிருந்து அவரைப் போன்று தூய மாசற்ற வாழ்க்கை வாழக் கற்றுக்கொள்வோம். அதன்வழியாக இறைவன் அளிக்கும் முடிவில்லா வாழ்வைக் கொடையாகப் பெறுவோம்.
Source: New feed