இயேசுவைப் போன்று அன்புகூர்தல் என்பது, பணிபுரிதல் மற்றும், நம் வாழ்வைக் கையளிப்பதாகும் என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஆகஸ்ட் 19, இவ்வெள்ளியன்று தன் டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்ட குறுஞ்செய்தியில் கூறியுள்ளார்.
பணிபுரிதல் என்பது, மற்றவரின் நலனுக்கு முன்னுரிமை கொடுப்பது, புறக்கணிப்பு எனும் புற்றுநோய்க்கு எதிராகச் செயல்படுவது, மற்றும், கடவுள் நமக்கு அளித்துள்ள கொடைகளைப் பகிர்ந்துகொள்வதாகும் என்று கூறியுள்ள திருத்தந்தை, நம் வாழ்வைக் கையளித்தல் என்பதற்கும் தன் டுவிட்டர் செய்தியில் விளக்கமளித்துள்ளார்.
நம் வாழ்வைக் கையளித்தல் என்பது, தன்னலத்தைப் புறந்தள்ளுதல், நம் வாழ்வை ஒரு கொடையாக அமைத்தல், மற்றும், தேவையில் இருக்கும் எல்லாருக்கும் உதவுவதாகும் என்றும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறியுள்ளார்.
உலக மனிதாபிமான நாள்
ஆகஸ்ட் 19, இவ்வெள்ளியன்று கடைப்பிடிக்கப்பட்ட உலக மனிதாபிமான நாளும், தொண்டுபுரியவும், மற்றுவருக்காக நம் வாழ்வை அர்ப்பணிக்கவும், ஆபத்துக்களை எதிர்கொள்ளும் மக்களின் வாழ்வைக் காப்பாற்றும் மனிதாபிமானப் பணியாளர்களை நன்றியோடு நினைக்கவும் அழைப்புவிடுக்கின்றது.
10 ஆண்டுகளுக்குமுன், ஆகஸ்ட் 19ம் தேதி பாக்தாத்தில் ஐ.நா.வின் 22 மனிதாபிமானப் பணியாளர்கள் கொல்லப்பட்டனர். அத்தேதியையே உலக மனிதாபிமான நாளாக ஐ.நா. குறித்துள்ளது. மேலும், உலக அளவில் கடந்த ஆண்டில் 141 மனிதாபிமானப் பணியாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது
Source: New feed