துன்ப சோதனைகள் மத்தியிலும், தேர்ந்துகொண்ட அர்ப்பண வாழ்வை, மகிழ்ச்சியோடு வாழுங்கள், இதுவே, துறவு வாழ்வுக்கு, நீங்கள் வழங்கும் மிகச் சிறந்த விளம்பரம் என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், நூற்றுக்கணக்கான பெண் துறவற சபை தலைவர்களிடம், இவ்வெள்ளியன்று கூறினார்.
‘நம் வருங்காலம் முழுவதும் நம்பிக்கை நிறைந்ததாய் அமையும்’ என்ற தலைப்பில், UISG அமைப்பு, உரோம் நகரில் நடத்திய, பொது அமர்வில் கலந்துகொண்ட, பெண் துறவு சபைகளின் தலைவர்களுக்கென, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தயாரித்திருந்த உரை, UISG அமைப்பின் தலைவரிடம் வழங்கப்பட்டுள்ளது.
நம்மிலிருந்து எதுவும், யாரும் அகற்றிவிட முடியாத, நம் மகிழ்வின் ஊற்றாகிய உயிர்த்த கிறிஸ்துவோடு இருக்கின்ற உங்கள் சந்திப்பை, தொடர்ந்து புதுப்பித்து, அவரை அறிவியுங்கள் என்று அழைப்பு விடுத்த திருத்தந்தை, அனைவருக்கும், குறிப்பாக, புறக்கணிப்பு கலாச்சாரத்திற்குப் பலியாகியுள்ளவர்களுக்கு, நற்செய்தியின் மகிழ்வால் ஆறுதலளித்து, ஆண்டவரின் அன்புக்குச் சாட்சிகளாகத் திகழுங்கள் என்று கேட்டுக்கொண்டார்.
எண்ணிக்கையில் குறைவாக இருப்பது பற்றியோ, உங்களின் பலவீனங்களைத் தாழ்மையோடு ஏற்பது பற்றியோ அஞ்சாதிருங்கள், அதேநேரம், வரலாற்றின் இருண்ட இரவில் மூழ்கியிருப்பவர்களுக்கு, ஒளியூட்டும் விளக்குகளாக இல்லை என்பது குறித்தும், நம் சமுதாயத்தின் ஆண்களுக்கும், பெண்களுக்கும், வாழ்வின் நறுமணத்தை நல்கும் உப்பாக இருப்பதில் குறைபடுவது குறித்தும் அஞ்ச வேண்டும் என, திருத்தந்தை கூறினார்.
செப வாழ்வு முக்கியம்
செபிப்பது, கடவுளைப் புகழ்வது, மற்றும் அவரை ஆராதிப்பதற்கு நேரம் ஒதுக்குவது, நேரத்தை வீணாக்குவதாக இருக்காது, மாறாக, நாம் ஆண்டவரோடு எந்த அளவுக்கு நெருக்கமாக இருக்கின்றோமோ, அந்த அளவுக்கு, மனித சமுதாயத்துடன், குறிப்பாக, துன்புறும் சமுதாயத்துடன் நெருக்கமாக இருப்போம் என்றும் திருத்தந்தை கூறினார்.
துறவற வாழ்வின் முக்கியமான விழுமியங்களில், குழுவில், உடன்பிறந்த உணர்வில் வாழ்வதாகும் என உரைத்த திருத்தந்தை, குழுவை விட்டு ஆண்டுகளாக வெளியே வாழ்கின்ற அருள்சகோதரர், அருள்சகோதரிகள் பற்றி கவலை கொண்டுள்ளதாகத் தெரிவித்தார்.
பன்மைத்தன்மை, தலைமுறை இடைவெளி
பல்வேறு கலாச்சாரம் மற்றும் உலகளாவிய தன்மையைக் கொண்டிருக்கும் துறவு சபைகளில், அவை, திருஅவை, துறவு மற்றும் அர்ப்பண வாழ்வின் உண்மையான முகத்தைக் காட்டுவதற்குப் புதிய வாய்ப்புக்களாக உள்ளன என்ற நோக்கில், அவை வளமையாக நோக்கப்படாமல், அச்சுறுத்தலாக பார்க்கப்படுவது மற்றும் பிரச்சனையுடன் வாழ்ந்து வருவது, மிகுந்த கவலை தருகின்றது என்றும், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறினார்.
துறவறக் குழுமங்களில், இளைய சகோதரிகள், வயது முதிர்ந்த சகோதரிகளின் கனவுகளை நிறைவேற்றி பலன்களைக் கொணர்வதற்குத் திறனற்று இருக்கும்போதும், இளைய சகோதரிகளின் வருங்கால எண்ணங்களை ஏற்றுக்கொள்ளத் தெரியாமல் வயது முதிர்ந்த சகோதரிகள் இருக்கும்போதும், தலைமுறை இடைவெளி மோதல்கள் இடம்பெறுவதைச் சுட்டிக்காட்டிய திருத்தந்தை, துறவறக் குழுமத்தில், வயதானவர்களின் ஞானமும், இளையோரின் வலிமையும், தூண்டுதலும் அவசியமானவை என்றும் கூறினார்.
கிறிஸ்து மீதும், மனித சமுதாயத்தின் மீதும் பேரார்வத்தையும், பேரன்பையும் வளர்த்துக்கொள்ளுங்கள், இவையின்றி, அர்ப்பணிக்கப்பட்ட துறவு வாழ்வுக்கு எதிர்காலம் இல்லை என்றும், துவக்கக்கால பயிற்சியிலும், பயிற்சியாளர்களை உருவாக்குவதிலும் மிகுந்த கவனம் தேவை என்றும் கூறிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தனது ஆசிரை அனைவருக்கும் அளித்தார், தனக்காகச் செபிக்குமாறும் கேட்டுக்கொண்டார்.
UISG அமைப்பு, உரோம் நகரில் நடத்திய, பொது அமர்வில், எண்பதுக்கும் மேற்பட்ட நாடுகளிலிருந்து, ஏறத்தாழ 850 பெண் துறவு சபைகளின் தலைவர்கள் கலந்துகொண்டனர்.
Source: New feed