போராட்டம் இல்லையெனில், முன்னேற்றமும் இல்லை” என்று சொன்னார், ஆப்ரிக்க அமெரிக்க சமுதாய சீர்திருத்தவாதி பிரெட்ரிக் டக்லஸ் (Frederick Douglass). விடுதலைக்கு ஆதரவாகப் பேசிக்கொண்டு, போராட்டத்தில் பின்வாங்குபவர்கள், நிலத்தை உழாமல் அறுவடையை எதிர்பார்க்கின்றவர்கள், இடியும் மின்னலுமின்றி மழையை விரும்புகின்றவர்கள் என்று, தனது கூற்றுக்கு விளக்கமளித்தார், பிரெட்ரிக் டக்லஸ். மனிதர் பிறக்கும்போதே, வாழ்வு முழுவதும் பல்வேறு ஆனந்த மலர்களாக நிறைந்திருக்கும் என்றோ, அல்லது வாழ்வுப் பாதை முழுவதும் முள்கள் நிறைந்திருக்கும் என்றோ இறைவன் வாக்குறுதி தருவதில்லை. ஆனால், எந்த நிலையையும், நறுமண மலர்களாக மாற்றிக்கொள்ளும் மனவலிமையை அவர் அளித்திருக்கிறார். அதற்கு மனிதரது முயற்சியும் பயிற்சியுமே தேவை. போராடிப் பெறுவதே வெற்றி என்பது, உலகில் பல சமுதாய ஆர்வலர்களின் அனுபவம். “வெற்றி வேண்டுமா போட்டுத்தான் பார்க்க வேண்டும், எதிர்நீச்சல். போராட்டம் இன்றி, எதிர்நீச்சல் இன்றி, வெற்றியை எட்டுவது கடினமே. மகாத்மா காந்தி, ஆபிரகாம் லிங்கன், நெல்சன் மண்டேலா என, பல மாமனிதர்கள், தங்கள் உயிரைப் பொருட்படுத்தாமல், அறப்போர் வழியில் போராடி, வெற்றியும் பெற்றனர். தென்னாப்ரிக்காவில் நாற்பது ஆண்டுகளுக்கு மேலாக (1948-1990) அமலிலிருந்த நிறவெறிக் கோட்பாடு ஒழிக்கப்படுவதற்கு, நெல்சன் மண்டேலா அவர்கள் உட்பட பலர் போராடினர், சிறை சென்றனர். இறுதியில் வெற்றியும் பெற்றனர்.
நெல்சன் மண்டேலா உலக நாள்
ஜூலை 18, வருகிற வியாழன், நெல்சன் மண்டேலா உலக நாள். “விழாமலே வாழ்ந்தோம் என்பதல்ல. விழும் ஒவ்வொரு முறையும் மீண்டு எழுந்தோம் என்பதே வாழ்வின் பெருமை” என்று சொன்னவர் நெல்சன் மண்டேலா. ஆப்ரிக்க கறுப்பு காந்தி என அழைக்கப்படும், இவர், 67 ஆண்டுகள் மனித சமுதாயத்திற்காகத் தொண்டாற்றியவர். மனித உரிமை வழக்கறிஞர், மனச்சான்று கைதி, தென்னாப்ரிக்க நிறவெறிக்காகப் போராடி 27 ஆண்டுகள் சிறையில் இருந்தவர், தென்னாப்ரிக்காவில் முதல்முறையாக நடந்த சுதந்திர சனநாயகத் தேர்தலில் அரசுத்தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர், அந்நாட்டில் மாபெரும் அரசியல் மாற்றத்திற்கு வித்திட்டவர், உலகளவில் அமைதி நிலவ உழைத்தவர் போன்ற பல பெருமைகளுக்கு உரியவர் மண்டேலா. இவர், அமைதி மற்றும் விடுதலை கலாச்சாரத்திற்கு ஆற்றிய மகத்தான சேவையை அங்கீகரிக்கும் விதமாக, ஐ.நா.பொது அவை, 2009ம் ஆண்டு நவம்பரில், நெல்சன் மண்டேலா உலக நாளை உருவாக்கியது. கறுப்பின மக்களின் விடிவெள்ளியான, மண்டேலா அவர்கள் பிறந்த, ஜூலை 18ம் தேதியன்று, ஒவ்வோர் ஆண்டும், மண்டேலா உலக நாள் சிறப்பிக்கப்பட்டு வருகிறது.
நிலவுக்குப் பயணம்
மனிதர் முதன்முதலில் நிலவில் கால்தடம் பதித்த பொன் விழா ஜூலை 20, வருகிற சனிக்கிழமையன்று சிறப்பிக்கப்படுகின்றது. 1969ம் ஆண்டு ஜூலை 16ம் தேதி, அமெரிக்க ஐக்கிய நாட்டு நாசா விண்வெளி மையம், புளோரிடா மாநிலத்திலிருந்து, Apollo -11 விண்கலத்தில், நீல் ஆம்ஸ்ட்ராங், பஸ் அல்ட்ரின், மைக்கிள் கொலின்ஸ் (Neil Armstrong, Buzz Aldrin, Michael Collins) ஆகிய மூன்று விண்வெளி வீரர்களை நிலவுக்கு அனுப்பியது. அதற்கு நான்கு நாள்கள் சென்று, ஜூலை 20ம் தேதி, நியு யார்க் நேரப்படி, இரவு 10.50 மணிக்கு, நீல் ஆம்ஸ்ட்ராங் அவர்கள், முதலில் நிலவில் இறங்கினார். இந்திய ‘இஸ்ரோ’ விண்வெளி ஆய்வு நிறுவனமும், சந்திராயன் – 2 விண்கலத்தை, ஜூலை 15, இத்திங்கள் இந்திய நேரம் அதிகாலை, 2:51 மணிக்கு, விண்ணில் ஏவ இருந்தது. ஆயினும், சிறு தொழில்நுட்ப பிரச்சனையால் இப்பணி தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருப்பதாகச் செய்திகள் கூறுகின்றன. எனினும், இது பெரிய பின்னடைவு என்று சொல்ல முடியாது என, அறிவியலாளர் நம்பி நாராயணன் அவர்கள் தெரிவித்துள்ளார். சந்திராயன் 2 விண்கலம், உலகில் முதல் முறையாக, நிலவின் தென்துருவப் பகுதியை ஆய்வு செய்யவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. ஆம். “போராட்டம் இல்லையெனில், முன்னேற்றமும் இல்லை”. எந்த சாதனைகளையும் கடினமாகப் போராடியே பெற வேண்டியிருக்கின்றது. அதில் பின்னடைவுக்கு இடமே கிடையாது.
Source: New feed