ஆண்டின் தொடக்க நாளான இன்றைய முதல் வாசகத்தில் கூறப்பட்டுள்ள சொற்கள் வழியாக இறைவன் நம் ஒவ்வொருவரையும் தனிப்பட்ட முறையில் ஆசிர்வதிக்கின்றார். தாயாம் திருச்சபையும் கடவுளின் பெயரால் இதே ஆசி மொழிகளால் நம்மை வாயார, மனதார ஆசிர்வதிக்கின்றது. நானும் இன்றைய திருப்பலியின் முதன்மை குரு என்ற வகையில் உங்களை ஒவ்வொருவரையும் உளமார ஆசிர்வதிக்கின்றேன்.
“ஆண்டவர் உனக்கு ஆசி வழங்கி உன்னைக் காப்பாராக!
ஆண்டவர் தம் திருமுகத்தை உன்மேல் ஒளிரச்செய்து உன்மீது அருள் பொழிவாராக!
ஆண்டவர் தம் திருமுகத்தை உன் பக்கம் திருப்பி உனக்கு அமைதி அருள்வாராக!”
இறைவன்தாமே மோசே வழியாக ஆரோனுக்கும் அவரது வழித் தோன்றல்களுக்கும் தலைவர்கள் மக்களை எவ்வாறு ஆசிர்வதிக்க வேண்டுமென்று கற்பிக்கின்றார். நமதாண்டவர் நாம் எவ்வாறு தந்தையை நோக்கிச் செபிக்க வேண்டுமென்று கற்பித்தது போல, தந்தையாம் கடவுள் ஆசி வழங்கும் பாங்கினை முதல் வாசகத்தில் கற்பிக்கின்றார்.
எபிரேய மொழியில் மூன்று தொடர்களாக, 15 சொற்களாக இந்த ஆசி மொழி அமைந்துள்ளது. தமிழாக்கத்தில் சொற்கள் கூடுதலாக அமைந்துள்ளன. ஒவ்வொரு ஆசிரும், ‘ஆண்டவர்’ என்றே தொடங்குகின்றது. சற்று ஆழ்ந்து நோக்கினால், முதல் ஆண்டவர், தந்தையையும், இரண்டாம் ஆண்டவர், தூய ஆவியானவரையும், மூன்றாவது ஆண்டவர் இயேசுவையும் குறித்து நிற்பது தெளிவாக விளங்கும். அஃதாவது, தந்தை, ஆவி, மகன் என்ற மூவொரு பொருளான கடவுள்தாமே நம்மை ஆசிர்வதிப்பதாக இந்த ஆசிர் அமைந்துள்ளது.
“ஆண்டவர் உனக்கு ஆசி வழங்கி உன்னைக் காப்பாராக” என்பது முதல் தொடர். ஆசி வழங்குவதும், காப்பதும் தந்தைக்கு உரியவை. படைப்பது, காப்பது, படைத்தவற்றைத் தமது ஆசிரால் நிரப்புவது ஆகியன தந்தைக்குரியனவாக இருப்பதை விவிலியம் நமக்கு உணர்த்துகின்றது.
“விண்ணையும் மண்ணையும் உருவாக்கியவர் அவரே” என்று திருப்பாடல் 115இலும், “தொடக்கத்தில் கடவுள் விண்ணுலகையும் மண்ணுலகையும் படைத்த பொழுது…” என்று தொடக்க நூலின் முதல் வசனத்திலும் கூறப்பட்டுள்ளவை தந்தையாம் கடவுளின் செயல்களாகும்.
“உமது கண்ணின் மணியென என்னைக் காத்தருளும்; உம்முடைய சிறகுகளின் நிழலில் என்னை மூடிக்கொள்ளும். ஆண்டவரே, மாயும் மனிதரிடமிருந்து, இவ்வுலகமே தங்கள் கதியென வாழ்ந்து மாயும் மனிதரிடமிருந்து, உமது கைவலிமையினால் என்னைக் காப்பாற்றும்” (திருப்பாடல் 17: 8,14.)
என்ற விவிலிய வசனங்கள் கடவுளாம் தந்தையின் காப்பாற்றும் செயலுக்குச் சான்று பகிர்கின்றன.
“ஆண்டவர் நம்மை நினைவு கூர்ந்துள்ளார்; நமக்குத் தம் ஆசியை அளிப்பார். இஸ்ரயேல் குடும்பத்தாருக்கு ஆசி வழங்குவார்; ஆரோனின் குடும்பத்தாருக்கு ஆசி வழங்குவார்; தமக்கு அஞ்சி நடப்போர்க்கு ஆண்டவர் ஆசி வழங்குவார்; சிறியோர்க்கும் பெரியோர்க்கும் ஆசி வழங்குவார்”(திருப்பாடல் 115:12,13) என்று திருப்பாடல் ஆசிரியர் தந்தையின் ஆசி வழங்கும் இயல்பு குறித்து எழுதிச் செல்கின்றார்.
அடுத்து,
“ஆண்டவர் தம் திருமுகத்தை உன்மேல் ஒளிரச் செய்து உன்மீது அருள் பொழிவாராக”என்று கூறப்பட்டுள்ள இரண்டாம் தொடர், தூய ஆவியாருக்கு உரியதாகும். நெருப்பும், ஒளியும், நிழலும், மேகமும், மழையும், அருளும், தூய ஆவியாரின் அடையாளங்கள்.
கடவுளுக்கு உருவம் இல்லை ஆதலால் அவருக்கு முகமும் இல்லை. ஒளியே அவரது திருமுகத்தின் அடையாளமாக உள்ளது. எரியும் நெருப்பு ஒளியின் பிறப்பிடமாக உள்ளது. ஒரேப் மலையில் கடவுள் மோசேயுடன் எரியும் நெருப்பிலிருந்து பேசுகின்றார். எரியும் முட்செடி கருகவில்லை. ஆற்றல் அளிப்பதும், அழிப்பதும், வெளிச்சம் தருவதும் நெருப்பின் பண்புகள். ஆனால், தூய ஆவியார் அழிக்கின்ற நெருப்பல்லர். பெந்தகோஸ்தே நாளில் மரியா மீதும், சீடர்கள் மீதும் நெருப்பு போன்ற பிளவுண்ட நாவுகள் வடிவில் அவர் இறங்கி வருவதைக் காண்கின்றோம். கபிரியேல் வானதூதர் மரியாவுக்கு, “அருள்மிகப் பெற்றவரே வாழ்க” என்று வாழ்த்திய தொடரை, “தூய ஆவியாரால் மிகவும் நிரம்பப் பெற்றவரே வாழ்க” என்றும் மொழி பெயர்க்கலாம்.
ஏனெனில் தூய ஆவியாரின் வடிவங்களுள் முதன்மையானது அருள். ஏசேயா, இதனை,
“ஆண்டவராகிய என் தலைவரின் ஆவி என்மேல் உளது; ஏனெனில், அவர் எனக்கு அருள் பொழிவு செய்துள்ளார்; ஒடுக்கப்பட்டோருக்கு நற்செய்தியை அறிவிக்கவும், உள்ளம் உடைந்தோரைக் குணப்படுத்தவும், சிறைபட்டோருக்கு விடுதலையைப் பறைசாற்றவும், கட்டுண்டோருக்கு விடிவைத் தெரிவிக்கவும் என்னை அனுப்பியுள்ளார்” (எசாயா 61. 1,2) என்ற திருவசனத்தில் பதிவு செய்கின்றார்.
மூன்றாவதாக,
“ஆண்டவர் தம் திருமுகத்தை உன்பக்கம் திருப்பி, உனக்கு அமைதி அருள்வாராக.”
என்ற தொடர் மைந்தனாம் இயேசுவைக் குறிக்கின்றது. அன்பு, மீட்பு, அமைதி ஆகிய மூன்றும் மைந்தனின் அடையாளங்கள்.
அன்பினால் மீட்பும், மீட்பினால் அமைதியும் உண்டாகின்றன.
“கிறிஸ்து நமக்காகத் தம் உயிரைக் கொடுத்தார். இதனால் அன்பு இன்னதென்று அறிந்து கொண்டோம்.” (1யோவா. 3:16) என்று யோவான் இயேசுவுக்கும் அன்புக்குமுள்ள தொடர்பை வெளிப்படுத்துகின்றார்.
“அவருக்கு இயேசு எனப் பெயரிடுவீர். ஏனெனில் அவர் தம் மக்களை அவர்களது பாவங்களிலிருந்து மீட்பார்”(மத். 1:21) என்ற விவிலியத் திருவசனம், இயேசுக் கிறிஸ்துவுக்கும் மீட்புக்கும் உள்ள தொடர்பை வெளிப்படுத்துகின்றது. அமைதி இல்லாத மனித நெஞ்சங்களில் அமைதியை ஏற்படுத்துவது இயேசுவின் செயல்களாக இருக்கின்றது. உலகின் வேறு எவராலும் தர முடியாத இதய அமைதி அவரால் மட்டுமே ஏற்படுகின்றது. அதனால்தான் அவர் பிறந்தபோது வானதூதர்கள், “உலகில் அவருக்கு உகந்தோருக்கு அமைதி உரித்தாகுக” என்று பாடினர், (லூக். 2:14). இயேசுவின் வருகையைக் குறித்து இறைவாக்குரைத்த செக்கரியா,
“இதோ உன் அரசர் உன்னிடம் வருகின்றார்… கழுதையின் மேல், கழுதைக் குட்டியின் மேல் ஏறி வருகின்றார். வேற்றினத்தாருக்கு அவர் அமைதியை அறிவிப்பார்” (செக். 9.9-10) என்று முன் மொழிந்துள்ளார். கழுதை என்பது அமைதியின் சின்னம். இயேசு யெருசலேமுக்குள் கழுதையின் மேல் ஏறி நுழைந்தபோது மக்கள் கூட்டம்,
“ஆண்டவர் பெயரால் அரசராக வருபவர் போற்றப் பெறுக! விண்ணகத்தில் அமைதியும் மாட்சியும் உண்டாகுக” (லூக். 19:38) என்று முழங்கிற்று. செக்கரியா கூறிய இறைவாக்கு நிறைவேறிற்று.
தந்தை மைந்தர் தூய ஆவியானவராகிய மூவொரு பரம்பொருளின் திருப்பெயரால் ஆசி வழங்குமாறு கடவுள் மோசேவுக்குக் கடவுள் கட்டளை இட்டுள்ளார் என்று இதன் மூலம் நாம் புரிந்து கொள்கிறோம்.
இன்றைய இரண்டாம் வாசகம் மிகவும் புரட்சிகரமானது. தூய பவுலடியார் கலாத்தியருக்கு எழுதியுள்ள தூய மடலின் வாசகமிது. இயேசுவை நமது கடவுளாக ஏற்றுக்கொண்ட நாம் அனைவரும் தந்தையாம் கடவுளின் பிள்ளைகளாகும் உரிமைப் பேறு பெற்றுள்ளோம் என்ற நற்செய்தியினை நமக்கு அவர் நினைவூட்டுகிறார். சட்டம் நிபுணர் குழுவால் இயற்றப்படுகிறது. அரசர் அதற்கு ஒப்புதல் அளிக்கிறார். சட்டம் குடிகளுக்கே அல்லாமல் அரசரையும் அவரது பிள்ளைகளையும் அது கட்டுப்படுத்தாது. யூத அரசியல் தலைவர்கள், இயேசுவிடம் வந்து குடிவரி கேட்டபோது இக்கருத்தினை அவர் பேதுருவுக்கு நினைவூட்டுகிறார். ஆயினும் தாழ்ச்சியோடு குடிவரி செலுத்துவதற்கு ஒப்புக்கொண்டு மீன் வயிற்றிலிருந்த நாணயத்தைக் கொண்டு தமக்காகவும் சீடர்களுக்காகவும் வரி செலுத்துமாறு அவர் பேதுருவைப் பணிக்கின்றார். அடிமைகளாக இருந்த நிலையில் யூதர்களின் சட்டத்திற்கும், இவ்வுலக அரசுகளின் சட்ட திட்டங்களுக்கும் கீழ்ப்படிந்திருந்தவர்கள் எல்லாரும் விண்ணகக் கடவுளின் பிள்ளைகளாகும் உரிமைப்பேறு பெற்றபின், சட்டங்களின் அடிமைத் தளைகளிலிருந்து விடுதலையாக்கப்பட்டவர்கள் ஆகிறார்கள் என்று பவுலடியார் கூறுகிறார். என்னை மீட்பராக ஏற்றுக்கொண்டவர்கள் எல்லாரும் என் சகோதரர் ஆவதால் என் தந்தையாம் கடவுள் உங்களுக்கும் தந்தையாகிறார். ஆதலால் அவரை நீங்கள் விண்ணிலுள்ள எங்கள் தந்தையே என்று பிள்ளைகளுக்குரிய உரிமையோடு அழைத்துச் செபிக்கலாம்” என்று இயேசு கற்பித்தார். இதனைப் பரிசுத்த ஆவியாரால் புரிந்து கொண்ட பவுலடியார் கடவுளை நாம் எல்லாரும் அப்பா, தந்தாய் என்று அழைக்கும் உரிமைப் பேறு பெற்றுள்ளோம் என்றும், நாம் குரலெடுத்துக் கடவுளைத் தந்தாய்! அப்பா! என்று அழைக்கும்போது தூய ஆவியால் நிரப்பப்படுகிறோம் ஆதலின், நமது குரல் வழியாகத் தூய ஆவியாளர் தாமே நம்மோடு சேர்ந்து அப்பா தந்தாய் என்று அழைக்கிறார் என்றும் பவுலடியார் விளக்கம் தருகிறார். இனி நாம் அடிமைகள் அல்லர் என்றும் வானக அரசின் தலைவராகிய உன்னதக் கடவுளின் பிள்ளைகள், உரிமைக் குடிமக்கள் என்று அவர் நமக்குத் தெளிவுபடுத்துகிறார்.
தம்மை மீட்பராக ஏற்றுக்கொண்டு சான்று பகரும் சீடர்கள் எல்லாரும் இவ்வுலகைச் சார்ந்தவர்கள் அல்லர் என்று தந்தையிடம் இயேசு, யோவான் நற்செய்தியில் பரிந்து பேசுவது இதோடு ஒப்பிடத்தக்கது. (யோவான் 15: 17:14)
பவுலடியாரின் திருமுகத்தின் மற்றுமொரு புரட்சிக் கருத்து, இயேசுவின் பிறப்பால் பெண்களின் இழிநிலை ஒழிந்து, அவர்கள் கடவுளின் தாய் என்ற தகுதியைப் பெற்றுள்ளார்கள் என்பதாகும். காலம் நிறைவுற்றபோது கடவுள் தம் மகனை இவ்வுலகிற்குப் பெண்ணிடம் பிறந்தவராக அனுப்பினார் என்ற பவுலடியார் பதிவு செய்வது கவனிக்கத்தக்கது.
இதிலென்ன சிறப்பு இருக்கிறது? மனிதர் எல்லாருமே பெண்ணிடம் தானே பிறக்கிறார்கள்? ஆண் வயிற்றில் யாரும் பிறப்பதில்லையே? என்று நமக்குத் தோன்றலாம். நாம் எல்லாரும் பெண்ணிடம் பிறந்தாலும் பெண்ணுக்கு மட்டுமே பிறந்தவர்கள் அல்லர். ஆணின் விந்துக்குப் பிறக்கின்றோம் என்பதால் ஆணிடமும் பிறந்தவர்களாகக் கருதப்படுகிறோம். அதனால்தான் நமது பெயருக்கு முன்னால் தந்தையின் பெயரைச் சுருக்கி ஓர் எழுத்தாகக் குறிப்பிடுகின்றோம்.
யூதர்களும் அரேபியரும் தந்தை வழிச் சமூகத்தினர். அதனால் தான் இயேசுவின் தலைமுறை அட்டவணையில் தந்தையரின் பட்டியல் தரப்படுகின்றது. ஆனால் இயேசுவுக்கு மாத்திரம் தந்தை இல்லை. அவர் மரியா என்ற பெண்ணிடம் பிறந்தவர். திருக்குரானில் நூற்றுக்கும் மேற்பட்ட இடத்தில் இயேசு பெறுகிறார். அந்த இடங்களில் எல்லாம் மரியாவின் மகனாகிய இயேசு என்றுதான் குறிப்பிடப்படுகிறார். வேறு எந்தப் பெண்ணின் பெயரும் இடம்பெறாத திருக்குரானில் மரியாவின் பெயர் மட்டுமே நூற்றுக்கும் மேற்பட்ட இடங்களில் இயேசுவின் பெயரோடு சேர்ந்து பதிவாகியுள்ளது. ஆதியில் கடவுள் பாம்பைப் பார்த்து, “உனக்கும் பெண்ணுக்கும் உன் வித்துக்கும் அவள் வித்துக்கும் பகையை உண்டாக்குவோம்” என்று கூறியபோதே, இயேசு பெண்ணிடம் மட்டுமே பிறந்தவராக, அந்தப் பெண்ணின் வித்தாக மட்டும் வருவார் என்பது முன் குறிக்கப்பட்டது. கற்களிலினின்றும் ஆபிரகாமுக்கு வழிமரபை ஏற்படுத்த வல்லவர் கடவுள் என்று இயேசு குறிப்பிட்டது போல, ஆண்கள் இல்லாமல் பெண்ணின் வழியாகவும் மனுக்குலத்தின் வழிமரபை கடவுள் ஏற்படுத்த முடியும் என்பது இயேசுவின் பிறப்பால் உறுதியானது.
ஒவ்வொரு யூதனும் காலையில் எழுந்து கடவுளைத் துதிக்கும்போது, “கடவுளே! என்னை நீர் ஒரு பெண்ணாகப் படைக்காமல் ஓர் ஆணாகப் படைத்தமைக்காக நன்றி” என்று கூறுவானாம். பெண்கள் காலங்காலமாக இவ்வாறு இழிவுபடுத்தப்பட்ட நிலைமை, இயேசு பெண்ணிடம் பிறந்தவராகத் தோன்றியதால் ஒழிந்தது.
கடவுளின் தாய் என்று ஒரு பெண்தான் பெருமைப்படுத்தப்படுகிறார். கடவுளின் தந்தை என்று ஒருகாலும், எந்த ஓர் ஆணும் பெருமைப்படமுடியாது. ‘ங’ போல் வளை என்றார் ஒளவையார். ங கர வரிசையில் ங என்ற ஒரே உயிர்மெய் எழுத்து மட்டுமே பயன்படுகிறது. ஆயினும் ங கர வரிசையிலுள்ள மற்ற பதினோர் உயிர் மெய் எழுத்துகளும் காப்பாற்றப்படுகின்றன. மரியா என்ற ஒரு பெண், கடவுளின் தாயானதால் உலகின் ஒட்டு மொத்த தாய்க்குலமும் கடவுளின் தாய் என்ற தகுதியைப் பெறுகிறார்கள் என்று பெண்ணினம் பெருமைப்பட்டுக் கொள்ளலாம். உண்மையில் கடவுள் அனைத்தையும் தம்மிடமிருந்து பெற்றெடுப்பதால் அவர் பெண்ணாகத்தான் இருக்கிறார். அண்டையோனி என்று அவருக்குத் தமிழர் பெயரளித்துள்ளார்கள். யோனி என்பது கருவறை. கடவுள் கருவறையாக இருக்கிறார். இந்தியர் அவரைச் சக்தி என்ற பெண்ணாகத்தான் பார்க்கிறார்கள். ஆணாதிக்கச் சமுதாயம் உருவான பிறகே, சிவன் உள்ளே புகுத்தப்பட்டு முதன்மைப் பெறுகிறார். குஞ்சுகளைச் சிறகுக்குள் அரவணைப்பது தாய்ப் பறவை. இயேசு தம்மைத் தாய்ப் பறவைக்கு ஒப்பிடுவது ஒப்புநோக்கத்தக்கது. (மத்தேயு 23:37).
நற்செய்தியில் நாம் தெரிந்து கொள்ள வேண்டிய மற்றுமொரு முக்கியச் செய்தி இடையர்கள் மீட்பரை எவ்வாறு கண்டு கொண்டார்கள் என்பதுதான். இஸ்ராயேல் மக்கள் சற்று வித்தியாசமானவர்கள். அவர்கள் இயல்பாகவே இறையுணர்வு மிக்கவர்களாக வளர்க்கப்பட்டனர். தங்களை மீட்க மெசியா வருவார் என்று அவர்கள் அனைவருமே காத்துக் கிடந்தனர். அரசர் முதல் ஆண்டி வரை, மக்களை மேய்ப்பவர்கள் முதல் மாடுகளை மேய்ப்பவர் வரை, எல்லாருமே மெசியாவின் வருகைக்காகக் காத்திருந்தனர். அதனால்தான் வானதூதர் இடையர்களிடம், “பெரும் மகிழ்ச்சியூட்டும் செய்தியை உங்களுக்கு அறிவிக்கிறேன். இன்று ஆண்டவராகிய மெசியா என்னும் மீட்பர் உங்களுக்காகத் தாவீதின் ஊரில் பிறந்திருக்கிறார்” என்று கூறுகிறார்கள். மெசியாவின் பிறப்பை இடையர்கள் மிகவும் மகிழ்ச்சியூட்டும் செய்தியாக எடுத்துக்கொள்வார்கள் என்ற வான தூதர் அறிந்திருந்தார்கள்.
நீங்கள் ஆவலோடு எதிர்பார்த்திருந்த மெசியா “உங்கள் ஊரில் உங்களுக்காகப்” பிறந்துள்ளார் என்று வானதூதர் இடையர்களுக்குக் கூறுகிறார்கள். வானவர் உச்சரித்த ஒவ்வொரு சொல்லுக்கும் இடையர்களுக்கு அர்த்தம் புரிகின்றது. அவர்கள் பெத்லகேமை நோக்கி விரைந்து ஓடுகிறார்கள்.
நள்ளிரவான அந்த இருட்டு வேளையில், அவர்கள் எங்கே ஓடினார்கள்? எந்த வீட்டை நோக்கி ஓடினார்கள்? நிச்சயமாக வானதூதர் அவர்களை வழிநடத்தி இருப்பார்கள். கீழ்த்திசை ஞானிகளை விண்மீன் தோன்றி வழி நடத்தியது போல், அந்த இடையர்களை வானதூதரின் ஒளி, இயேசு பிறந்திருந்த தொழுவத்தை நோக்கி வழிநடத்தியிருக்கும்.
மாட்டுத் தொழுவத்தில் அவர்கள் எதைப் பார்த்தார்கள்? இளம் வயதுள்ள ஒரு தாய், பக்கத்தில் விளக்கு ஏந்தி நின்ற ஒரு தந்தை! சற்று உட்புறமாக மாட்டுத் தீவனத் தொட்டியில் ஒரு பச்சிளம் பாலன். இவ்வளவுதான் அவர்கள் பார்த்தவை. அந்தக் குழந்தை கண் மூடித் தூங்கியிருக்கலாம். பாலுக்காக அழுதபடி இருந்திருக்கலாம். அந்தப் புதிய சூழலைப் பொறுத்துக் கொள்ள முடியாமல் நெளிந்து அசைந்தபடி இருந்திருக்கலாம்.
இந்தக் குழந்தையா மெசியா? இது ஏன் ஊருக்கு ஒதுக்குப்புறமாக, மாட்டுத் தொழுவத்தில் தீவனத் தொட்டியில் பிறக்க வேண்டும்? பெற்றோரைப் பார்த்தால், அனாதைகள் போல், ஏழையராக உள்ளனர். கிட்டத்தட்ட இடையர்களாகிய நம்போல்தான் இவர்களும் இருக்கிறார்கள். இந்தக் குழந்தை எப்படி மெசியாவாக இருக்க முடியும். இது வெறும் பொய்! சுத்த அபத்தம்! யாரோ வான தூதர் போல் வேடம் போட்டு வந்து, தூங்கிக்கொண்டிருந்த நம் காதுகளில் பூச்சுற்றி விட்டுப் போயிருக்கிறார்கள். ஒருவேளை நம் மந்தைகளைத் திருட நம்மை இப்படித் திசை திருப்பி இருக்கலாம். ஓடுங்கள் நம் கிடையை நோக்கி என்று அவர்கள் ஏமாற்றத்தோடு திரும்பி ஓடவில்லை.
மாறாக, அவர்கள் ஏதோ ஒரு புத்தொளி, புத்துணர்ச்சி, புதுமை அந்தக் குழந்தையைப் பார்த்தவுடன் அவர்கள் உள்ளங்களை ஊடுருவி ஆட்கொண்டிருக்க வேண்டும். அந்தக் குழந்தை கண்ணில்பட்ட அந்தக் கணம் முதல் அவர்கள் தங்களின் பழைய மனநிலை முற்றிலும் மாறியிருக்க வேண்டும். அவர்களின் கவலை, சோர்வு, பகை, பசியுணர்வு, வருத்தம், நோய், நோக்காடு முதலிய அனைத்துத் தீமைகளும் முற்றாக விலகி, அவர்கள் புதுப் பிறப்பு அடைந்தவர்களாக மோட்சப் பரவசத்தில் மூழ்கியிருக்க வேண்டும். தூய ஆவி அவர்களை ஆட்கொண்டிருக்க வேண்டும். அதனால்தான் அவர்கள் ஓடிப்போய் மீட்பர் பிறந்துள்ள நற்செய்தி அக்கம் பக்கத்தவர்க்கெல்லாம் அறிவித்து மகிழ்கிறார்கள். இடையர்கள் சொன்னதைக் கேட்டவரும் வியப்படைகிறார்கள். இடையர்கள் கடவுளைப் போற்றிப் புகழ்ந்துகொண்டே மகிழ்ச்சியாக மிதந்து செல்கிறார்கள்.
Source: New feed