பொய்யாக குற்றம் சுமத்தப்பட்ட சூசன்னாவை இறைவன் விடுவித்தது குறித்தும், விபசாரத்தில் கையும் மெய்யுமாகப் பிடிபட்ட பெண்ணை இயேசு மன்னித்தது குறித்தும் எடுத்துரைக்கும் இத்திங்கள் திருப்பலி வாசகங்கள் (தானி.13; யோவா.8:1-11) குறித்து தன் சிந்தனைகளைப் பகிர்ந்துகொண்டார், திருத்தந்தை பிரான்சிஸ்.
தான் தங்கியிருக்கும் சாந்தா மார்த்தா இல்லத்தின் சிற்றாலயத்தில் திருப்பலி நிறைவேற்றி மறையுரை வழங்கிய திருத்தந்தை, இறைவாக்கினர் தானியேல் நூலில் நாம் வாசிக்கும், பொய்யாகக் குற்றம் சுமத்தப்பட்ட சூசன்னாவும், யோவான் நற்செய்தி கூறும், பாவம் செய்தபோது கையும் களவுமாக பிடிபட்ட பெண்ணும், புனித திருஅவையையும், பாவிகளான அதன் மக்களையும் குறித்து நிற்கின்றனர் என திருஅவைத் தந்தையர்கள் கூறியுள்ளதைச் சுட்டிக்காட்டினார்.
பொய்யாக குற்றம் சுமத்தப்பட்ட சூசன்னா, இறைவனில் நம்பிக்கை வைத்து அவரின் உதவியை நாடியதுபோல், புனித யோவான் நற்செய்தி கூறும், பாவத்தில் பிடிபட்ட பெண்ணும் தன் உள்ளத்தில் உதவிக்காக ஏங்கியிருக்க வேண்டும் என்று கூறிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஒருவர், நேர்மையற்ற நீதிபதிகள் கைகளிலிருந்து இறைவனால் விடுவிக்கப்படுகிறார், மற்றவரோ வெளிவேடக்காரர்களின் பிடியிலிருந்து தப்பிப்பதுடன் இறைவனின் மன்னிப்பைப் பெறுகிறார் எனக் கூறினார்.
இத்திங்கள் தின திருப்பலி பதிலுரைப் பாடலான, ஆண்டவரே என் ஆயன் அவரே என்னை நீரூற்றை நோக்கி வழிநடத்திச் செல்கிறார் என்ற வார்த்தைகளையும் மேற்கோள்காட்டிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், மரணத்தை நோக்கிச் சென்று கொண்டிருந்த இவ்விரு பெண்களையும் இறைவன் காப்பாற்றியதைக் காண்கிறோம் என உரைத்தார்.
குற்றமற்றவரை விடுவித்த, மற்றும், பாவியை மன்னித்த இறைவன், உங்களுள் பாவமில்லாதவர் முதல் கல்லை எறியட்டும் என உரைப்பதன் வழியாக, வெளிவேடக்காரர்கள் மனம்திரும்ப அழைப்பு விடுக்கிறார் எனவும் கூறினார் திருத்தந்தை.
இயேசுவின் இந்த அழைப்பை கேட்ட வெளிவேடக்காரர்கள் அனைவரும் ஒவ்வொருவராக அவ்விடம் விட்டு அகன்று சென்றனர் என்பதை சுட்டிக்காட்டிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், நேர்மையற்றவர்கள் மன்னிப்பதில்லை, மற்றும், அவர்கள் தாங்களும் மன்னிக்கப்பட வேண்டியவர்கள் என்ற தேவையையும் உணர்வதில்லை என்பதாலேயே இந்நிலை என மேலும் கூறினார்.
நற்செய்தி நிகழ்வில், இறைவன் கருணையைக் கண்டு கற்றுணரும் நாம், இறை இரக்கத்தில் நம்பிக்கை கொண்டு, மன்னிப்பிற்காகச் செபிப்போம் என அழைப்பு விடுத்தார், திருத்தந்தை.
இன்றைய கொள்ளை நோயால் அச்சத்தில் வாழ்ந்து கொண்டிருக்கும் மக்களை நோக்கி தன் எண்ணங்கள் செல்வதாக, திருப்பலியின் துவக்கத்தில் உரைத்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், திருப்பலியின் இறுதியில், ஆன்மீக ஒன்றிப்பை வலியுறுத்தி, திருநற்கருணை ஆசீர்வாதத்தையும் வழங்கினார்.
Source: New feed