ஜூன் 24 இப்புதனன்று, புனித திருமுழுக்கு யோவானின் பிறந்தநாள் சிறப்பிக்கப்பட்டதையொட்டி, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இப்புதனன்று வழங்கிய மறைக்கல்வி உரையின் இறுதியில், இப்புனிதரைக் குறித்து, ஒரு சில கருத்துக்களைப் பகிர்ந்துகொண்டார்.
புனித திருமுழுக்கு யோவானின் பிறந்தநாளை சிறப்பிக்கும் வேளையில், நற்செய்தியை எடுத்துரைக்கும் துணிவை, இப்புனிதரிடமிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டும் என்றும், நம்மிடையே உள்ள வேற்றுமைகளின் நடுவே, ஒருங்கிணைப்பையும், நட்பையும் வளர்ப்பதன் வழியே, நம் நற்செய்தி அறிவிப்பு, இன்னும் நம்பத்தகுந்ததாக மாறும் என்றும், திருத்தந்தை எடுத்துரைத்தார்.
மேலும், இத்திருநாளையொட்டி திருத்தந்தை வெளியிட்ட டுவிட்டர் செய்தியில், “வயதில் முதிர்ந்த பெற்றோரிடமிருந்து திருமுழுக்கு யோவான் பிறந்தது, கடவுள், மனித அறிவையும், சக்தியையும் கடந்தவர் என்பதைச் சொல்லித்தருகிறது. இறைவனின் மறையுண்மைக்கு முன், பணிவுடன் அமைதி காக்கவும், அவரை நம்பவும் நாம் கற்றுக்கொள்ளவேண்டும்” என்ற சொற்கள் பதிவாகியிருந்தன
Source: New feed