I எசேக்கியேல் 18: 25-28
II பிலிப்பியர் 2: 1-11
III மத்தேயு 21: 28-32
சொல்லிலும் செயலிலும் வல்லவர்களாவோம்
நிகழ்வு
பிரான்ஸ் நாட்டில் பெரிய நிலக்கிழார் ஒருவர் இருந்தார். இவருக்கு ஜான், டேவிட் என்று இரண்டு மகன்கள் இருந்தார்கள். இவர் தனது இறப்பு நெருங்கி வருவதை உணர்ந்து, தனக்குச் சொந்தமான, செழிப்பான நிலத்தைத் தன் இரண்டு மகன்களுக்கும் சரி சமமாகப் பிரித்துக் கொடுக்க நினைத்தார். ஒருநாள் இவர் தான் நினைத்ததுபோன்று செய்துவிட்டு, இறையடி சேர்ந்தார்.
தந்தையின் இறப்புக்குப் பிறகு, எதையும் ஆராய்ந்து பார்க்கும் மனம்கொண்ட மூத்தவன் ஜான், தந்தை தன்னிடத்தில் விட்டுச்சென்ற நிலத்தை எப்படி இன்னும் செழிப்பானதாக மாற்றுவது என்பது குறித்துத் தீவிரமாக ஆராயத் தொடங்கினான். முதலில் பருவ காலத்தை ஆராய்ந்து பார்த்தான். பின்னர் ஒரு விதையை நட்டால் அதிலிருந்து எப்படிப் பல இலட்சம் விதைகளைப் பெறுவது என்பதைக் குறித்து ஆராய்ந்தான். இப்படி அவன் பொழுதுக்கும் ஆராய்ந்துகொண்டிருந்தானே ஒழிய, நிலத்தில் இறங்கி விதையை நடவும் இல்லை; எந்தவொரு வேலையும் செய்யவில்லை. இதனால் அவனுடைய நிலம் தரிசுநிலமானது.
இளையவன் டேவிட்டோ தன் அண்ணனைப் போன்று எதையும் ஆராய்ந்து பார்க்கும் மனம்கொண்டவன் கிடையாது; ஆனால் அவன் கடின உழைப்பாளி. அதனால் அவன் தன் தந்தை தன்னிடத்தில் கொடுத்த நிலத்தில் விதை விதைத்து, உரமிட்டு, தக்க காலத்தில் தண்ணீர் பாய்ச்சி அதை நன்றாகப் பராமரித்து வந்தான். இதனால் அவனுடைய நிலம் மிகுந்த பலனைக் கொடுத்தது. எந்தளவுக்கு என்றால், தன்னுடைய அண்ணன் ஜானின் குடும்பத்திற்கு உதவும் அளவுக்கு, அவனுடைய நிலம் மிகுந்த விளைச்சலைக் கொடுத்தது.
இதைப் பார்த்து பெரிதும் வியப்படைந்த மூத்தவன் ஜான், தன் தம்பி டேவிட்டிடம், “தம்பி! என்னுடைய நிலம் தரிசுநிலமாக இருக்கின்றபொழுது, உன்னுடைய நிலம் மட்டும் எப்படி மிகுந்த விளைச்சலைத் தரும் நிலமாக இருக்கின்றது?” என்றான். “காரணம் மிக எளிது. நீ எப்பொழுதும் ஆராய்ந்துபார்த்துக்கொண்டு மட்டும் இருக்கின்றாய். நானோ செயலில் இறங்குகின்றேன். அதனால்தான் என்னுடைய நிலம் மிகுந்த பலனைக் கொடுக்கின்றது” என்றான் இளையவன் டேவிட்.
ஆம், இந்த நிகழ்வில் வருகின்ற மூத்தவன் ஜானைப் போன்றுதான் பலரும் எந்தவொரு செயலிலும் இறங்காமல், வாய்ச்சொல் வீரர்களாக இருக்கின்றார்கள். இத்தகைய சூழ்நிலையில், பொதுக்காலம் இருபத்து ஆறாம் ஞாயிறான இன்று நாம் வாசிக்கக்கேட்ட இறைவார்த்தை, நாம் சொல்லிலும் செயலிலும் வல்லவர்களாக இருக்கவேண்டும் என்ற செய்தியைத் தருகின்றது. அதைக் குறித்து இப்பொழுது நாம் சிந்தித்துப் பார்ப்போம்.
சொல்வார்கள்; செயலில் காட்ட மாட்டார்கள்
இன்றைய இறைவார்த்தை, மூன்றுவிதமான மனிதர்களை நமக்கு அடையாளப்படுத்துகின்றது. ஒன்று, சொல்லிவிட்டுச் செயலில் காட்டாதவர்கள். இரண்டு, சொல்லில் காட்டாமல், செயலில் காட்டுபவர்கள். மூன்று, சொல்லிலும் செயலிலும் வல்லவர்களாக இருப்பவர்கள். இந்த மூன்றுவிதமான மனிதர்களில் நாம் யாராக இருக்கின்றோம் என்று பார்ப்போம்.
நற்செய்தியில் இயேசு, இரு புதல்வர்களின் உவமையைச் சொல்கின்றார். இந்த உவமையில் வருகின்ற இளைய மகன், தன் தந்தையிடம், “நான் திராட்சைத் தோட்டத்திற்குப் போகிறேன்” என்று சொல்லிவிட்டுப் போகாமல் இருக்கின்றார். இப்படிச் போகிறேன் என்று சொல்லிவிட்டு, போகாமல் இருக்கின்ற அல்லது செயலில் காட்டாத இளைய மகன், யூத மதத் தலைவர்களை நமக்குக் குறித்துக்காட்டுபவனாக இருக்கின்றான். ஏனெனில், அவர்கள்தான் சொல்லி, அதைச் செயலில் காட்டாதவர்களாக இருந்தார்கள் (மத் 23:3). இப்படி ஒன்றைச் சொல்லிவிட்டு அதை நாம் செய்யாமல் இருப்பது, நம்முடைய நம்பகத் தன்மையைக் கேள்விக் குள்ளாக்குவதாக இருக்கின்றது. யூத மதத் தலைவர்களிடம் இருந்த இத்தகைய போக்கை, ஒருவேளை நம்மிடமும் இருந்தால், அதை நம்மிடமிருந்து தவிர்ப்பது நல்லது.
சொல்லில் காட்டமாட்டார்கள்; செயலில் காட்டுவார்கள்
இன்றைய இறைவார்த்தை நமக்குக் குறித்துக் காட்டும் இரண்டாவது விதமான மனிதர்கள், சொல்லில் காட்டாமல், செயலில் காட்டுபவர்கள். இன்றைய நற்செய்தியில் வருகின்ற மூத்த மகன், தன் தந்தையிடம், “நான் திராட்சைத் தோட்டத்திற்குப் போகமாட்டேன்” என்று சொல்லிவிட்டு, பின்னர் தன்னுடைய முடிவை மாற்றிக்கொண்டு, திராட்சைத் தோட்டத்திற்குப் போகிறார். இப்படிப் போகமாட்டேன் என்று சொல்லிவிட்டுப் பின்னர் தன்னுடைய முடிவை மாற்றிக்கொண்டு திராட்சைத் தோட்டத்திற்குப் போகின்ற மூத்த மகன், வரிதண்டுபவர்களையும் பாவிகளையும் குறிப்பவராக இருக்கின்றார்.
இந்த வரிதண்டுபவர்களும் பாவிகளும் தொடக்கத்தில் கடவுளின் வார்த்தையின்படி நடக்காவிட்டாலும், பின்னர் தங்களுடைய தவற்றை உணர்ந்து மனம்மாறி, கடவுளின் வார்த்தையைக் கேட்டு, அதன்படி நடந்து, கடவுளின் வார்த்தையைச் செயலில் காட்டக்கூடியவர்களாக இருந்தார்கள். இது குறித்து இன்றைய முதல் வாசகத்தில் இறைவாக்கினர் எசேக்கியேல் இவ்வாறு கூறுகின்றார். “பொல்லார் தாம் செய்த பொல்லாப்பினின்று விலகி, நீதியையும் நேர்மையையும் கடைப்பிடித்தால், தம் உயிரைக் காத்துக் கொள்வர்.”
ஆம், வரிதண்டுபவர்களும் பாவிகளும் ஒருகாலத்தில் கடவுளின் வார்த்தையைக் கேட்டு நடக்காவிட்டாலும், பின்னர் தங்களுடைய தவற்றை உணர்ந்து, கடவுளின் கட்டளையைக் கடைப்பிடித்து, சொல்லில் காட்டாமல், செயலில் காட்டுபவர்களானார்கள். இவ்வாறு அவர்கள் தங்களுடைய உயிரைக் காத்துக் கொண்டார்கள். பல நேரங்களில் நாமும்கூட கடவுளின் கட்டளையைக் கடைப்பிடிக்காமல், அவரை விட்டு விலகி இருக்கலாம். இத்தகைய சூழலில் நாம் கடவுளின் கட்டளையைக் கடைப்பிடித்தால் அல்லது கடவுளின் கட்டளையை நமது செயலில் வெளிப்படுத்தினால், வாழ்வோம் என்பது உறுதி.
சொல்லி, அதைச் செயலிலும் காட்டுபவர்கள்
இன்றைய இறைவார்த்தை குறித்துக் காட்டும் மூன்றாவது விதமான மனிதர், சொல்லி அதைச் செயலில் காட்டுபவர். இதை வேறுவிதமாகச் சொல்லவேண்டும் என்றால், சொல்லிலும் செயலிலும் வல்லவராக இருப்பவர் என்று சொல்லலாம்.
இப்படிச் சொல்லிலும் செயலிலும் வல்லவராக இருப்பவர் யாராக இருக்கும் என்று நமக்குக் கேள்வி எழலாம். அவர் வேறு யாருமல்லர்; நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துதான். ஆம், இயேசு கிறிஸ்து மக்களிடம் அன்பையும் இரக்கத்தையும் மன்னிப்பையும் தாழ்ச்சியையும், இறைத் திருவுளத்தை நிறைவேற்றி வாழவேண்டும் என்பதையும் சொன்னார். அவர் சொன்னது போன்றே செயலில் காட்டினார். அதற்குச் சான்றாக இருப்பதுதான் இன்றைய இரண்டாம் வாசத்தின் இரண்டாவது பகுதி (பிலி 2: 6-11). “கடவுள் வடிவில் விளங்கிய அவர்” என்று தொடங்கி, “இயேசு கிறிஸ்து ஆண்டவர் என எல்லா எல்லா நாவுமே அறிக்கையிடும்” என்று முடியும் வார்த்தைகள், இயேசு சொல்லிலும் செயலிலும் வல்லவராக இருந்தார் என்பதற்குச் சான்றாக இருக்கின்றன.
எம்மாவு நோக்கிச் செல்லும் சீடர்கள்கூட இயேசுவைப் பற்றிச் சொல்கின்றபொழுது, “அவர் சொல்லிலும் செயலிலும் வல்ல இறைவாக்கினராகத் திகழ்ந்தார்” (லூக் 24: 19) என்றே சொல்கின்றார்கள். ஆகையால், நாம் யூத சமயத் தலைவர்களைப் போன்று சொல்வீரர்களாக இல்லாமல், வரிதண்டுபவர்களைப் போன்று செயல்வீரர்களாக மட்டும் இல்லாமல், இயேசுவைப் போன்று, சொல்லிலும் செயலிலும் வல்லவர்களாக இருந்து, இயேசுவுக்குச் சான்று பகர்ந்து வாழ்வோம்.
சிந்தனை
‘ஆயிரம் வெற்று வார்த்தைகளைவிட ஓர் உன்னதமான செயல் மேன்மையானது’ என்பார் வெ. இறையன்பு என்ற எழுத்தாளர். எனவே, நாம் சொல்வீரர்களாக மட்டுமல்லாமல், செயல்வீரர்களாகவும் இருப்போம்; இயேசுவின் எடுத்துக்காட்டான வாழ்க்கையைப் பின்பற்றி, அவர் வழியில் நடப்போம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்
Source: New feed