மன்னார் தோட்டவெளி மறைசாட்சியர்களின் தூய அரசி திருத்தலத்தில் 26.01.2019 சனிக்கிழமை காலை 07.15 மணிக்கு ஆரம்பமாகியது.
இன்றைய திருவிழாவுக்கு திருகோணமலை மறைமாவட்ட ஆயர் பேரருட்கலாநிதி நோயல் இம்மானுவேல் ஆண்டகை அவர்கள் வருகை தந்து சிறப்புத் திருப்பலி ஒப்புக் கொடுத்துச் செபித்தார்.
இன்று காலை இத் திருத்தலத்திற்கு வருகை தந்த ஆயர் பேரருட்கலாநிதி நோயல் இம்மானுவேல் ஆண்டகை அவர்களை திருத்தலப் பிரதான நுழைவாயிலில் வைத்து குருமுதல்வர் அருட்பணி அ.விக்ரர் சோசை, இத்திருத்தல பரிபாலகர் அருட்பணி.டே.அலெக்சாண்டர் சில்வா மற்றும் ஏனைய குருக்கள், துறவிகளால் வரவேற்கப்பட்டு, தோட்டவெளி தூய யோசேவாஸ் மகாவித்தியாலய மாணவர்களின் மேலைநாட்டு மகிழ்வோசையோடு அழைத்து வரப்பட்டார்.
மன்னார் மறைசாட்சிகளின் 475ம் ஆண்டு மறைசாட்சியத்தின் நினைவாக இவ்வாண்டு இருப்பதால், முதலில் ஆயர் அவர்கள் மன்னார் மறைசாட்சிகளின் கல்லறைக்குச் சென்று அங்கு அமைக்கப்பட்டிருந்த 475ம் ஆண்டு தொடக்க விழா நினைவுப் படிகத்தைத் திரை நீக்கம் செய்து வைத்தார்.
அதன் பின் திருவிழாத் திருப்பலியையும் ஒப்புக் கொடுத்தார்.
இவ்விழாவில் பல அருட்பணியாளர்கள், துறவிகள் , அரச அரச சார்பற்ற பணியாளர்கள், மன்னார் மறைமாவட்டத்தின் பல பங்குகளிலிருந்தும் வந்திருந்த இறைமக்களும் கலந்து கொண்டனர்.
இவ்வாண்டுக்கான மன்னார் மறைமாவட்டத்தின் அருட்பணி இலக்கான புதுப்பித்தலை அடிப்படையாகக் கொண்ட பங்கின் திட்டங்களை அந்தந்தப் பங்கின் அருட்பணிப் பேரவைச் செயலர்கள் காணிக்கை வேளையில் காணிக்கையாக அர்ப்பணித்தனர்.
இவ்விழாவுக்கான அனைத்து ஒழுங்குகளையும் இத்திருத்தல பரிபாலகர் அருட்பணி.டே.அலெக்சாண்டர் சில்வா அடிகளார் பலருடைய பங்களிப்போடு செய்திருந்தார்.
Source: New feed