விண்ணகத்தின் வாயில் இடுக்கமான வாயில்”
துன்பம் கடந்துபோய்விடும்:
ஹென்றி மடீசும், ஆகஸ்ட் ரென்வாவும் நெருங்கிய நன்பர்கள். பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த இவர்கள் இருவரும் மிகப்பெரிய ஓவியர்கள். நல்ல உடல் உள்ள நலத்துடன் அற்புதமான ஓவியங்களை வரைந்துகொண்டிருந்த ஆகஸ்ட் ரென்வா (Auguste Renoir) திடீரெனப் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டார். இனிமேல் அவரால் ஓவியங்களை வரைய முடியாது என்று எல்லாரும் நினைத்துக் கொண்டிருந்தபோது, அவர் மிகுந்த வலியுடனும் வேதனையுடனும் ஓவியங்களை வரைந்தார்.
இச்செய்தியை அறிந்த ஆகஸ்ட் ரென்வாவின் நெருங்கிய நண்பரான ஓவியர் ஹன்றி மடீஸ் (Henri matisse), அவருடைய வீட்டிற்குச் சென்றார். அங்கே அவர் ஓவியங்களை வரைந்துகொண்டிருந்தார். அதைப் பார்த்துவிட்டு வியந்து போன ஹென்றி மடீஸ், “நண்பா! இவ்வளவு வலியோடும் வேதனையோடு நீ ஓவியம் வரைய வேண்டுமா? பேசமால் ஓய்வெடுக்கலாமே!” என்றார். அதற்கு ஆகஸ்ட் ரென்வா, “இப்போது நான் அனுபவிக்கும் வலியும் வேதனையும் துன்பமும் கடந்து போய்விடும்; ஆனால், நான் வரையும் ஓவியங்களோ என்றென்றும் நிலைத்திருக்கும்” என்று தனது கண்களைத் தான் வரைந்துகொண்டிருந்த ஓவியத்திலிருந்து எடுக்காமலேயே சொன்னார்.
ஆம், மிகப்பெரிய ஓவியரான ஆகஸ்ட் ரென்வா வலியையும் வேதனையையும் தாங்கிக்கொண்டு ஓவியம் வரைந்தார். அவரது வலியும் வேதனையும் கடந்து போய்விட்டன; ஆனால், அவர் வரைந்த ஓவியங்களோ இன்றைக்கும் நிலைத்து நிற்கின்றன. பொதுக் காலத்தின் இருபத்து ஒன்றாம் ஞாயிறான இன்று நாம் வாசிக்கக்கேட்ட இறைவார்த்தை, “விண்ணகத்தின் வாயில் இடுக்கமான வாயில்” என்ற சிந்தனையைத் தருகின்றது. அது குறித்து நாம் சிந்திப்போம்.
அது என்ன இடுக்கமான வாயில்?
எதையும் எளிதாக அடைய விரும்பும் ஒருவரை நாட்டுப் புறங்களில், ‘நோகாமல் நுங்கு தின்ன ஆசைப்படுகின்றான்’ என்று கேலி செய்வார்கள். இன்றைக்கு எதையும் எளிதாக அடைந்துவிட வேண்டும் என்று பலர் விரும்புகின்றார்கள். எளிதாக அடைகின்ற ஒன்று நிலைத்து நிற்குமா? அல்லது நிலைத்து நிற்கும் ஒன்றை எளிதாக அடைந்துவிட முடியுமா? சிந்தித்துப் பார்க்க வேண்டியதொன்றாக இருக்கின்றது.
இயேசு எருசலேம் நோக்கிப் போகும் வழியில் அவரை எதிர்கொள்ளும் ஒருவர், “ஆண்டவரே, மீட்புப் பெறுவோர் சிலர் மட்டும்தானா?” என்றொரு கேள்வியைக் கேட்கின்றார். அந்த மனிதர் கேட்ட கேள்விக்கு இயேசு, மீட்புப் பெறுவோர் சிலர் மட்டும்தான் அல்லது பலர் என்று உடனடியாகச் சொல்லிவிடவில்லை. மாறாக, அவர் மீட்புப் பெறுவதற்கு என்ன செய்ய வேண்டும் என்று சொல்கிறார். அதன் பின்னரே இயேசு அவர் கேட்ட கேள்விக்குப் பதில் சொல்கின்றார்.
மீட்புப் பெறுவதற்கு என்ன செய்யவேண்டும் என்பதற்கு விளக்கம் அளிக்கின்றபோதுதான் இயேசு, “இடுக்கமான வாயில் வழியாக நுழைய வருந்தி முயலுங்கள்” என்கிறார். இப்பகுதியை மத்தேயு நற்செய்தியோடு இணைத்துப் பார்த்தால் “அழிவுக்குச் செல்லும் வாயில் அகன்றது; வழியும் விரிவானது; அதன்வழியே செல்வோர் பலர்” என்ற வார்த்தைகள் இடம் பெறும்.
இயேசு மக்கள் நடுவில் பணிசெய்யும்போது பலரும் அவரைப் பின்தொடர்ந்தர்கள். அவர்களெல்லாம் அவரது உண்மையான சீடரில்லை. அவர்களில் பெரும்பாலானோர் ஆதாயத்திற்காக அவரைப் பின்தொடர்ந்தனர். இந்த உண்மை இயேசுவுக்கு நன்றாகவே தெரிந்திருந்தது. எனவேதான் அவர் தன்னிடம் கேள்வி கேட்டவரிடம் பதில் சொல்வதன் மூலமாக, “இடுக்கமான வாயில் வழியாக நுழைய வருந்தி முயலுங்கள்” என்கிறார். இதன்மூலம் அவர் கடவுளின் வார்த்தையைக் கேட்டு, அதன்படி நடப்போர் விண்ணகத்திற்குள் நுழைவர் (மத் 7:21) என்கிறார்.
மீட்புப் பெறுவோர் சிலரா? பலரா?
மீட்புப் பெறுவதற்கு என்ன செய்ய வேண்டும் என்பதற்கு விளக்கம் அளித்த இயேசு, தொடர்ந்து யாரெல்லாம் மீட்புப் பெறுவர் என்ற கேள்விக்கு விளக்கம் அளிக்கின்றார். “கிழக்கிலும் மேற்கிலும் வடக்கிலும் தெற்கிலிமிருந்து மக்கள் வந்து பந்தியில் அமர்வார்கள்” என்று இன்றைய நற்செய்தியின் இறுதியில் இயேசு சொல்லக்கூடிய வார்த்தைகளும், “பிற இனத்தார், பிற மொழியினர் அனைவரையும் நாம் கூட்டிச் சேர்க்க வருவேன்” என்று இன்றைய முதல் வாசகத்தில் ஆண்டவர் சொல்லக்கூடிய வார்த்தைகளும் எல்லாரும் மீட்புப் பெறுவர் என்ற கருத்தினை வலியுறுத்திக் கூறுகின்றன.
யூதர்களைப் பொறுத்தவரையில், தங்களுக்கு மட்டுமே மீட்பு உண்டு, பாவிகளுக்கோ, வரிதண்டுவோருக்கோ, பிறவினத்தாருக்கோ மீட்பு இல்லை என்ற எண்ணமானது இருந்தது. அதன் வெளிப்படுத்தான், “மீட்புப் பெறுவோர் சிலர் மட்டும்தானா?” என்ற கேள்வி. யூதர்கள் நடுவில் இத்தகையதோர் எண்ணம் இருந்தாலும், கடவுளின் விருப்பமெல்லாம், எல்லாரும் மீட்படைய வேண்டும் என்பதுதான். இது குறித்துப் பவுல் திமொத்தேயுக்கு எழுதிய முதல் திருமுகத்தில், “எல்லா மனிதரும் மீட்புப் பெறவும் உண்மையை அறிந்துணரவும் வேண்டுமென அவர் விரும்புகிறார்” (1 திமொ 2:4) என்று கூறுவார். இவ்வாறு கடவுள் எல்லா மனிதரும் மீட்புப் பெற விரும்புகிறார் என்பதைக் கொண்டு, அவர் எத்துணை பேரன்பு மிக்கவர் என்பதை நாம் புரிந்துகொள்ளலாம்.
துன்பங்களைத் தாங்கிக்கொள்ளுங்கள்:
மீட்புப் பெறுவதற்கு இடுக்கமான வாயில் வழியாக நுழைய வருந்தி முயல வேண்டும் என்றாலும், எல்லாராலும் அது முடிவதில்லை. யூதர்கள் கடவுளின் கட்டளையைக் கடைப்பிடித்திருந்தால் அல்லது இடுக்கமான வாயில் வழியாக நுழைய வருந்தி முயன்றிந்திருந்தால், அவர்கள் எதிரிகளால் நாடுகடத்தப்பட வேண்டிய சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டிருக்க மாட்டார்கள். ஆனால், அவர்கள் பிற தெய்வங்களை வழிபட்டு, அழிவுக்குச் செல்லும் வாயில் வழியாக நுழைந்தார்கள். ஆகவேதான் கடவுள் அவர்களைப் அசீரியர்கள் வழியாக (பாபிலோனியர்கள் வழியாகக்) கண்டித்துத் திருத்தினார். அசீரிய நாடு என்பது தன்னுடைய மக்களுக்குத் தண்டனை வழங்கி, அல்லது அவர்களைக் கண்டித்துத் திருத்த கடவுள் ஏந்திய தடியே (எசா 10:5).
இந்தப் பின்னணியில் இன்றைய இரண்டாம் வாசகத்திற்கு வருவோம். எபிரேயருக்கு எழுதப்பட்ட திருமுகத்திலிருந்து எடுக்கப்பட்ட இன்றைய இரண்டாம் வாசகத்தில் அதன் ஆசிரியர், “ஆண்டவர் உன்னைக் கண்டித்துத் திருத்துவதை வேண்டாம் எனத் தள்ளிவிடாதே. திருத்தப்படுவதற்காகத் துன்பங்களைத் தாங்கிக்கொள்ளுங்கள்… அப்போது அமைதியையும் நேர்மையான வாழ்வையும் பயனாகப் பெறுவீர்கள்” என்கிறார். கடவுள் தண்டித்துத் திருத்துவது துயரத்திற்குரியதாக இருக்கலாம். ஆனால், அதுவே இடுக்கமான வாயில் வழியாக நுழைவதற்கும், மீட்பினைப் பெறுவதற்கும் வழிவகுக்கும்.
எனவே, ஆண்டவர் நம்மைக் கண்டித்துத் திருத்துவதை விருப்பத்தோடு ஏற்றுக்கொள்வோம்; இடுக்கமான வாயில் வழியே நுழைய வருந்தி முயல்வோம். இறைவன் தரும் மீட்பினைப் பெறுவோம்.
சிந்தனைக்கு:
‘நான் உங்களுக்கு அறிவித்த நற்செய்தியை நீங்கள் உறுதியாகப் பற்றிக் கொண்டிருந்தால் அதன்வழியாக மீட்பு அடைவீர்கள்’ (1 கொரி 15:2) என்பார் புனித பவுல். எனவே, நற்செய்தியை உறுதியாய்ப் பற்றிக் கொண்டு, அதன்படி வாழ்வோம். அதன்வழியாக மீட்பையும் இறையருளையும் நிறைவாகப் பெறுவோம்.
Source: New feed