நாம் வாழும் இவ்வுலகிற்கு அமைதி என்ற கொடை வழங்கப்படவேண்டும் என்று, உலகெங்கும் வாழும் மத நம்பிக்கையாளர்களோடும், நல்மனம் கொண்டோர் அனைவரோடும் இணைந்து, உரோம் நகரில் கூடி, இறைவேண்டல் செய்கிறோம் என்ற சொற்களுடன், ஓர் அமைதி விண்ணப்பம் அக்டோபர் 20, இச்செவ்வாய் மாலையில் வெளியிடப்பட்டது.
உரோம் நகரின் Campidoglio குன்றில் அமைந்துள்ள காப்பித்தோலீனே (Capitoline) சதுக்கத்தில், பல்வேறு மதங்களின் பிரதிநிதிகளுடன் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் மேற்கொண்ட ஒரு கூட்டத்தின் இறுதியில், அனைத்து பிரதிநிதிகளும் கையெழுத்திட்டு இந்த அறிக்கையை வெளியிட்டனர்.
இவ்வுலகில் எவரும் தனியாகக் காப்பாற்றப்படுவதில்லை
உலக வரலாற்றில் இடம்பெற்றுள்ள மிகப்பெரும் கொள்ளைநோய் நெருக்கடியின் நடுவிலும், போரில் ஈடுபட்டுள்ள நாடுகள், அமைதியையும், ஒருமைப்பாட்டையும் அடைவதற்கு நாங்கள் விண்ணப்பிக்கிறோம், ஏனெனில், இவ்வுலகில் எவரும் தனியாகக் காப்பாற்றப்படுவதில்லை என்பதை நாங்கள் வலியுறுத்திக் கூறுகிறோம் என்று இந்த விண்ணப்பத்தின் துவக்கத்தில் கூறப்பட்டுள்ளது.
போரும் அமைதியும், கொள்ளைநோயும் நலப்பராமரிப்பும், பசியும் உணவைப் பெறுதலும், உலக வெப்பமயமாதலும் முன்னேற்றமும், மக்களின் குடிபெயர்தல், அணு அச்சுறுத்தல், பாகுபாடுகள் ஆகியவை, எந்த ஒரு தனிப்பட்ட நாட்டையும் சார்ந்தது அல்ல என்பதை நாங்கள் உணர்கிறோம் என்று, இவ்வறிக்கை எடுத்துரைக்கிறது.
எந்த ஒரு போரும், தீர்வாக அமையாது
பன்னாட்டளவில் உருவாகும் கருத்து வேறுபாடுகளைத் தீர்க்க போர் பயன்படுத்தப்படுவது ஆபத்தானது, எந்த ஒரு போரும், தீர்வாக அமையாது, அது, இவ்வுலகை முன்பிருந்ததைவிட மோசமாகவே மாற்றும்; அரசியல் மற்றும் மனிதாபிமானத்தின் தோல்வியே போராக உருவெடுக்கிறது என்ற கருத்துக்களை இவ்வறிக்கை சுட்டிக்காட்டுகிறது.
பிரிவுகள், வெறுப்பு, ஒருவரையொருவர் நம்பாத நிலை, அச்சம் என்பவை, திரும்பிவர வாய்ப்பில்லாத வழியைக் காட்டுகிறது என்பதை உணரவும், துன்புறும் மக்களை மனதில் கொள்ளுமாறும் நாங்கள் உலகத் தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கிறோம் என்று மதத்தலைவர்களின் அமைதி அறிக்கை கூறுகிறது.
நாடுகளின் தலைவர்களுக்கு அழைப்பு
நாடுகளின் தலைவர்களுக்கு நாங்கள் சொல்ல விழைவது இதுவே: வாழ்வு, நலம், கல்வி மற்றும் அமைதியைக் கட்டியெழுப்பும் கருவிகளாக மாறுங்கள் என்று வலியுறுத்திக் கூறியுள்ள மதத் தலைவர்கள், அழிவுக்கருவிகளுக்கென செலவழிக்கப்படும் நிதியை, மக்களின் முன்னேற்றத்திற்குச் செலவிடுங்கள் என்ற விண்ணப்பத்தை விடுத்துள்ளனர்.
மத நம்பிக்கையுள்ள அனைவரும், அமைதியை உருவாக்குவதில் படைப்பாற்றல் மிக்க வழிகளைப் பின்பற்றவும், சமுதாய நட்புணர்வையும், சந்திக்கும் கலாச்சாரத்தையும் உருவாக்கவும் அழைக்கப்பட்டுள்ளனர் என்று இவ்வறிக்கையின் இறுதியில் அழைப்பு விடப்பட்டுள்ளது.
Source: New feed