சிலுவையைத் தூக்கிக்கொண்டு செல்வது என்பது, இயேசுவின் எடுத்துக்காட்டை பின்பற்றி, கடவுளுக்கும், அயலவருக்கும் பணியாற்றுவதில் வாழ்வைச் செலவழிப்பதாகும் என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஆகஸ்ட் 30, இஞ்ஞாயிறு, மூவேளை செப உரையில் கூறினார்.
இஞ்ஞாயிறு நண்பகலில், வத்திக்கான் தூய பேதுரு வளாகத்தில் கூடியிருந்த மக்களுக்கு, இஞ்ஞாயிறு நற்செய்தி வாசகத்தை (மத்.16:21-28) மையப்படுத்தி உரையாற்றிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இயேசுவின் உண்மையான சீடர்களாக மாறுவது எவ்வாறு என்பது குறித்து எடுத்துரைத்தார்.
இயேசு, தம் பாடுகள், மரணம், மற்றும், உயிர்ப்புப் பேருண்மை குறித்து சீடர்களிடம் பேசியபோது, அவர்கள் அவற்றை புரிந்துகொள்ளாத நிலையில் இருந்தனர், ஏனென்றால், அவர்களின் நம்பிக்கை, பக்குவம் அடையாமல் இருந்ததால், அவர்கள், உலகின் மனநிலையோடு தங்களை மிக நெருக்கமாக பிணைத்துக்கொண்டிருந்தனர் எனவும் திருத்தந்தை கூறினார்.
பேதுருவுக்கும், மற்ற சீடர்களுக்கும், நமக்கும்கூட, சிலுவை, தடைக்கல்லாக உள்ளது, ஆனால், அவ்வாறு அது நோக்கப்படுவதை, சிலுவையிலிருந்து தப்பித்துச்செல்லும், அதாவது, இறைத்தந்தையின் திட்டத்தைத் தவிர்த்துச்செல்லும் சோதனையாக இயேசு கருதினார் என்றுரைத்த திருத்தந்தை, இதனாலேயே இயேசு, பேதுருவிடம், “என் கண்முன் நில்லாதே சாத்தானே என்று கடிந்துகொண்டார் என்று கூறினார்.
இயேசுவின் உண்மையான சீடர்களாக மாறுவது
இவ்வாறு பேதுருவைக் கடிந்துகொண்ட இயேசு, உடனடியாக, தம் சீடரைப் பார்த்து, “என்னைப் பின்பற்ற விரும்பும் எவரும், தன்னலம் துறந்து, தம் சிலுவையைத் தூக்கிக்கொண்டு என்னைப் பின்பற்றட்டும் என்று நற்செய்தியில் வாசிக்கிறோம், இந்த கூற்றில் இயேசு, உண்மையான சீடர்களின் பாதையைச் சுட்டிக்காட்டினார் என்று, திருத்தந்தை கூறினார்.
இயேசுவின் உண்மையான சீடர்களுக்கு இருக்கவேண்டிய, தன்மறுப்பு மற்றும், சிலுவையை ஏற்பது ஆகிய இரு மனநிலைகள் பற்றி விளக்கிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தன்மறுப்பு என்பது, உண்மையான மனமாற்றம் எனவும், சிலுவையைத் ஏற்பது, ஒவ்வொரு நாளைய கொடுந்துன்பங்களை, பொறுமையோடு தாங்கிக்கொள்ளுதல் மட்டுமல்ல மாறாக, அவற்றை நம்பிக்கையோடும், கடமையுணர்வோடும் ஏற்றுக்கொள்வதுமாகும் என்று கூறினார்.
சிலுவையைத் தூக்கிச்செல்லுதல் என்பது, தீமைக்கு எதிரான போராட்டத்தில் மேற்கொள்ளப்படும் கடும் முயற்சி, மற்றும், துன்பத்தின் ஓர் அங்கம் என்ற உணர்வில், ஒவ்வொரு நாளைய இன்னல்களை பொறுப்புணர்வுடன் ஏற்றுக்கொள்வதாகும் என்று, திருத்தந்தை விளக்கினார்.
Source: New feed